Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை 6. கடலாடு காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
03:01

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி  5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,  10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,  15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா  20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்  25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்  30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்  35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,  40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,  45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்  50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்  55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய  60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்  65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்  70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,  75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்  80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென  85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்  90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்  95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்  100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்  105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,  110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்  115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று  120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்  125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்  130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து  135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,  140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து  145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து  150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து  155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி  160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்  165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்  170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,  175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்  180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு  185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு  190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து  195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு  200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி  205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த  210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு  215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது  220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்  225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்  230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து  235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.  240

ஞாயிறு தோன்றுதல்

உரை

1-6 : அலைநீராடை ....... பரப்பி

(இதன்பொருள்) அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து - கடலாகிய ஆடையினையும் மலையாகிய முலையினையும் அந்த முலையினையுடைய மார்பின் மிசை; பேரியாற்று ஆரம் - காவிரி முதலிய பெரிய ஆறுகளாகிய முத்துமாலைகளையும்; மாரிக் கூந்தல் - முகிலாகிய கூந்தலையும்; அகல் கண் பரப்பின் - அகன்ற இடமாகிய அல்குற் பரப்பினையுமுடைய; மண்ணக மடந்தை -நிலவுலகமாகிய நங்கை; புதை இருள் படாஅம் போக நீக்கி - போர்த்துள்ள இருளாகிய போர்வையை எஞ்சாது அகலும்படி விலக்கி; உதய மால்வரை உச்சித் தோன்றி - உதயமால் வரையின் உச்சியிலே தோன்றி; உலகு விளக்கு அவிர் ஒளி பரப்பி - உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரினங்கட்கு நன்கு விளங்கித் தோன்றுதற்குக் காரணமாய் விளங்குகின்ற தனது ஒளியைப் பரப்பாநிற்ப என்க.

(விளக்கம்) 1. அலைநீர்: அன்மொழித்தொகை; கடல். முலையாகம் - முலையையுடைய மார்பகம். 2. பேரியாற்று ஆரம் என மாறுக. மாரி-முகில். 3. அகல்கண் பரப்பு என மாறி அகன்ற இடம் ஆகிய அல்குற் பரப்பினையும் எனப் பொருள் கூறுக. மடந்தையைப் புதைத்த இருட்படாம் என்க. படாஅம்-போர்வை. 4.5. ஞாயிறு தோன்று முன்னரே இருள் விலகிவிடுவதால் இருட்படாஅம் நீக்கி மால்வரை யுச்சித் தோன்றி என இருணீக்கத்தை முன்னும் ஞாயிற்றின் தோற்றத்தைப் பின்னுமாக ஓதினர். பரப்பி என்பதனைச் செயவெனெச்சமாக்கிப் பரப்ப என்க.

இனி அடியார்க்கு நல்லார் அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் 5-8. திசை முகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர்வார....... அரைசு கெடுத்து அலம்வரும் காலை எனவரும் அடிகளைநினைவுகூர்ந்து அந்நிகழ்ச்சியை இக்காதையோடு மாட்டெறிந்து உரை வகுத்தல் பொருந்தாது. என்னை? ஈண்டு அடிகளார் கூறுகின்ற நாள் அந்த நாளின் மறுநாள் அன்றாகலின் என்க.

மணிமலைப் பணைத்தோள் மாநிலமடந்தை அணிமுலைத் துயல் வரூஉம் ஆரம்போலச் செல்புனலுழந்த சேய்வரற் கான்யாற்று என வரும் சிறுபாண் (1-3.) அடிகள் ஈண்டு நினைவு கூரற்பாலன.

அடியார்க்குநல்லார் மலை பொதியிலும் இமயமும் இவற்றைச் சாதியொருமையாற் கூறினார் பொதியிலும் இமயமும் புணர் முலையாக என்றார் கதையினும் என்பர். மேலும் ஈண்டு ஞாயிற்றை விதந்தோதியது செம்பியன் மரபுயர்ச்சி கூறியவாறாயிற்று எனவும் விளக்குவர்.

புகார் நகரத்து மருவூர்ப்பாக்கம்

7-12 : வேயா மாடமும் ....... இலங்குநீர் வரைப்பும்

(இதன்பொருள்) வேயா மாடமும் - நிலா முற்றமும்; வியன்கல இருக்கையும் -மிக்க பேரணிகலன்கள் பெய்துவைத்த பண்ட சாலையும்; மான்கண் கால் அதர் மாளிகை இடங்களும் - மானின் கண்போலக் கோணம் செய்த சாளரங்களையுடைய மாளிகையையுடைய விடங்களும்; கயவாய் மருங்கின் காண்போர்த் தடுக்கும் பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் - துறைமுகப் பக்கங்களிலே தம்மைக் காண்போர் கண்களை மேற்போகவிடாமல் தடுக்கின்ற ஊதியங் கெடுதலறியாத மிலேச்சர் இருக்குமிடங்களும்; கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் - மரக்கலத்தால் ஈட்டும் செல்வப் பொருட்டால் தம் நாட்டை விட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகர் பலரும் ஒருங்கே கூடி நெருங்கியிருக்கின்ற விளங்குகின்ற அலைவாய்க் கரையிடத்துக் குடியிருப்புக்களும்; என்க.

(விளக்கம்) 7. வேயாமாடம் - தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன என்பர் அரும்பதவுரையாசிரியர். அவையாவன : தென்னையின் கீற்று பனைமடல் முதலியவற்றால் கூரை வேயப்படாத. சாந்து வாரப்பட்ட மேல்மாடங்களையுடையன என்றவாறு. (மாடிவீடுகள்) கலவிருக்கை - பண்டசாலை. 9. கயவாய்-துறைமுகம், புகார் என்பது மது. 10. பயன் - ஊதியம். யவனர் - யவனநாட்டினர்; மேலைநாட்டினர். இவரைச் சோனகர் என்பர் அரும்பதவுரையாசிரியர். 11. கலம்-மரக்கலம். புலம் - தாம் பிறந்த நாடு. புலம் பெயர்மாக்கள் என்றது, வேற்று நாட்டினின்றும் ஈண்டுவந்து பொருளீட்டற் கிருக்கின்ற வணிகரை. அவர் சாதி மதம் மொழி முதலியவற்றால் வேற்றுமை யுடையோராகவிருந்தும் ஒரு நாட்டுப் பிறந்தோர் போன்று ஒற்றுமையுடனிருத்தலின் 12. கலந்திருந்துறையும் என விதந்தார். 12. இலங்கும் நீர்வரைப்பு என்றது, கடற்கரையை.

இதுவுமது

13-15 : வண்ணமும் ........... நகரவீதியும்

(இதன்பொருள்) வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தமும்-தொய்யிற் குழம்பு முதலியவும், பூசுகின்ற சுண்ணமும் குளிர்ந்த நறுமணங் கமழுகின்ற சந்தனக் கலவையும்; பூவும் - பல்வேறு வகைப்பட்ட மலர்களும்; புகையும் - அகில் முதலிய நறுமணப் புகைக்கியன்ற பொருள்களும்; மேவிய விரையும் - தம்முட்பொருந்திய நறுமணப் பொருள்களும்; பகர்வனர் திரிதரு நகர வீதியும்-ஆகிய இன்னோரன்னவற்றைச் சுமந்துசென்று விற்கின்ற சிறுவணிகர் விலைகூறித் திரிகின்ற நகரத் தெருவும் என்க.

(விளக்கம்) 14: பூ-விடுபூவும், தொடைப்பூவும், கட்டுப் பூவும் என மூவகைப்படும். புகை - கூந்தற்குப் புகைக்கும் அகில் முதலியன; அவை அஞ்சனக்கட்டி யரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போரைந்து என்பனவாம். விரை - நறுமணப் பொருள்கள். அவை: கொட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம் ஒட்டிய ஐந்தும் எனப் பிங்கலந்தை கூறும். 15. பகர்வனர்-பகர்வோர், விலைகூறி விற்பவர். திரிதரும் என்றதனால் இவர்கள் இப்பொருள்களைச் சுமந்து கொடு திரிந்து விற்கும் சிறுவணிகர் என்பது பெற்றாம். நகரவீதி - இல்லறத்தோர் குடியிருக்கும் வீதி என்க.

(இதுவுமது)

16-21: பட்டினும் ......... நனந்தலை மறுகும்

(இதன்பொருள்) பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண் வினைக் காருகர் இருக்கையும் - பட்டு நூலானும் பல்வேறு மயிராலும் பருத்தி நூலானும் ஊசியால் பிணிக்கின்ற நுண்ணிய தொழில்களையுடைய பட்டுச் சாலியர் இருக்குமிடங்களும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையொடு - பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் குற்றமற்ற முத்தும் ஏனைய மணிகளும் பொன்னுமாகிய இவற்றைக்கொடு சமைக்கப்பட்ட அருங்கலமாகிய செல்வத்தோடே; அளந்து கடை அறியா-இவற்றையெல்லாம் அளந்து காணப்புகுவோர் ஓரெண்ணினும் எண்ணிக் கரைகாண வொண்ணாத; வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும் -வளம் இடந்தோறும் இடந்தோறும் குவிந்து கிடக்கின்ற இடமகன்ற மறுகுகளும்; என்க.

(விளக்கம்) 16. மயிர் - எலிமயிர் என்பர் அடியார்க்குநல்லார். 17. காருகர் - நெய்வோர்; அச்சுக்கட்டிகள் முதலாயினோருமாம். காருகர் இருவகைப்படுவர். ஆடை நெய்வோரும் அவற்றைச் சுமந்து விற்போரும் என, பருத்திநூல் அமைத்து, ஆடையாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில் (என்பது திவாகரம் 12 ஆவது) 18. தூசு-பட்டு. துகிர் பவளம். ஆரம் - சந்தனம். 19. மணி ஈண்டுக் கூறப்பட்ட பவளமும் முத்துமல்லாத ஏனைய மணிகள் ஏழுமாம். 20. அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலம். வெறுக்கை-செல்வம். அளந்து கடையறியா - அளந்து இவ்வளவென்று அறுதியிட்டுரைக்க வியலாத. ஈண்டுக் கூறப்படும் பொருள்கள் மறுகிற் குவித்து வைத்து விற்கப்படும், ஆதலால், நனந்தலை மறுகு எனல் வேண்டிற்று.

