பதிவு செய்த நாள்
20
ஆக
2018
12:08
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில், பக்தர்களின் வருகை குறைந்து வருவதற்கு, அறநிலையத் துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என, ஆன்மிகவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பெரும் அதிர்ச்சி : கோவில் வளாகத்தில், மூன்று கொடிமரங்கள், 63 நாயன்மார்கள், தியாகராஜ சுவாமி, ஆதிபுரீஸ்வரர், முருகன், குழந்தையீஸ்வரர், திருவொற்றியீஸ்வரர், பைரவர், வடிவுடையம்மன் உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. நந்தவனம், சிலைகள் பாதுகாப்பகம், வசந்த மண்டபம், சுந்தரர் மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவையும் உள்ளன. கோவிலுக்குள், பிரம்ம தீர்த்த குளமும்; வெளியே, ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளன.கடந்த, 2015ல், 46 லட்சம் ரூபாய் செலவில், 41 அடியில் பிரமாண்ட தேர் செய்யப்பட்டு, நவம்பரில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களால், சன்னதி தெருவே குலுங்கியது.
ராஜகோபுரம் துவங்கி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வரை, பக்தர்கள் கூட்டம், நமச்சிவாயா, தியாகராஜா என்ற முழக்கங்களுடன், அலைமோதியது. அடுத்த இரு ஆண்டுகளில், மாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெற்ற தேரோட்டத்தில், வெள்ளோட்டத்தில் பங்கேற்ற அளவிற்கு கூட, பக்தர்கள் பங்கேற்க வில்லை. கடந்த பிப்ரவரியில் நடந்த தேரோட்டத்தில், 400க்கும் குறைவான பக்தர்களே பங்கேற்றனர். இது, ஆன்மிகவாதிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தண்ணீர் இல்லை : கடந்த, 2015ல் பெய்த கனமழையால், கோவில் வெளியில் உள்ள ஆதிஷேச தீர்த்த குளம், பாதி அளவில் நிரம்பியது.தொடர்ந்து, 2016ல், தெப்போற்சவம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு பின், நடைபெற்ற தெப்போற்சவம் என்பதால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2017ல், குளத்தில் தண்ணீர் இல்லாததால்,தெப்போற்சவம் நடைபெறவில்லை. இவ்வாண்டு, நிலை தெப்பல் உற்சவம் நடந்ததால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.சமீபத்தில் நடந்த, ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சியில், பெண் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 300க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். இது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வருகை குறைவு: பக்தர்களின் வருகை குறைந்துக் கொண்டே செல்வதற்கு, கோவில் நிர்வாகத்தின் நிலையற்ற தன்மையும், மெத்தனமும் காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது:கோவில் வளர்ச்சி பணிகளில், நிர்வாகம், அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆதிஷேச குளத்தில் தண்ணீர் தேங்க, களிமண் லேயர் கட்டமைக்கும் பணி, கிடப்பில் உள்ளது.சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் சுற்றுப்புறம் சுகாதாரமின்றி இருப்பது, பக்தர்களை முகம் சுழிக்க செய்கிறது.
கோவில் திருவிழாக்கள் குறித்து, பக்தர்கள் தெரிந்து கொள்ள, கோவில் நிர்வாகம், எந்தவொரு ஏற்பாடும் செய்ததாக தெரியவில்லை. தேரோட்டம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். கோவில் திருவிழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அதிகாரிகள் செயல்படுவதால் தான், பக்தர்கள் வருகை குறைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பான செயல்பாடு : தேருக்கான ஷெட் அமைத்தது; பக்தர்கள் தங்கும் அறை பயன்பாட்டிற்கு வந்தது; பல ஆண்டுகளாக பூட்டியே கிடந்த, வீரபத்திரர் கோவில் கதவுகள் திறப்பு; புதிய காலணி பாதுகாப்பகம் போன்ற பணிகள், உதவி ஆணையராக சித்ரா தேவி, பொறுப்பேற்ற பின், மேற்கொள்ளப்பட்டவை.இது பக்தர்களிடையே, சற்று மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சம்பிரதாயத்திற்காக மட்டுமே, இக்கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதும் தொடர்கிறது. புதிதாக பதவியேற்று உள்ள உதவி ஆணையர், இந்த குறைகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபாலன், 35, திருவொற்றியூர். -- நமது நிருபர் --