சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் குன்றுவளர்ந்த பிடாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு மங்கைபாகர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஐந்து ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.