இதுவுமது

22-27: பால்வகை ............ இருக்கையும்

(இதன்பொருள்) பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு-பகுதி நன்கு வேறுபட்டுத் தோன்றுகின்ற முதிரை முதலிய பல்வேறு உணவுப் பொருள்களுடனே; கூலம் குவித்த கூலவீதியும்-எண்வகைக் கூலங்களையும் தனித்தனியே குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; காழியர் - பிட்டுவாணிகரும்; கூவியர் - அப்பவாணிகரும்; கள் நொடை யாட்டியர் - கள்ளை விற்கும் வலைச்சியரும்; மீன்வலைப் பரதவர் - மீன் வலையையுடைய பட்டினவரும்; வெள் உப்புப் பகருநர் - வெள்ளிய உப்பினை விற்கும் உமணரும் உமட்டியரும்; பாசவர் - இலையமுதிடுவாரும்; வாசவர் - ஐவகை மணப்பொருள் விற்போரும்; மைந்நிண விலைஞரொடு ஓசுநர் செறிந்த - ஆட்டு வாணிகருடனே பரவரும் செறிந்த; ஊன்மலி இருக்கையும் - ஊன்மிக்க இருப்பிடங்களும் என்க.

(விளக்கம்) 22. பால்-பகுதி. முதிரை - பருப்பு. 23. கூலம் எண்வகைப்படும். அவை நெல்லுப்புல்லு வரகுதினை சாமை இறுங்கு தோரையொடு கழைவளை நெல்லே யெனுமிவை. கூத்தநூலார் கூலம் பதினெண் வகைத்து என்பர்; கூலம் - பலசரக்கு என்பாரும், கருஞ்சரக்கு என்பாருமுளர்.

24. காழியர்-வண்ணாருமாம்; என்னை? காழியர் கௌவைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழிய எனவரும் அகநானூற்றுச் செய்யுளை நோக்குக; (செய்-89) காரகல் கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் என்பது. பெரும்பாணாற்றுப் படை (377-8) நொடைவிலை மீனொடுத்து நெற்குவைஇ என்பது புறம் (343.25.) பட்டினவர்-பட்டினத்துவாழ்வோர். உப்புப் பகருநர் - அளவருமாம். (அளத்தில் உப்புவிளைப்போர்). 26. பாசவர் - கயிறு திரித்து விற்பாருமாம்; பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்போருமாம் என்பர். வாசம் ஐந்து வகைப்படும் அவை: தக்கோலம் தீம்பூத் தகை சாலிலவங்கம் கப்பூரம் சாதியோடைந்து என்பன. முற்கூறப்பட்ட விரை என்பனவும் இவையும் வெவ்வேறாதல் உணர்க. 26 மை ஆடு. ஆட்டினை இறைச்சியின் பொருட்டு விற்போராகலின் மைந்நிணவிலைஞர் என்றார். 27. ஓசுநர்-எண்ணெய் வாணிகருமாம்.

இதுவுமது

28-34: கஞ்சகாரரும் ........ மாக்களும்

(இதன்பொருள்) கஞ்ச காரரும் - வெண்கலக் கன்னாரும்; செம்பு செய்குநரும்-செம்பு கொட்டிகளும்; மரங்கொல் தச்சரும்-மரம் வெட்டும் தச்சரும்; கருங்கைக் கொல்லரும்-வலிய கையை யுடைய கொல்லரும்; கண்ணுள் வினைஞரும் - ஓவியக் கலைஞரும்; பொன்செய் கொல்லரும் - உருக்குத் தட்டாரும்; நன்கலம் தருநரும் - மணியணிகலமியற்றும் தட்டாரும்; துன்னகாரரும்-சிப்பியரும்; தோலின் துன்னரும் - தோலினால் உறை முதலியன துன்னுவோரும்; கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப் பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும் - கிழிகிடை என்பவற்றால் மலர் வாடாமாலை பொய்க்கொண்டை பாவை முதலிய உருப்பிறக்கும் தொழில்கள் பலவற்றையும் பெருக்கிக் குற்றமற்ற கைத்தொழில் காரணமாக வேறுபட்ட இயல்புடையோரும்; என்க.

(விளக்கம்) 28. கஞ்சம்-வெண்கலம். செம்பு செய்வோர்க்குச் செம்பு கொட்டிகள் என்பது பெயர். 29. கொல்லுதல்-ஈண்டு வெட்டுதல். கருங்கை - வன்மையுடைய கை; கொடுந்தொழில் செய்யும் கையும் அப்பெயர் பெறும். என்னை? கொன்றுவாழ் தொழிலினும் வன்பணித்தொழினும் கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படும் என்பவாகலின் (திவாகரம்). ஈண்டு வன்பணியாளராகலின் கொல்லர்க்காயிற்று. 30. நோக்கினார் கண்ணிடத்தே தந்தொழிலை நிறுத்துவோராகலின், ஓவியத்தொழிலாளர் கண்ணுள் வினைஞர் எனப்பட்டார். சித்திரகாரி என்றும் கூறுப. எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்தநோக்கிற் கண்ணுள் வினைஞரும் என மதுரைக்காஞ்சி இவரைப் பெரிதும் விதந்தோ துதலறிக (516-518) மண்ணீடு - சிற்பம். 32. துன்னம்-தைத்தல் தோலினால் படைக்கலங்களுக்கு உறை துன்னுவோராகலின் தோலின் துன்னர் எனப்பட்டார். பறம்பர் முதலியோருமாம் 33. கிழி-துணி கிடை-கிடேச்சு; நெட்டி. கிழியால் படிமை (பதுமை) படம் முதலியவும் நெட்டியால் விலங்கு பறவை பூ பூங்கொத்து முதலியவும் அமைப்போர் கிழித்தொழிலாளரும் கிடைத்தொழிலாளரும் என்க. இதனால் பழைய காலத்தே நனிநாகரிகமிக்க இக் கைத்தொழில்கள் சிறந்திருந்தமை உணரப்படும். இந் நுண்டொழில்கள் பண்பால் ஒன்றாகித் தொழில் வகையால் பலவேறு வகைப்படுதலின் பால் கெழு மாக்கள் என்றார்.

இதுவுமது

35-39: குழிலினும்........மருவூர்ப்பாக்கமும்

(இதன்பொருள்) குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழு இன்று இசைத்து வழித்திறம் காட்டும் - குழல் முதலிய துளைக் கருவிகளானும் யாழ் முதலிய நரப்புக் கருவிகளானும் குரல் முதலாயுள்ள ஏழிசையினையும் நால்வேறு பண்களையும் அவற்றின் வழிப்பட்ட இருபத்தொரு திறங்களையும் குற்றமின்றி இசைத்துக் காட்டும்; பெறல் அரு மரபின் பெரும்பாண் இருக்கையும் - பெறுதற்கரிய இசைமரபை யறிந்த குழலோரும் பாணரும் முதலாகிய பெரிய இசைவாணர் இருக்குமிடங்களும்; சிறு குறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு - ஒழுக்கத்தில் சிறியராய்ப் பிறர்க்குக் குற்றவேல் செய்துண்ணும் எளிய தொழிலாளரோடே; மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் - குற்றமின்றித் திகழா நின்ற மருவூர்ப்பாக்கம் என்னும் பெயரையுடைய பகுதியும் என்க.

(விளக்கம்) 35. குழல் யாழ் என்பன இனஞ் செப்பி ஏனைய துளைக்கருவிகளையும் நரப்புக் கருவிகளையும் கொள்ளுமாறு நின்றன. குரல் முதலேழாவன - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. ஈண்டு அடிகளாரே குரன் முதலேழும் என் றோதுதலாலே அக்காலத்தே இளியே முதலிசையாக நின்ற தென்பார் கூற்றும் உழையே முதலாக நின்ற தென்பார் கூற்றும் போலியாதல் அறிக. 36. வழுவின்று என்புழி இன்றி என்னும் வினையெஞ்சிகரம் உகரமாயிற்று. வழித்திறம் - பண் வழிப்பட்டதிறம். இசையுணர்ச்சி பெறுதற்கரியதாகலின் அரும் பெறன் மரபு என்றார். பெரும்பாண்-பெரிய இசைவாணர். இனி ஈண்டு அடிகளார் யாழ் மட்டுமே கூறுதலின் யாழ் வேறு வீணை வேறு என்றும் யாழ் இறந்தது, வடவர் தந்த வீணையே இப்பொழுதிருப்பது என்று கூறுவோர் கூற்று மயக்கவுரையாதலறிக. 38. குற்றேவல் செய்துண்போரைச் சிறு குறுங் கைவினைப் பிறர்வினையாளர் என்று இகழ்ச்சி தோன்ற விதந்தார் 49. காவிரிப்பூம்பட்டினம் கீழ்ப்பகுதியும் மேற்குப் பகுதியுமாக இருபெரும் பகுதியை யுடையதாயிருந்தது. அவற்றுள் கீழ்பாலமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் மற்றொன்று பட்டினப்பாக்கம் என்றும் கூறப்படும். இதுகாறும் கூறியது மருவூர்ப்பாக்க வண்ணனை. இனி பட்டினப்பாக்கத்தினியல்பு கூறுகின்றார் என்றுணர்க.

பாடல் சால் சிறப்பின் பட்டினப்பாக்கம்

40-58: கோவியன் வீதியும்.......பட்டினப்பாக்கமும்

(இதன்பொருள்) கோ இயல் வீதியும் - அரசர்கள் வழங்குதற் கியன்ற அரசமறுகும்; கொடித் தேர் வீதியும் - கொடியுயர்த்த தேரோடுதற் கியன்ற மறுகும்; பீடிகைத் தெருவும் - கடைத் தெருவும்; பெருங்குடி வாணிகர் மாடமறுகும்-கொழுங்குடிச் செல்வராகிய வாணிகர் வாழ்கின்ற மாடமாளிகைகளையுடைய தெருவும்; மறையோர் இருக்கையும்-பார்ப்பனத் தெருவும்; வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பல்முறை இருக்கையும் - ஏனைய குடிகள் எல்லாம் விரும்புதற்குக் காரணமான உழவர் வாழ்கின்ற தெருவும் மருத்துவ நூலோர் வாழும் தெருவும் சோதிட நூலோர் வாழுந்தெருவும் என வேறுபாடு தெரிந்த பல்வேறு தொழின் முறையோரும் தனித்தனி வாழுகின்ற தெருக்களும்; திருமணி குயிற்றுநர் - முத்துக்கோப்பாரும்; சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் - தமக்குச் சிறந்த கோட்பாட்டோடு அழகிய சங்கறுப்போர் வாழும் அகன்ற பெரிய தெருவும்; சூதர் - நின்றேத்துவாரும்; மாகதர் - இருந்தேத்து வாரும்; வேதாளிகரொடு - வைதாளி யாடுவார் என்று சொல்லப்பட்ட இவர்களோடே; நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் பூவிலை மடந்தையர் - அரசனுக்கு நாழிகைக்குக் கவி சொல்லுவாரும்; தாம்கொண்ட கோலத்தானும் கூத்தானும் நலம் பெறுகின்ற சாந்திக் கூத்தரும், களத்திலாடும் கூத்திகளும் அகக் கூத்தாடும் பதியிலாரும் அற்றைப் பரிசங் கொள்ளும் பரத்தையரும்; ஏவற்சிலதியர்-மடைப்பள்ளியாரடியாரும்; பயில் தொழில் குயிலுவர்-இடையறாது பயிலுகின்ற தொழிலையுடைய தோற்கருவி இசைப்பாரும்; பல்முறைக் கருவியர் - படைக்கும் விழாவிற்கும் பிறவும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் பறை முதலியன கொட்டுவோரும்; நகை வேழம்பரொடு - நகைச்சுவைபடப் பேசும் நகைக் கூத்தரும் என்னும் இவர்கள் வாழுகின்ற; வகை தெரி இருக்கையும் - அவரவர் இனத்தின் வகை தெரிந்த இருப்பிடங்களும்; கடும்பரி கடவுநர் - கடிய குதிரைகளைச் செலுத்தும் அச்சுவவாரியரும்; களிற்றின் பாகரும் - யானைப் பாகரும்; நெடுந்தேர் ஊருநர்-நெடிய தேர்களை ஊருகின்ற தேர்ப்பாகரும்; கடுங்கண் மறவர் - சினக்கண்ணையுடைய காலாட்படைத் தலைவரும்; இருந்து புறஞ் சுற்றிய பெரும்பாய் இருக்கையும் - என்று கூறப்பட்ட நால்வேறு படை மறவரும்; அரண்மனையைச் குழவிருக்கும் பெரிய பரந்த இருப்பிடங்களும்; பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய - ஆகிய இவ்விடங்களிலெல்லாம் பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர்கள் நிரம்பியுள்ள; பாடல்சால் சிறப்பின் பட்டினப்பாக்கமும் - புலவர் பெருமக்களால் பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்னும் பகுதியும் என்க.

