பதிவு செய்த நாள்
11
ஆக
2018
01:08
சாத்துார் : சாத்துார் அருகே தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக்கடைசி வெள்ளிப் பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இக்கோயிலில் தை, ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி கடைசி வெள்ளியான நேற்று திருவிழா நடந்தது. இதற்கான கொடியேற்றம் கடந்த 3ல் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்புஅபிேஷகம், தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி ரிஷப வாகனத்தில் நகர் வலம் வருதல் நேற்று மதியம் 2:00 மணிக்கு நடந்தது. ரிஷபவாகனத்தில் வீற்றிருந்த அம்மன் இருக்கன்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நத்தத்துபட்டி கிராமத்தினர் அம்மனை பவனி வரச்செய்தனர்.
இருக்கன்குடி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமத்தினர் சென்டா, விருது, குடைமேளம், சேவித்தும், அப்பனேரி கிராமத்தினர் நகரா ஒலி எழுப்பியும் சிறப்பித்தனர். கன்னியாகுமரி,திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். முடிகாணிக்கை , பொங்கல் , ஆடுகிடா வெட்டி , அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை எடுத்து வழிபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.