பதிவு செய்த நாள்
11
ஆக
2018
12:08
திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மன் கோயில்களில் ஆடிகடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேர்த்திக் கடனாக பக்தர்களுக்கு கூழ்காய்ச்சி வழங்கினர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டி அம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயில், பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோயில்ரோடு, திருச்சிரோடு தீப்பாச்சி அம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தனர். சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பெண் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று ஆடி அமாவாசையையொட்டி இக்கோாயில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழநி: ஆடிமாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு, பழநி அம்மன் கோயில்களில் சிறப்புபூஜை வழிபாடுகள் நடந்தது. ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் உச்சிக்காலத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பூக்கடை வியாபாரிகள் டிரஸ்ட் சார்பில், பிரித்திங்கா தேவி, சமயபுரம் மாரியம்மன் வடிவம் செய்து வழிபாடு நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மன், மகிசாசூரமர்த்தினியம்மன், நெய்க்காரப்பட்ட ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில்களில் கடைசி வெள்ளி நாளில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், பொங்கல், கூழ் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபட்டது. பெண்கள் நெய்தீபம், மாவிளக்கு ஏற்றி நேர்த்திகடன் செலுத்தினர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கூழ் வழங்குவது வழக்கம். மண்பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ் கலயங்களுடன், சிறப்பு அபிேஷகம் நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனி சவுடம்மன் கோயில், செக்கடி தெரு சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.