(விளக்கம்) 40. கோவியன் வீதி - அகன்ற அரச வீதியும் எனினுமாம். இதனைச் செண்டுவெளிப்புறத் தெரு என்பர் அரும்பதவுரையாசிரியர். 41. பெருங்குடி வாணிகர் மாடமறுகு என்றது, மாநாய்கனும் மாசாத்துவானும் முதலியோர் வாழும் தெருவினை. இத் தெரு அரசமறுகுக்கு அடுத்துக் கூறப்படுதலு மறிக. மறையோர்-அந்தணர். வீழ் குடி-விரும்பப்படும் குடி. அஃதாவது வேளாண்குடி என்க. வீழ் குடி - காணியாளர் என்பர் அடியார்க்குநல்லார். இவரியல்பினை, கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும், நல்லானொடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியம் பண்ணியம் அட்டியும் பசும் பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசை யுழவர் எனப் பட்டினப்பாலை (199-205) விதந்தோதும். இனி வீழ்குடி என்பது கொடு மேழி நசையுழவர் என்றவாறுமாம்.

46. திருமணி - முத்து. சங்கறுப்போர் வேள்வித்தொழில் மட்டும் ஒழிந்த பார்ப்பனர் என்பவாகலின் அந்தணர்க்குரிய ஏனைய சிறந்த கொள்கையெல்லாம் உடைய என்பார், சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் என்றார். வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த எனப் பிறரும் ஓதுதல் உணர்க. 48. வேதாளிக் கூத்தாடுவோர்.

49. நாழிகைக்கணக்கர் - இவரைக் கடிகையார் என்றும் கூறுப.

அவர் அவ்வாறு நாழிகை சொல்லுதலை,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரிதரும் கருவூரா - யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோய் ஒன்றுபோ யொன்று

எனவரும் பழைய வெண்பாவானுமுணர்க.

இவரை, நாழிகை வட்டி லீடுவாரும் என்பாருமுளர். சாந்திக் கூத்தாடுவோர் கண்ணுளர் எனப்படுவார். அவர் கொள்ளும் கோலத்தை,

வாசிகை வைத்து மணித்தோடணி யணிந்து
மூசிய சுண்ண முகத்தெழுதித் தேசுடனே
ஏந்துசுடர் வாள்பிடித்திட் டீசனுக்குங் காளிக்கும்
சாந்திக்கூத் தாடத் தகும்  (மதங்கும்)

எனவரும் வெண்பாவாலறிக.

50. காவற்கணிகையர் இராக்கடைப் பெண்டுகள் என்பாரும் உளர். 51. பூவிலை, இடக்கரடக்கு. அல்குல் விற்போர் என்றவாறு. அன்றன்று பரிசம் பெறுங்கணிகையர் என்பார் அற்றைப் பரிசங் கொள்வார் என்றார் (அடியார்க்) 51. ஏவற்சிலதியர் - பொதுவாகப் பணிமகளிர் எனினுமாம். 52. பன்முறைக்கருவியர்-குயிலுவராகிய தோற்கருவியாளரல்லாத நரப்புக் கருவி முதலிய பல்வேறு முறைமை யுடைய ஏனைய இசைக்கருவியாளர் எனினுமாம்.

53. நகைவேழம்பரை விதூடகர் என்ப. 56. பாயிருக்கை - பரந்த இடப்பிடம். 57-8: பீடுகெழுசிறப்பிற் பெரியோர் என்றது, அரசன் முதலிய நால்வேறு வகைப்பட்டவருள்ளும் இசைவாணர் முதலியோரினும் தொழிலாளருள்ளும் மிகவும் பெருமையுடையோராய் அரசனால் சிறப்புப் பெற்ற பெரியோர் என்றவாறு. இப்பெரியோர் மல்கியதனால் பாடல் சால் சிறப்பினையுடைய பட்டினம் என்க.

நாளங்காடி

59-67 : இருபெருவேந்தர் ........ பீடிகை

(இதன்பொருள்) இரு பெரு வேந்தர் முனை இடம்போல இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய சோலைமிடைமரம் - முடிமன்னர் இருவர் போர்மேல் வந்து தங்கிய பாசறையிருப்பிற்கு இடையிலமைந்த நிலம் போர்க்களம் ஆவது போன்று முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் என இறுகூறுபட்ட ஊர்களுக்கு இடையிலமைந்த நிலம் (அம்மாநகர்க்கு நாளங்காடியாயமைந்தது அவ்வங்காடி எத்தன்மைத் தெனின்) நிரல்படச் செறிந்த சோலையின் மரங்களையே தூண்களாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்; கொள்வோர் ஓதையும் கொடுப்போர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில் - பொருள்களை விலைக்கு வாங்குவோர் தம் ஆரவாரமும் விற்போருடைய ஆரவாரமும் இடையறாது நிலைபெற்ற அந்நாளங்காடியின்; கடைகெழு - வாயிலின் மருங்கமைந்த; சித்திரை சித்திரைத்திங்கள் சேர்ந்தென-பண்டொரு காலத்தே சித்திரை நாளிலே சித்திரைத் திங்களிலே நிறைமதி சேர்ந்ததாக அப்பொழுது; தேவர் கோமான் வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என - தேவர்கட்கு அரசனான இந்திரன் தன் நண்பனாகிய வெற்றி வேலேந்திய முசுகுந்தன் என்னும் சோழ மன்னனுக்கு வருகின்ற இடையூற்றை ஒழிக்கும் பொருட்டு; ஏவலின் - ஏவியதனாலே; போந்த - புகார் நகரத்திற்கு வந்த; காவல் பூதத்துப் பீடிகை - காவற்றொழிலையுடைய பூதத்தின் பலிபீடத்தின் மருங்கே; என்க.

(விளக்கம்) 59-63. அடிகளார் இருபெரு வேந்தர் ........ நாளங்காடி எனக் கூறுகின்ற இவ்விடம் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில் முரண்களரி என்று கூறப்பட்ட இடமாதல் வேண்டும். அவர் காலத்தே ஈண்டு அங்காடி இருந்திலது. அவர் இவ்விடத்தை, அந்நகரத்து இரு கூற்றினும் வாழும் மறவர்கள் கூடித் தம்முள் எதிர்த்து போராடி மகிழும் விளையாட்டரங்கமாக வண்ணித்துள்ளார்: இதனைப் பட்டினப்பாலை 59. தொடங்கி 74. போந்தை என்பதீறாகவுள்ள பகுதியையும் இதற்கு யாம் எழுதிய உரைகளையும் விளக்கங்களையும் ஓதியுணர்க. நாளடைவில் இவ்விடம் நாளங்காடியாகவும் போர் மறவர் பலிக்கொடைபுரியும் இடமாகவும் மாறியது என்று ஊகித்தல் மிகையன்று. நாள் அங்காடி - பகற்பொழுதில் வாணிகஞ் செய்யும் கடை. அல்லங்காடி என்பது முண்டாகலின் இங்ஙனம் கூறினர்.

இருபெரு வேந்தர் முனையிடம் போல ஓதையும் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி என இயையும். இடைநிலமாகிய நாளங்காடி எனவும் கடைகால் யாத்த நாளங்காடி எனவும் நிலைஇய நாளங்காடி எனவும் தனித்தனி கூட்டுக. 62. சோலைக்கடை மிடைமரம் கால்யாத்த அங்காடி என மாறிக் கூட்டுக. சோலைக்கடை என்புழிக் கடை ஏழாவதன் சொல்லுருபு.

64. சித்திரைமீனைச் சித்திரைத் திங்களில் நிறைமதி சேர்ந்ததாக என்றவாறு. எனவே, சித்திரை மாதத்துப் பூரணைநாள் என்பதாயிற்று. இந்நாளிலே இப்பூதத்தை இந்திரன் முசுகுந்தற்குத் துணையாக விடுத்தான் எனவும், அந்நாள் தொட்டு அப்பூதம் இந்நாளங்காடி வாயிலின் மருங்குள்ள பலிபீடத்திருந்து பலிகொள்வதாயிற்று எனவுமுணர்க. 65. வெற்றிவேல் மன்னன் முசுகுந்தன் என்பது பழைய வுரையிற் கண்டது. முசுகுந்தன் சோழ மன்னன் என்பர். உற்றதை-வந்துற்ற இடுக்கணை. ஐகாரம் சாரியை எனலுமாம். 17. பீடிகை-பீடம்; பலிபீடம் என்க.

