பதிவு செய்த நாள்
11
ஆக
2018
12:08
உடுமலை; உடுமலையில், ஆடி இறுதி வெள்ளியையொட்டி, கோவில்களில், பக்தர்கள் பரவசத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு மாதமாக, விழாக்கள் நடத்தியும், குலதெய்வ வழிபாடுகளை சிறப்பித்தும் கொண்டாடுகின்றனர். இம்மாத இறுதி வெள்ளிகிழமையையொட்டி, உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. மாரியம்மன் கோவிலில், காலை, 11:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. நேரு வீதி காமாட்சி அம்மன், தளி ரோடு காமாட்சி அம்மன் கோவில்களில், காலை, 7:00 மணி முதல், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தன.
தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன், சங்கிலி நாடார் வீதி பத்ரகாளியம்மன், குட்டைத்திடல் துர்க்கையம்மன், கல்பனா ரோடு காளியம்மன், சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், வண்ண வண்ண புடவை உடுத்தி, வெள்ளிக்கவசம், மலர் அலங்காரம் என சிறப்பு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள், விளக்கேற்றியும், தாலிக்கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல்கள் என மங்கலப்பொருட்களை வழங்கியும், கூழ், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை படைத்தும், வழிபட்டனர். ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகத்துடன், பக்தர்கள், விளக்கு பூஜை செய்தும் வழிபட்டனர். பத்ரகாளியம்மன் கோவிலிலும், பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.