பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
திருச்சி: காவரி, கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அம்மாமண்டபம் படித்துறை மூடப்பட்டு, இறந்தவர்களுக்கான சடங்குகள் சாலையோரங்களில் செய்யப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து, 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முக்கொம்பு மேலணைக்கு, 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால் முக்கொம்பிலிருந்து காவிரியில், 54 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில், 1.44 லட்சம் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை மூழ்கியது. இதனால் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கான சடங்குகளை அம்மா மண்டபத்தில் செய்வதற்காக, நேற்று காலை வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள், அம்மாமண்டபம் சாலையோரத்தில் அமர்ந்து சடங்குகளை நிறைவேற்றினர். அதேபோல் கல்லணை செல்லும் வழியில் உள்ள கிளிக்கூடு, திருச்சி உறையூர் பகுதியில் உள்ள லிங்கம் நகரில் வெள்ள நீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். ஆனால், மாவட்ட நிர்வாகத்தினர் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதால், இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.