மறக்குடி மகளிர் பூதத்தை வழிபடுதல்

68-75 : புழுக்கலுந்..........ஓதையிற்பெயர

(இதன்பொருள்) மூதில் பெண்டிர் - மறக்குடிமகளிர்; புழுக்கலும்-புழுக்கலையும்; பொங்கலும் பூவும் - கள்ளையும் பூவையும்; நோலையும் விழுக்கு உடை மடையும் - எட்கசிவினையும் நிணச் சோற்றையும்; சொரிந்து - பலியாக உகுத்து; புகையும் -நறுமணப் புகையையும் காட்டி; மாதர்க்கோலத்துத் துணங்கையர் குரவையர் - அழகிய கோலம் பூண்டு துணங்கைக் கூத்தாடுவாராயும் குரவைக் கூத்தாடுவாராயும்; பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் - பெரிய நிலத்தை ஆளுகின்ற எம் மன்னனாகிய கரிகால் வளவனுடைய பெரிய நிலத்தில் வாழ்கின்ற மன்னுயிர் முழுதிற்கும்; பசியும் பிணியும் பகையும் நீங்கி-பசியும் நோயும் பகைமையும் ஒருங்கே நீங்குமாறு; வசியும் வளனும் சுரக்க என - மழையும் வளங்களும் சுரந்தருள்க என்று கூறி; வாழ்த்தி - வாழத்தெடுத்து; அணங்கு எழுந்து ஆடி - தெய்வமேறப்பட்டு ஆடுதலாலே; வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர - நாணிலிகள்போன்று வாய் சோர்ந்துரைக்கின்ற கொக்கரிப்போடே செல்லா நிற்ப என்க.

(விளக்கம்) 68-75. பீடிகையிடத்தே. 75. மூதிற் பெண்டிர் புழுக்கல் முதலியவற்றைச் சொரிந்து புகைத்துக் கோலத்தோடே துணங்கையும் குரவையும் ஆடியவராய் மன்னன் நிலமடங்கலும் சுரக்கென வாழ்த்தித் தம்மேல், (70) அணங்கெழுந்தாடலாலே வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர என ஏற்ற பெற்றி கொண்டுகூட்டிப் பொருள் கூறுக.

இங்ஙனமன்றி மூதிற் பெண்டிர் வலவைபோல உரைத்தற்குக் காரணமின்மையான் பிறர்கூறும் உரைகள் போலியாதல் உணர்க. அணங்கெழுந்து ஆட வலவையினுரைக்கும் ஓதை என அணங்கெழுந்தாடலை வலவையினுரைத்தற்குக் காரணமாக்குக.

68. புழுக்கல் - அவித்த அவரை துவரை முதலிய பருப்பு வகைகள். நோலை - எட்கசிவு (எள்ளுருண்டை). விழுக்கு-நிணம். 69. பொங்கல் - பொங்கல் சோறுமாம். புகை என்பதற்கேற்பப் புகையும் காட்டி என்க. துணங்கை குரவை முதலிய கூத்துக்களினியல்பு அரங்கேற்று காதையிற் காண்க. 70. மாதர் - காதல், அணங்கு எழுந்து ஆட என ஏதுப் பொருட்டாக்குக. 71. பெருநில மன்னன் என்பது முடிமன்னன் என்பதுபட நின்றது. இருநிலம் - பெரிய நிலத்து வாழும் உயிர்கள். ஆகுபெயர். 72. நீங்கி என்பதனை நீங்க என்க. 73. வசி-மழை. 74. வலவை - நாணிலி. வல்லபம் என்பாருமுளர். 75. மூதிற் பெண்டிர் -மறக்குடி மகளிர். மூதிற் பெண்டிர் என அடிகளாரே கூறியிருப்பவும், அடியார்க்கு நல்லார் இவர் அகப்பரிசாரமகளிர் என்பது பொருந்தாமையுணர்க.

அவிப் பலியும் பெருமிதச் சுவையும்

76-88 : மருவூர் ......... வான்பலியூட்டி

(இதன்பொருள்) மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் - மருவூர்ப் பாக்கம் என்னும் பகுதியிலுள்ள மறப்பண்பினை மேற்கொண்ட வீரர்களும்; பட்டின மருங்கில் படைகெழு மாக்களும் - பட்டினப்பாக்கம் என்னும் பகுதியிலுள்ள படைக்கலன் ஏந்திய வீரர்களும்; முந்தச் சென்று - ஒரு சாரார்க்கு ஒரு சாரார் முற்பட ஊக்கத்தோடே சென்று; பீடிகை - நம் காவற்பூதத்துப் பலிபீடத் திடத்தே; வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என-வெவ்விய போர்த்திறம் பெற்ற நம் மன்னனாகிய கரிகால் வளவனுக்கு வரும் இடுக்கணைத் தீர்த்தருளுதற் பொருட்டு; முழுப் பலிக்கொடை புரிந்தோர் - பலிக்கொடைகளுள் வைத்து முழுக் கொடையாகிய அவிப்பலி புரிந்தவர்; வலிக்கு வரம்பு ஆக என-மறத்திற்கு மேல்எல்லையாகுவர் என்னும் கோட்பாட்டோடே; கல் உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் பல்வேல் பரப்பினர் - பண்டு போர் மேற்கொண்டு கல்லை உமிழ்கின்ற கவண் உடை யோரும் கரிய பரிசை ஏந்தியோரும், பலவாகிய வேற்படை ஏந்திய பரப்பினையுடையோருமாக; மெய் உறத்தீண்டி அமர்க்களப் பரப்பிலே உடற்கரித்து; ஆர்த்துக்களங் கொண்டோர் ஆரவாரித்துக் களத்தின்கண் வெற்றி கொண்ட காலத்தே; ஆர் அமர் அழுவத்துச் சூர்த்துக் கடை சிவந்த சுடுநோக்குக் கருந்தலை-அப்போர்க்களப்பரப்பிலே தம்மை நோக்கினாரை அச்சுறுத்துக் கடைசிவந்த சுடுகின்ற கொள்ளித் தீப்போலும் பார்வையுடைத்தாகிய தமது பசுந்தலையை; வெற்றிவேந்தன் கொற்றம் கொள்கென - வெற்றியையுடைய எம் வேந்தன் கொற்றம் கொள்க என்று வாழ்த்தும்படி அரிந்து; நல்பலி பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு - நன்மையுடைய அப் பலிபீடம் பேரழகு எய்தும்படி வைத்த அப்பொழுதே; உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி - அக் குறையுடல்கள் தமக்கு வாயின்மையின் தந்தந்தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோய் கொண்மின் என்று கூறி நின்று பலியூட்டா நிற்ப என்க.

(விளக்கம்) இப்பகுதிக்கு அடியார்க்குநல்லார் வகுத்த உரை உயர்வு நவிற்சியாய் மிகைபடத் தோன்றுகின்றது. என்னை? ஆர்த்துக்களங் கொண்ட வீரர் தங் கருந்தலையை அரிந்து பலிபீடத்தே வைப்ப அப்பொழுதே ஏனையோர் முரசமுழக்கி அவ்வான் பலியைப் பூதத்திற்கு ஊட்ட என்பதே அமைவதாகவும் தலைபேசும்படி அரிந்து ஒப்பித்துப் பலி பீடிகையிலே வைத்த அப்பொழுதே அக்குறை யுடல்கள் தமக்கு வாயின் மையின் ......... முரசின் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலியூட்ட வென்பர் அடியார்க்குநல்லார். இஃது அவர் கருத்தன்றென்பது தேற்றம். ஆயினும், தலையாய பெருமிதச் சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த இக்கருத்துக் கவிச்சக்கரவர்த்தியாகிய செயங்கொண்டார் கருத்தாகும் என்பதனைக் கற்றோர் யாவரும் நன்குணர்வர். மற்று அவ்வுரையாசிரியரே கலிங்கத்துப் பரணியிலமைந்த இக்கருத்தமைந்த செய்யுட்பகுதிகளை ஈண்டு எடுத்துக் காட்டியுமுள்ளார். ஆசிரியர் அடியார்க்குநல்லார் உரையும் விளக்கங்களும் மிகையேயாயினும் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குதலின் அவர் உரையைத் தழுவியே யாமும் வரைந்தாம். இனி வருவன அப் புலவர்பெருமான் தந்த விளக்கமும் எடுத்துக்காட்டுமாம். அவை வருமாறு :-

கழி - ஊன். பிணி - பிணித்தல். கறை - கறுப்பு. தோல் - பரிசை. மழையென மருளும் பஃறோல் (புறநா, 17-34) என்றாராகலின் கருங்கடகு என்பாருமுளர். மெய்யுறத் தீண்டி-உடற்கரித்து. அழுவம் - பரப்பு. சூர்த்து - அச்சமுறுத்து; என்றது:

நீண்டபழி பீடத்தி லறுத்து வைத்த
நெறிக்குஞ்சித் தலையைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ

(கலிங்க - கோயில்: 16) என்றார்போல் வரும்.

சுழன்றென்பாருமுளர். சுடுநோக்கு - சுடுவதுபோலும் நோக்கு. என்றது, கொள்ளிக்கண் கண்ணுட் டீயாற் சுட்டு நீறாக்கி என்றார் (சீவக-807) பிறரும். கருந்தலை - பசுந்தலை. நலங்கௌ வைத்தென்றது - தமது அரிந்த தலையிற் குலைந்த மயிரையும் கோதி முடித்துக் குருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்தென்றவாறு. என்னை?

மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்றுகுரு திப்புதுத்திலத
மம்மு கத்தினி லமைப்பரே

என்பது.

உருமு - இடி. மயிர்க்கண்முரசு - புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்சீவாமற் போர்த்த முரசு. என்னை ?

புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன் முரசத்தானைத் தோன்றலைத் தம்மினென்றாள்
நனைமலர் அலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்

எனவும்,

கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த
மயிர்க்கண் முரச மோவில கறங்க (மதுரைக், 742-3)

எனவும் சொன்னார் பிறரும். முரசொடு வான்பலியூட்டி - முரசத்தால் உயிர்ப்பலியூட்டி; என்றது,

அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ  (கலிங்க-கோயில்)

எனவும்,

மண்ணி னுளற வறுத்த தங்கடலை
வைத்த பீடிகை வலங்கொள
விண்ணி னாயகிதன் யாக சாலைதொறு
மீளவுஞ் சிலர் மிறைப்பரே

எனவும் வரும் (கலிங் - கோயில்). இவற்றாற் சொல்லியவை அவிப்பலியென்னும் புறப்பொருட் பகுதியும் (புறப் - வெண்- வாகை. 30). காப்பியத்துக்கு அங்கமான நவச்சுவையுள் வீரச்சுவை யவிநயமுமென்க எனவரும்.

