காரியாபட்டி:காரியாபட்டி அருகே அல்லாளப்பேரியில் பூங்கொடி பொற்கொடி சமேத மாணிக்கவாசகர் அய்யனார் கோயில் பிரசித்தி பெற்றது. இதற்கு அக்கிராமத்தினர் கூறிய சம்பவம் வியக்கும்படியாக உள்ளது. மோர் விற்க சென்ற பெண், கல் இடறி கீழே விழுந்ததில் பானை உடைந்து மோர் கொட்டியது. இந்த கல்லை அப்புறப்படுத்த கிராமத்தினர் ஒன்றுகூடினர். கூர்மையான கம்பி முனை பட்டவுடன் கல்லிருந்து ரத்தம் வெளியேறியது. அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் பள்ளம் தோண்டி பார்த்த போது அது கல் இல்லை, அய்யனார் சிலை என்பது தெரிந்தது. அக்கிராமத்தினர் குடிசையில் வைத்து வழிபட்டு வந்தனர்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அரசபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகரிடம், ராமநாதபுரம் திருப்புல்லாணிக்கு சென்று குதிரை வாங்கி வர உத்தரவிட்டு அதற்குரிய பணமுடிப்பை கொடுத்துள்ளார். வரும் வழியில் அல்லாளப்பேரியில் அய்யனார் கோயிலில் தங்கிய மாணிக்கவாசகர், திருவாசகம் பாடினார். மாணிக்கவாசகர் கொண்டு வந்த பணமுடிப்புகாணாமல் போனதால் மன்னருக்கு என்ன பதில் சொல்வது என சிவனிடம் வேண்டினார். அவருடைய வேண்டுதலை ஏற்று நரிகளை பரியாக்கி[ குதிரை] சிவனே கொண்டு வந்து கொடுத்த சம்பவமும் நடந்து உள்ளது என்கின்றனர் இப்பகுதியினர். இங்கு மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியதால் இக்கிராமம் செல்வ செழிப்போடு இருந்துள்ளது. இதையடுத்து அய்யனார் கோயிலில் தங்கி திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரை தெய்வமாக பாவித்து, மாணிக்கவாசகர் அய்யனார் கோயில் என மாற்றினர். தற்போது, மாணிக்கவாசகர் கோயில் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். குழந்தை பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து மீள , வேலை வேண்டி சுவாமி தரிசனம் செய்தால் கேட்ட வரத்தை அள்ளித்தருவதால் இக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு களரி விழாவை கிராமத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.