பதிவு செய்த நாள்
11
ஆக
2018
12:08
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நடந்த ஆடிப்பூர விழா ஐந்து கருடசேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு முகப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெரியாழ்வார் எழுந்தருளினார். தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாள், கருட வாகனங்களில் காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தருள, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஐந்து கருடசேவை நடந்தது. பின்னர் மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக எழுந்தருளிய சுவாமிகளை வழிநெடுக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலுக்கு சுவாமிகள் வந்தடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் அடித்தும், நடனமாடியும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர். மணவாளமாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன்,இணை ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.
சயனசேவை: ஆடிப்பூர விழாவின் ஏழாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவம் நடக்கிறது.