கரிகாலன் வடதிசைச் செலவு

89-94 : இருநில மருங்கில் ............. அந்நாள்

(இதன்பொருள்) இருநில மருங்கில் - வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த பெரிய தமிழ்நாட்டின்கண்; பொருநரைப் பெறாஅ - எஞ்சிய பாண்டிய மன்னனும் சேரமன்னனும் தனக்குக் கேளிராய் ஒருமொழிக் குரிமையுடையராதல் பற்றித் தன்னோடு பொருவாரல்லராகலின் வேறு பகைவரைப் பெறமாட்டாமையாலே; திருமாவளவன் - திருமாவளவன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற கரிகான் மன்னன்; செரு வெம் காதலின் இம்மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் நண்ணார்ப் பெறுக என - தான் போரைப் பெரிதும் விரும்பும் விருப்பம் காரணமாகக் குணக்குங் குடக்கும் தெற்கும் கடலாக எஞ்சிய வடதிசையிடத்தே இந்நில வுலகத்தே; வலிமை பொருந்திய என்தோள் தகுந்த பகைவரைப் பெறுவதாக வேண்டும் எனக் கொற்றவையை மனத்தால் வணங்கி; புண்ணியத் திசைமுகம் - புண்ணியத் திசையென்று சான்றோர் புகழ்கின்ற அவ்வட திசையில் போர்மேற் செலவு குறித்து; வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து - தன் வாட் படையினையும் கொற்ற வெண்குடையையும் சீவாது போர்த்த போர் முரசத்தையும் நல்லதொரு நாளால் புறவீடு செய்து; போகிய அந்நாள் - சென்ற அந்த நாளிலே என்க.

(விளக்கம்) இருநிலம் என்றது வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த தமிழ்கூறும் நல்லுலகத்தை. இத்தமிழ் நிலத்து எஞ்சிய முடிவேந்தர் இருவரும் மொழியால் ஒரு குடியினராய்ப் பெண்கோடற்கும் கொடுத்தற்குமுரிய உறவினரும் ஆதலான் இவரொடு பொருதுகொள்ளும் வெற்றி தனக்குச் சிறந்ததொரு வெற்றியாகாமையின் பொரு நரைப்பெறா அன் ஆயினன் என்க. இருநில மருங்கின் என்பதற்கு, தமிழ் அகத்தே எஞ்சிய இரண்டு நிலத்தினும் எனினுமாம். இதற்கு முற்றும்மை பெய்துரைக்க. வாளும் நாளும் பெயர்த்தல் - வாள்நாட் கோள் குடைநாட் கோள் முரசுநாட் கோள் என்னும் போர்த்துறைகள். இவை வஞ்சித்திணையின் பாற்படும். இவற்றுள் வாள் நாட் கோடல், செற்றார்மேற் செலவமர்ந்து கொற்றவாணாட் கொண்டன்று (கொளு) எனவும், அறிந்தவ ராய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன் - எறிந்திலங் கொள்வாளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு, நண்பகலும் கூகை நகும் எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்றானும் உணர்க. குடைநாள்கோள் பெய்தாமம் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று எனவும் (கொளு). முன்னர், முரசிரங்க மூரிக் கடற்றாணை, துன்னரும் துப்பிற் றொழு தெழா - மன்னர், உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடை நாள் இறைவன் கொள, எனவும் (வரலாறு) முரசுநாட் கோள் : இதற்கு மாசற விசித்த....... ஈங்கிது செயலே எனவரும் புறநானூற்றுச் செய்யுளைக் காட்டுவர் அடியார்க்குநல்லார்.

94. வடதிசையைப் ... புண்ணியத்திசை என்பது பௌராணிகர் மதம்.

கரிகாலன் இமயப் பொருப்பில் புலியிலச்சினை பொறித்தது

95-98 : அசைவில்.........பெயர்வோற்கு

(இதன்பொருள்) அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய- ஒரு சிறிதும் மடிந்திராமைக்குக் காரணமான மனவெழுச்சியோடே மேலும் செல்லுதற்கியன்ற எனது வேணவா பின்னிட் டொழியும்படி; இப்பயம்கெழு மலை - பயன்மிக்க இம்மலை; பகை விலக்கியது என - எனக்குப் பகையாகிக் குறுக்கே நின்று விலக்கிற்று என்று சினந்து; இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை-தேவர்கள் வதிகின்ற அவ்விமய மலையினது பிடரின் கண் தன் வெற்றிக் கறிகுறியாக; கொடுவரி யொற்றி - தன திலச்சினையாகிய புலியுருவத்தைப் பொறித்து; கொள்கையில் பெயர்வோற்கு - தனது மேற்கோளாகிய மேற்செலவினின்றும் மீள்கின்ற அக்கரிகாற் பெருவளத்தானுக்கு என்க.

(விளக்கம்) 95. அரசற்கு இன்றியமையாப் பண்புகளுள் ஊக்கமுடைமை தலைசிறந்ததாகலின் கரிகாலனுடைய ஊக்கத்தை அசைவில் ஊக்கம் என விதந்தனர். நசை - வென்றியின்கண் நின்ற வேணவா. பிறக்கொழிதல் - பின்னிடுதல். பிறகு - பின்பு. இதனை பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவு என்பர். (அடியார்க்) தமிழ்ச் சொல்லென்று கொள்ளுதலே நேரிதாம். 96. பயம் - பயன். அஃதாவது பேரியாறுகளுக்குத் தாயாகி வளம் பெருக்குதல். 97. சிமையம்-குவடு; சிகரம். இமயமலைக் குவடுகளில் இமையவர் உறைகின்றனர் என்பது பௌராணிக மதம். இமயமலையின்கண்ணும் ஏறி அதன் சிமையங் கண்டு மீண்டான் என்பது தோன்ற சிமையப் பீடர்த்தலைஒற்றி என்றார். 98. கொடுவரி-புலி (இலச்சினை). கொள்கையில் பெயர்தல் - கொள்கையைக் கைவிட்டு மீள்தல்: ஈண்டுக் கொள்கை - மேற்செலவென்க. கரிகாலன் இமயத்தே புலிபொறித்த செய்தியை,

செண்டு கொண்டு கரிகாலனொரு காலிமையச் சிமைய மால்வரை திரித்தருளி மீள வதனை, பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்புலிப்பொறி குறித்தது மறித்த பொழுதே, எனவும், கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச் சாத்தன் - கைச்செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் எனவும் வருவனவற்றாலும் (கலிங்க - இராச) உணர்க. ஆசிரியர் சேக்கிழார் தாமும்,

இலங்குவேற்கரி காற்பெரு வளத்தான் வன்றிறல்புலி இமயமால் வரைமேல் வைக்க வேகுவோன் எனக் குறித்தருளினர். (பெரியபு-திருக்குறிப்பு. 85.)

கரிகாலனுக்கு வடவேந்தர் திறையிட்ட பொருள் மாண்பு

99-110: மாநீர்.........மண்டபம்

(இதன்பொருள்) மாநீர் வேலி வச்சிர நல் நாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் - கடலை அரணாகவுடைய நல்ல வச்சிர நாட்டு வேந்தன் தான் இறுக்கக்கடவ முறையிலே இறைப் பொருளாகக் கொடுத்த அவனது கொற்றத்தால் வந்த முத்தினாலியன்ற பந்தரும்; மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் - மகதம் என்னும் வளமிக்க நாட்டை யாள்கின்ற வாள்வென்றி வாய்த்த மறப்புகழுடைய மன்னவன் பகைத்து வந்தெதிர்ந்து தோல்விமெய்தி அடங்கிய விடத்தே இறையாகத் தந்த பட்டிமண்டபமும்; அவந்தி மன்னன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் வாயில் தோரணமும் - பின்னர் அவந்தி நாட்டு வேந்தன் கேண்மையுடைனாய் மகிழ்ந்து கொடுத்த மிகவுமுயர்ந்த தொழிற்றிறமமைந்த முறைமையினையுடைய வாயிற்றோரணமும்; பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின-அவைதாம் பொன்னானும் மணியானும் இயற்றப்பட்டனவே யாயினும், இந்நிலவுலகத்தே பிறந்த நுண்ணிய தொழில்வல்ல கம்மியராலே இயற்றப்பட்டன அல்ல என்று கூறப்படும் வரலாற்றுச் சிறப்பையுடையன - (மற்றிப்பொருள்கள் தாம் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புத்தான் யாதோ வெனின்;), அவர் தொல்லோர் துயர்நீங்கு சிறப்பின் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின-அவற்றைக் கொடுத்த வச்சிரநாட்டு மன்னன் முதலிய மூவேந்தருடைய முன்னோர்கள் ஓரோர் காலத்து ஓரோரிடத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் படைத்துக் கொடுக்கப்பட்டவை (என்ப). இவைதாம் ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபமன்றியும் - இத்தகைய சிறப்புடைய இம்மூன்று பொருள்களும் அக்கரிகாற் பெருவளத்தானாற் கொணரப்பட்டு ஓரிடத்தே சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் சான்றோர்களால் புகழ்தற்குக் காரணமாய்க் காண்போர்க்கு அரியதொரு பேறாகவமைந்த இம் மண்டபமும் என்க.

(விளக்கம்) கரிகாலன் இமயத்தே புலிபொறித்து மீள்பவனுக்கு வச்சிரநாட்டு மன்னன் முதலியோர் கொடுத்த முத்தின் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் ஆகிய இம்மூன்று பொருள்களும் அவனது வெற்றிச் சின்னங்களாக மக்கள் காட்சிக்காக ஒரு மண்டபத்தே ஒருசேர வைக்கப்பட்டிருக்கின்றன; ஆதலால், அப்பொருட்காட்சி மன்றமாக அமைந்த மண்டபத்தை உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபம் என அடிகள்பாராட்டிக் கூறுகின்றனர் என்றுணர்க. இம்மண்டபத்தின் வரலாறு இக்காலத்து நாகரிகத்தைப் பெரிதும் ஒத்திருத்தலுணர்க.

99. மாநீர் - கடல். 100. இறை-திறைப்பொருள். 101. வாள் வாய் - வாள்வென்றி வாய்த்த என்க. 102. பகைப்புறத்துக் கொடுத்த என்றது பகைத்துவந்து போர்செய்து ஆற்றாமையால் அடங்கி அடி வணங்கிக் கொடுத்த என்றவாறு. பகைப்புறம் - அடங்குதல். 103. உவந்தனன் - உவந்து. உவந்தனன் எனவே இவன் நண்பன் என்பது பெற்றாம். 104. தோரணவாயிலும் என மாறுக. 107. அவர்-என்றது வச்சிரநாட்டு வேந்தன் முதலிய மூவேந்தரையும்.

வெள்ளிடை மண்டபம்

110 - 117: அன்றியும்.........வெள்ளிடைமன்றமும்

(இதன்பொருள்) அன்றியும் - இவ் வரும்பெறல் மண்டபமல்லாமலும்; தம் பெயர் பொறித்த - தாம் பொதிந்துள்ள சரக்கின் பெயர் பொறிக்கப்பட்டனவும்; கண் எழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடை முகவாயிலும் - முகவரியாகிய எழுத்துக்களை எழுதிப் போகட்டனவும் இலக்கமிட்டுப் போகட்டனவுமாகிய பல்வேறு மூடைகள் கிடக்கும் பண்டகசாலையின் முகப்பாகிய வாயில் காக்கும் காவலையும்; கருந்தாழ்க் காவலும்-கதவுகளில் இருப்புத் தாழிட்டுக் காக்கும் காவலையும்; உடையோர் காவலும்-தம்மையுடையோர் காக்கும் காவலையும்; ஒரீஇய வாகி - விடப்பட்டனவாய்க் கிடப்பவற்றை; வம்பமாக்கள் கட்போர் உளர் எனின்-யாரேனும் புதியவர் களவு செய்வோர் வருமிடத்து; தலையேற்றி-அவர் களவு செய்யக் கருதிய மூடையை அவராலேயே அவர் தலையில் ஏற்றுவித்துப் பின்னர்; கடுப்பக் கொட்பின் அல்லது - கழுத்துக் கடுப்ப அதைச் சுமந்துகொண்டு அவ்வூர் மறுகிற் சுழற்றுவதல்லது; கொடுத்த லீயாது - அவர் நினைந்தாங்கு அதனைக் கொண்டுபோக விடாதாகலின்; உள்ளுநர்ப் பனிக்கும் - களவென்பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்குவிக்குமியல்புடைய; வெள் இடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் என்க.

(விளக்கம்) 111. வம்பமாக்கள். 115. கட்போருளர் எனின் என்று கொண்டுகூட்டுக. வம்பமாக்கள்-அவ்வூர்க்குப் புதியராய் வந்தவர்கள். அவ்வூரில் வாழுகின்ற பதியெழுவறியாப்பழங்குடிமாக்கள் எல்லாம் அம்மன்றினியல்பறிவார், மேலும் அவரெல்லாம் செல்வர். ஆதலின் களவு செய்ய நினையார் எனவும், பிறநாட்டிலிருந்து வந்தோருட் சிலர் இம்மன்றின் தன்மையை அறியாது களவு செய்ய நினைப்பின் என்பார் வம்பமாக்கள் கட்போர் உளரெனின் என்றார். 113. கடை முகவாயிலும் - பண்டகசாலைக் கட்டிடமமைத்து அதன் வாயிலில் நின்று காக்கும் காவலையும் என்க. கருந்தாழ் - இரும்பாலியன்ற தாழக்கோல்; கருங்காலி முதலிய வன்மரத்தாழுமாம்; வலியதாழுமாம். தாழ்க்காவல், கதவமைத்து அதன் தாழைச் செறித்துக் காக்குங்காவல் என்க. பற்றாயத்துக் கருந்தாழ் என்பர் பழையவுரையாசிரியர் உடையோர் - அப்பொதிகளை யுடையோர். எனவே, வாயிலென்னப் பூட்டென்ன மதில் என்ன வழங்கும் எவ்வகைக் காவலும் இன்றி வெட்டவெளியிலே கிடக்கும் பொதிகள் என்றாராயிற்று. இது கள்வோரிலாமைப் பொருள் காவலுமில்லை என நிகழும் கம்பநாடர் செய்யுளை நினைவூட்டுகின்றது. 114. ஒரீஇய - விட்டன. 115. கட்போர் - களவு செய்வோர் உளராதல் அருமையாதலின், உளரெனின் என்றார். கடுப்ப-மிகுதியாக எனலுமாம். கட்போரைக்கொண்டே அவர் தலைமேல் கடுப்ப ஏற்றிப் புறம்போக விடாமல் அந்தச் சுமையோடே சுழல்விக்கும். இஃது அவ்வெள்ளிடை மன்றத்தின் தன்மை என்றவாறு. 116. கொட்பின்-சுற்றின்; இது பிறவினைப் பொருட்டாய் சுழல் விக்கும் என்னும் பொருள்பட நின்றது. கொடுத்தலீயாது - கொடாது என்னும் பொருட்டாய திரிசொல். 117. ஆதலால், உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடைமன்றம் என்க. பனிக்குமன்றம் - இடத்து நிகழும் பொருளின் தொழில் இடத்தின் மேனின்றது. வம்பமாக்களாகிய உடையோர் எனினுமாம்.

இலஞ்சி மன்றம்

118-121: கூனும்...........மன்றமும்

(இதன்பொருள்) கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகு மெய்யாளரும் - கூனுடையோரும் குறளுருவுடையோரும் ஊமரும் செவிடரும் ஆகிய உறுப்புக் குறையுடையாளரும் தொழு நோயாளரும் ஆகிய பயனில் பிறப்புடைய மாந்தர்; முழுகினர் ஆடி-தன்பால் வந்து முழுகி நீராடியபோதே; பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - கூன் முதலிய குறைபாடில்லாத தோற்றத்தையும் நல்ல நிறத்தையும் பெற்று; வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் - மகிழ்ந்து தன்னை வலஞ்செய்து தொழுது போதற்குக் காரணமான கடவுட்பண்புடைய பொய்கையை யுடைமையால் இலஞ்சி மன்றம் என்று கூறப்படும் மன்றமும் என்க.

(விளக்கம்) 118. கூன் முதலிய உறுப்புக் குறைபாடும் தொழு நோய் முதலிய பிணியுடையோரும் என இருவகைக் குறைபாடும் கூறினர். இத்தகைய பிறப்புடையோரை ஊதியமில்லா எச்சப் பிறப்பு என்று கூறும் புறநானூறு. அது வருமாறு:

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்கு
எண்பே ரெச்சம் என்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதியம் இல்  (28)

எனவரும். 119. அழுகு மெய்யாளர் - தொழுநோயாளர். முழுகினர் - முழுகி. காட்சி - தோற்றம். 121. இலஞ்சி - பொய்கை.

நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றம்

122-127: வஞ்சமுண்டு.........மன்றமும்

(இதன்பொருள்) வஞ்சம் உண்டு பகை மயல் உற்றோர் - வஞ்சனையாலே சிலர் தீயமருந்தூட்ட அதனை யறியாதுண்டமையால் தமதறிவிற்குப் பகையாகிய பித்தேறினாரும்; நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நச்சுத்தன்மையுடைய உணவை யுட்கொண்டு தாம் நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தினோரும்; நாகத்து அழல்வாய ஆர் எயிறு அழுந்தினர் - அரவினது நஞ்சுடைய வாயிற் பொருந்தின பற்கள் அழுந்தும்படி கடியுண்ட வரும்; கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய பேயாற் பிடிக்கப்பட்டுப் பெருந்துன்ப மெய்திய வரும் என்னும் இவர்கள்; சுழல வந்து தொழத் துயர்நீங்கும் - ஒருகாற் றன்னை வலம்வந்து தொழுந்துணையானே அத்துன்பங்கள் துவர நீங்குதற்குக் காரணமான கடவுட்பண்புடைய; நிழல் கால்-ஒளிவீசுகின்ற; நெடுங் கல் நின்ற மன்றமும் - நெடிய கற்றூண் நிற்றலால் நெடுங்கல்மன்றம் என்னும் மன்றமும் என்க.

(விளக்கம்) 122. வஞ்சம் - ஆகுபெயர்; வஞ்சித் தூட்டிய தீயவுணவு. பகை மயல் என மாறுக. அறிவிற்குப் பகையாகிய மயக்கம்; அது பித்து. அறியாமையாலோ வாழ்க்கையை முனிந்தோ. 123. நஞ்சமுண்டு துயர் உற்றோர் என்க. 124. நாகத்து அழல்வாய் ஆர் எயிறு என்க. அழல்-நஞ்சு; ஆகுபெயர். அழுந்தினர்-அழுந்துமாறு கடியுண்டோர். கழல்-கழற்சிக்காய் எனினுமாம். 127. நிழல்-ஒளி.

பூத சதுக்கம்

128-134: தவமறைந்து ........... சதுக்கமும்

(இதன்பொருள்) தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளரும் - தம்மைப் பிறர் நம்புதற் பொருட்டுத் தவவேடத்தில் மறைந்து நின்று அத் தவநிலைக்குப் பொருந்தாத தீநெறிக்கண் ஒழுகுகின்ற பண்பற்ற பொய் வேடத்தாரும்; மறைந்து அவம் ஒழுகும் அலவல் பெண்டிரும் - தங்கணவர் காணாமல் மறைவாகத் தீய நெறிக்கண் ஒழுகும் அலவலைப் பெண்டிரும்; அறைபோகு அமைச்சர் - கீழறுக்கும் அமைச்சர்; பிறர்மனை நயப்போர் - பிறர் மனைவியரை விரும்பினோர்; பொய்க்கரியாளர் - பொய்ச்சான்று கூறுவோர்; புறங்கூற்றாளர் - புறங்கூறுவோர்; என்னும் இத் தீவினையாளர்களே; என் கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர் என - யான் என் கையிடத்தே கொண்டுள்ள இக் கயிற்றகத்தேபடுதற் குரியாராவார் என்று; காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி - அவ்வூர் நாற்காத வெல்லையும் கேட்கும்படி தனது கடிய குரலாலுணர்த்தி; பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் - அத்தகைய தீவினையாளரைத் தன் பாசம் கட்டிக் கொணருங்கால் அவரை நிலத்திற் புடைத்துக் கொன்று தின்னும் பூதம் நிற்றலாலே; பூத சதுக்கம் எனப்படும் சதுக்கமும் என்க.

(விளக்கம்) 128. தவம் - தவவேடம். இவ்வேடம் சமயந்தோறும் வேறுபடும். தவமாவது -மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும் மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றாற் றம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களை யோம்புதல். இதனை,

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு  (குறள் - 261)

என்றற் றொடக்கத்துத் திருக்குறளான் அறிக. வேடம் - தலைமயிரைப் பறித்தலும் நீட்டலும் மழித்தலும் துவராடை யுடுத்தலும் பிறவுமாம். இனி, மறைந்தொழுகலாவது: உரனின்மையால் அத்தவத்தோடு பொருந்தாத தீயவொழுக்கத்தை மேற்கோடல். 131. அவம் - பிற ஆடவரை விரும்புதல் முதலிய தீயவொழுக்கம். அலவலைப் பெண்டிர், அலவற் பெண்டிர் என விகாரமெய்தியது. 130. அறைபோதல். கீழறுத்தல். 121. பொய்க்கரி - பொய்ச்சான்று. 132. பாசத்துக்கை - பாசத்திடம். 133. குரலால் உணர்த்தி. 134. சதுக்கம் - நாற்சந்தி.

பாவை மன்றம்

135-138: அரைசு .......... மன்றமும்

(இதன்பொருள்) அரைசு கோல் கோடினும் - அரசன் செங்கோன்மையிற் சிறிது பிறழினும்; அறங்கூறு அவையத்து உரை நூல் கோடி ஒருதிறம் பற்றினும் - அறநூல் நெறிநின்று அறங்கூறும் அறவோர் அவ்வயைத்திலிருந்து தமக்கென்று அறமுரைக்கும் நூனெறி பிறழ்ந்து ஒருமருங்குபற்றிக் கூறினும்; நாவொடு நவிலாது - இத்தீமைகளைத் தன்னாவினாற் கூறாமல்; நவை நீர் உகுத்து - அத்தீமைக்கு அறிகுறியாகக் கண்ணீர் சொரிந்து; பாவை - தெய்வத்தன்மையுடைய படிவம்; நின்று அழூஉம் - தன்பால் நின்று அழுதலாலே; பாவை மன்றமும் - பாவை மன்றம் எனப்படுகின்ற மன்றமும் என்க.

(விளக்கம்) 135. அரைசு - போலி. கோல் - செங்கோன்மை. அறங்கூறவையம்: பொருள் முதலிய காரணம்பற்றித் தம்முட் கலாஅய்த்து வருவார்க்கு நூனெறி நின்று அறங்கூறி வழக்குத் தீர்க்குமிடம். 136. ஒருதிறம்-அறம் நோக்காது உறவு முதலியவை நோக்கி ஒருவர் சார்பில் நின்று தீர்ப்புக் கூறுதல். 137. நாவொடு - நாவால். நவையை அறிவிக்கும் கண்ணீர் என்க. நவை-தீமை. பாவை நின்றழூஉம் மன்றம் என்றது அழும்பாவை நிற்றலால் அப்பெயர் பெற்ற மன்றமும் என்றவாறு.

139-140 : மெய்வகை .......... பலியுறீஇ

(இதன்பொருள்) மெய்வகை தெரிந்த மேலோர் ஏத்தும் - உண்மையின் திறத்தை யுணர்ந்த சான்றோரால் புகழ்ந்து பாராட்டப்படுகின்ற; ஐவகை மன்றத்தும் - முற்கூறப்பட்ட ஐந்துவகைப்பட்ட கடவுட் பண்புடைய வெள்ளிடை மன்றம் முதலிய ஐந்து மன்றத்தும்; அரும் பலி உறீஇ - அரிய பலிகளைக் கொடுத்து என்க.

(விளக்கம்) 110. அரும்பெறன் மண்டபமன்றியும், 117. வெள்ளிடை மன்றம், 121. இலஞ்சி மன்றம், 127. நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம், 134. பூதசதுக்கம், 138. பாவை மன்றம் என்னும் இவ்வைந்து மன்றங் கட்கும் பலிகொடுத்து என்க. அரும்பலி என்றமையால் அவிப்பலி என்பது போதரும்.

இந்திரவிழாவின் முதலும் முடிவும்

ஐராவதத்திற் கறிவுறுத்தல்

141-144 : வச்சிரக் ........ சாற்றி

(இதன்பொருள்) வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் நறுமணம் கெழுமிய வீர முரசத்தை; கச்சையானைப் பிடர்த்தலை யேற்றி - கச்சை முதலியவற்றால் அணி செய்யப்பட்ட களிற்றியானையின் பிடரிடத்தே ஏற்றி; வால் வெள் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - தூய வெள்ளை நிறமுடைய களிற்றுயானைகட் கெல்லாம் அரசனாகிய ஐராவதம் என்னும் யானை என்றும் நின்று விளங்கிய கோட்டத்தின் முன்றிலிலிருந்து; விழவின் கால்கோள் கடைநிலை சாற்றி - இந்திரவிழாவின் தொடக்க நாளையும் இறுதி நாளையும் நகரமெங்கணும் முரசறைந்து அறிவித்து என்க.

(விளக்கம்) 141. வச்சிரக் கோட்டத்து மணம் கெழுமுரசம் என்றதனால், எப்பொழுதும் அந்த முரசம் அக்கோட்டத்தில் இருப்பதாம் என்பதும் பெற்றாம். வீரமுரசம் நாடோறும் மலர் அணிந்து நறும் புகை எடுத்து வழிபாடு செய்யப்படும். ஆதலால் - மணம் கெழுமுரசம் என்றார். மணம் - நறுமணம் (அடியார்க்) மணமுரசு - விழாமுரசு என்றல் பொருந்தாது. பண்கெழு முரசம் என்னும் பாடவேற்றுமையு முண்டென்பது பழையவுரையாலறியலாம். கச்சை - யானைக்குக் கீழ் வயிற்றிற்கட்டும் கச்சை. கச்சை கூறவே அணிசெய்யப்பட்ட களிறு என்றாராயிற்று. விழாவறையத் தொடங்கும் வள்ளுவர் முதன்முதல் ஐராவதக் கோட்டத்தின் முன்றிலினின்றும் தொடங்குதல் மரபு என்பது வால்வெண்......சாற்றி என்பதனாற் பெற்றாம். இந்திரவிழவிற்கு முரசறையுங்கால் ஐராவதக் கோட்டத்தினின்றும் தொடங்கி நகர் முழுதும் அறையப்படும் என்பது மணிமேகலையானும் அறியப்படும். அவ்வாறு செய்வது, ஐராவதம் இந்திரனைக் கொணர்தற்கு என்பர் (அடியார்க்) இஃது இனிய விளக்கம்.

இந்திரவிழவிற்குக் கொடி யேற்றுதல்

145-146 : தங்கிய ........... எடுத்து

(இதன்பொருள்) தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - தேவேந்திரன் வந்து தங்கிய இடமென்னுமொரு கோட்பாட்டை யுடைய தருக் கோட்டத்தின் முன்னர்; வான் உற மங்கல நெடுங்கொடி எடுத்து - வானத்தைத் தீண்டுமளவு எண்வகை மங்கலங்களோடும் அவ்விழவின் கால்கோட்கு அறிகுறியான ஐராவதம் எழுதப்பட்ட கொடியினை உயர்த்து; என்க.

(விளக்கம்) இந்திரன் வானவர் உலகில் கற்பகக் காவினூடே வதிவானாகலின், அதற்கீடாக இங்கும் அவன் வந்து தங்கியதாக வொரு கோட்பாட்டோடே மலர்ப்பொழிலினூடே அமைக்கப்பட்ட கோட்டம் தருநிலைக் கோட்டம் எனப்பட்டது என்றுணர்க. மங்கலம் - எண்வகை மங்கலப் பொருள்கள். அவையிற்றை சாமரை தீபம் தமனியம் பொற்குடம், காமர் கயலி னிணை முதலாத்-தேமரு, கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம், எண்ணிய மங்கலங்கள் எட்டு, என்பதனாலறிக.

தருநிலைக் கோட்டத்தை அணிசெய்தல்

147-156: மரகத ........ வீதியில்

(இதன்பொருள்) மரகத மணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயிரம் என்னும் மணிகளை விளிம்புண்டாக அழுத்தித் தளமாகப் படுத்து; பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் - அவ் விளிம்பின்மீதே பவளத்தாலியன்ற திரண்ட தூண்களை நிரைத்த பசிய பொன்னாலியன்ற திண்ணைகளையும் நெடிய நிலைகளையும் உடைய மாளிகை வாயிலிடந்தோறும்; கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து மங்கலம் பொறித்த மகரவாசிகை தோரணம் நிலைஇய - கிம்புரி செறித்த கொம்பினையுடைய யானையினது அங்காந்த வாயினின்றும் தூங்குகின்ற ஒளிகிளரும் முத்துக் குஞ்சங்களின் வரிசையினையும் சாமரை முதலிய எண்வகை மங்கலப் பொருள்களையும் பொறிக்கப்பட்ட ஓவியங்களையும் உடைய வாசிகை வடிவாக வளையச் செய்த மகரதோரணங்கள் நிலைபெற்ற; தோம் அறு பசும் பொன் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாலியன்ற நிறை குடங்களும்; பொலிந்த பாலிகை - முளையாற் பொலிவு பெற்ற பாலிகைகளும்; பாவை விளக்கும் - பாவை விளக்கும்; பசும் பொன் படாகை-பசும் பொன்னாலியன்ற கொடிகளும்; தூ மயிர் கவரி - வெள்ளிய கவரி மயிராலியன்ற சாமரையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகிய சுண்ணமும்; மேவிய கொள்கை வீதியில் - பிறவும் பொருந்திய அணிகளையெல்லாம் தன்பால் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

(விளக்கம்) 146. மரகதமணியோடு வயிரமணிகளையும் அழுத்தித் தளமிட்டு என்க. 148. வேதிகை-திண்ணை; மேடை. 150. கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்தொழுக்கம் என்றதனால் யானையினது வாயினின்றும் தூங்கும் முத்துக்குஞ்சம் என்பது பெற்றாம். கிம்புரிப் பகுவாய்-மகரவாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். அது பொருந்துமேற் கொள்க. 151-2. மங்கலம் - மங்கலப் பொருள்களின் ஓவியம். மகர வாசிகைத் தோரணம் - மகரவாயினின்றும் புறப்பட்டதாக வளைத்த தோரணம். 154. பாவை கையிலேந்திய விளக்கு. படாகை - கொடி. தூமயிர் - வெண் மயிர். 156. கொள்கை - கொள்ளல். கும்பம் முதலியவாகப் பொருந்தியவற்றைக் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

156-160: செறிந்து ........ ஈண்டி

(இதன்பொருள்) ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசியற் சுற்றத்தாராகிய ஐம்பெருங் குழுவினரும் எண்வகைப்பட்ட ஆயத்தாரும்; அரச குமரரும் - மன்னர் மக்களும்; பரத குமரரும் - பெருங்குடி வாணிகர் மக்களும்; கவர் பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பரித் தேரினர் - காண்போர் உளங் கவரும் அழகிய பரிப்பினையுடைய குதிரையினை யுடையோரும் களிற்றியானை யூர்ந்துவருந் தொகுதியினரும் விரைந்து செல்லும் குதிரையையுடைய தேரினையுடையோருமாய்; இயைந்து ஒருங்கு (156)ஈண்டி செறிந்து - ஒன்றுபடத் திரண்டு நெருங்கி; ஆங்கு-அப்பொழுதே என்க.

(விளக்கம்) 156. செறிந்து ஆங்கு என்பதனை, 60. ஈண்டி என்பதன் பின்னர்க் கூட்டுக. 157. ஐம்பெருங் குழு - அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாஅத் தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங்குழு வெனப்படுமே, என்னுமிவர்.

எண்பேராயம் - காரணத்தியலவர் கருமகாரர், கனகச் சுற்றம் கடைகாப்பாளர், நகரமாந்தர் நளிபடைத்தலைவர், யானைவீரர் இவுளி மறவர், இனையர் எண்பேராயம் என்ப என்னுமிவர். இனி அரும்பதவுரையாசிரியர் சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுக நெய், ஆய்ந்த விவர் எண்மர் ஆயத்தோர் - வேந்தர்க்கு, மாசனம் பார்ப்பார் மருத்தர் வாழ் நிமித்தரோ டமைச்சர், ஆசில் அவைக்களத்தார் ஐந்து எனக் காட்டுவர். 58. பரதர்-வணிகர். கவர்பரி - ஊர்வோர் வாரைக் கவர்ந்திழுத்தற்குக் காரணமான பரிப்பினையுடைய புரவி யெனினுமாம். பகுத்து விரையும் செலவு என்பாருமுளர். இவர்தல் - இழுத்தல்.

விண்ணவர் தலைவனை விழுநீராட்டல்

161-168 : அரைசு ...... விழுநீராட்டி

(இதன்பொருள்) மா இரு ஞாலத்து - மிகப்பெரிய இந்நிலவுலகத்தின் கண்ணே; அரைசு மேம்படீஇய - தம்முடைய அரசியலானது மேம்படுதற் பொருட்டு; மன்னுயிர் காக்கும் - நிலைபெற்ற உயிர்களைப் புரக்கின்ற குறுநில மன்னருள்; ஆயிரத்து ஓர் எட்டு அரசு - ஓராயிரத்தெண்மர் மன்னர்கள்; தண் காவிரி நறுந் தாது மலிபெருந்துறை - தண்ணிய காவிரிப் பேரியாற்றினது நறிய பூந்தாது மிக்க பெரிய துறைக்கட் சென்று; பொற்குடத்து ஏந்தி - பொன்னாலியன்ற குடங்களிலே முகந்து; தலைக்கொண்ட - தந் தலையாலே சுமந்து கொணரப்பட்ட; புண்ணிய நல்நீர் - புண்ணியம் பயக்கும் நல்ல நீரினாலே; அகநிலை மருங்கில் - பூம்புகார் நகரத்தகத்தே; உரைசால் மன்னவன் கொற்றம் கொள்க என-செங்கோலோச்சிப் புகழமைந்த நம்மன்னன் வெற்றி பெறுவானாக என்றுகூறி; மண்ணகம் மருள வானகம் வியப்ப - இம் மண்ணுலகத்தார் இது மண்ணுலகோ அல்லது விண்ணுலகு தானோ என்று மருட்கை எய்தா நிற்பவும் வானுலகத்தார் நம்முலகினும் மண்ணுலகே சிறந்ததுபோலும் என்று வியவா நிற்பவும்; விண்ணவர் தலைவனை - அவ்விண்ணவர்க்கும் வேந்தனாகிய இந்திரனை; விழுநீர் ஆட்டி - மஞ்சனமாட்டவென்க.

(விளக்கம்) மாயிரு ஞாலத்து அரைசு மேம்படீஇய உயிர்காக்கும் ஆயிரத்தெட்டரசு குடத்தேந்தித் தலைக்கொண்ட புண்ணிய நன்னீரை, அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென வாழ்த்தி மருள வியப்ப விழுநீராட்டி எனக்கொண்டு கூட்டிப் பொருள் கூறுக.

166. வீதியில் குழுவும் ஆயமும் குமரரும் ஈண்டிச் செறிந்து ஆங்கு அரசு தலைக்கொண்ட நீரை வியப்ப வியப்பத் தலைவனை நீராட்டி என இயையும் ஆட்டி - ஆட்ட.

161. படீஇய - படுதற்பொருட்டு. அகனிலை-ஊர். 162. உரை - புகழ். 162. மன்னன் - ஈண்டுச் சோழமன்னன். ஆயிரத் தோரெட்டரசு என்றது குறுநிலமன்னரை-ஆயிரத்தெட்டரசர் தலைக்கொண்ட நீர் எனவே ஆயிரத்தெட்டுக் குடம் நீர்கொண்டு மஞ்சனமாட்டுதல் மரபு என்பதும் பெற்றாம். 167. மண்ணவர் இது மண்ணகமோ விண்ணகமோ என்று மருளவும் வானகத்தார், நம்முலகிலும் மண்ணுலகமே சிறந்தது என்று வியப்பவும் என்க.

168. விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம் என்பர் அடியார்க்குநல்லார். எனவே, இந்நீராட்டு வச்சிரக் கோட்டத்தில் நிகழ்வதென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இந்நிகழ்ச்சி தருநிலைக் கோட்டத்தின்கண் நிகழ்வதென்பதே எமது துணிபு. ஆகவே, விண்ணவர் தலைவனுக்குப் படிவமமைத்து விழுநீராட்டினர் என்க.

இந்திர விழவின்போது புகார்நகரத்தே

நிகழும் பிற விழாக்கள்

169-178: பிறவாயாக்கை ......... சிறந்தொருபால்

(இதன்பொருள்) பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவனுடைய திருக்கோயிலும்; அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் - ஆறு முகத்தையும் சிவந்த நிறத்தையுமுடைய முருகவேள் கோயிலும்; வால்வளை மேனி வாலியோன் கோயிலும்-வெள்ளிய சங்கு போன்ற நிறமுடைய பலதேவன் கோயிலும்; நீலமேனி நெடியோன் கோயிலும் - நீலமணிபோலும் நிறத்தையுடைய நெடியமால் கோயிலும்; மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்-முத்துமாலை யணிந்த வெள்ளிய குடையையுடைய இந்திரன் கோயிலும்; ஆகிய இக்கோயில்களிடத்தெல்லாம்; மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை யொருபால்-மிகவும் முதுமையையுடைய முதல்வனாகிய பிரம தேவனுடைய வாய்மையிற் பிறழ்தலில்லாத நான்குவகைப்பட்ட மறைகள் கூறுகின்ற முறைப்படி வேள்விச் சடங்குகள் நிகழ்ந்தன ஒருபக்கம்; நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - நால்வகைப்பட்ட தேவரும் பதினெண்வகைப்பட்ட கணங்களும் என வேற்றுமைப்படத் தெரிந்து வகுக்கப்பட்ட தோற்றத்தையுடைய கடவுளரது விழாக்கள் சிறவாநிற்ப ஒரு பக்கம் என்க.

(விளக்கம்) 169. பிறவா யாக்கை - ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,

குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே

எனவரும் சிவஞானசித்தியார் (பக்கம்-65)ச் செய்யுளால் உணர்க. மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாம்.

170. அறுமுகச் செவ்வேள்கோயில் - தமிழ்நாட்டுக் குறிஞ்சித் திணைத்தெய்வமாகிய முருகன் கோயில். இத்தெய்வம் கடவுள் என்னும் பொருளுடையதாய் முருகு என வழங்கப்பட்டு, பின்னர் ஆண்பால் விகுதி பெற்று முருகன் என்றாகி வடவர் புராணத்திற் கூறப்படும் கந்தனும் இதுவும் ஒரு தெய்வம் என்று கொள்ளப்பட்டு வடவர் புராணங் கூறும் ஆறுமுகம் முதலிய உருவத்தைப் பெற்றுளது என்று தோன்றுகின்றது. இத் தெய்வமே தமிழகத்தார் தனிப்பெருங் கடவுள் ஆகும்.

171. வாலியோன் - வெண்ணிறமுடையோன் என்னும் காரணத்தால் வந்த பெயர். 172. நீலமேனி நெடியோன் - திருமால். இத்தெய்வம் முல்லைத்திணைத் தெய்வமாகக் கொள்ளப்பட்ட வடவர் தெய்வம். 173. மாலை வெண்குடை மன்னன் என்றது இந்திரனை. இத்தெய்வம் மருதத்திணைத் தெய்வம். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இந்திரனை வேந்தன் என்று குறியீடு செய்தலறிக.

174. மாமுது முதல்வன் என்றது, பிரமதேவனை. சிவபெருமான் என்பாருமுளர். 175. நான்மறை-இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்பன. தீமுறை - வேள்வி. 176. நால்வகைத் தேவர் - முப்பத்து மூவர்; அவராவார்: (1) வசுக்கள் எண்மர், (2) திவாகரர் பன்னிருவர். (3) உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவருமெனவிவர்.

மூவறு கணங்களாவார் - கின்னர்கிம் புருடர் விச்சா தரர் கருடர் - பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர், காந்தருவர் தாரகைகள் காணாப்பசாச கணம், ஏந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபூமி யோருடனே, ஆகாச வாசிகளா வார் எனவிவர். ஆகாசர் நாகர் சித்தர் காந்தருவர் விஞ்சையர் பசாசர் தாரகை போகபூமியோர் கிம்புருடர் சுரர் அசுரர் பூதம் முனிதேவர் கருடர் இராக்கதர் இயக்கர் சாரணர் எனவும் கொள்க.

விழவுக்களின் நிகழ்ச்சிகள்

179-188 : அறவோர் ........... வியலுளாங்கண்

(இதன்பொருள்) அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் - துறவோர் தம் பள்ளிகளிடத்தும் அறத்தைக் காக்கும் அறக் கோட்டங்களிடத்தும்; ஒருசார் புறநிலைக் கோட்டத்து - ஒரு பக்கத்தே புறநகரத்தே யமைந்த அறநிலையங்களினும்; திறவோர் உரைக்கும் - அறனறிந்து நாத்திறமும் படைத்த சான்றோர் மக்கட்கு அறஞ்செவி யறிவுறுத்தும்; செயல் சிறந்து - செயலாற் சிறப்புறா நிற்ப; ஒருபால் - மற்றொரு பக்கத்தே; கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து - புலிக் கொடியுயர்த்த சோழமன்னனோடு கூடாத பகைமன்னர்க்கிட்ட கால்தளையை நீக்கி விடுகையாலே அம்மன்னனுடைய அருட் பண்பு சிறவாநிற்ப; ஒருபால்-மற்றொருபக்கத்தே; கண்ணுளாளர் கருவிக்குயிலுவர் பண் யாழ்ப்புலவர் பாடல் பாணரொடு எண்அருஞ் சிறப்பின் இசை சிறந்து - மதங்களும் துளைக்கருவி யிசைக்கும் பெரும்பாணரும் தோற்கருவி இசைக்கும் குயிலுவரும் நரப்புக் கருவியிசைக்கும் யாழ்ப்புலவரும்; மிடற்றுக் கருவியாலிசைபாடும் பாடலையுடைய பாணரும் ஆகிய இவர்களால் இசைக்கவல்ல அளந்தறிதலரிய சிறப்பையுடைய இன்னிசை நிகழ்ச்சிகளாலே சிறவா நிற்பவும்; முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் - கங்குலும் பகலும் இங்ஙனம் நிகழ்தலாலே மத்தளத்தின் கண்கள் சிறிதும் அடங்குதலின்றிக் குறுந்தெருக்களினும் நெடிய தெருக்களினும் இந்திர விழவினால் உண்டான மகிழ்ச்சி மிக்க அகன்ற அப்புகார் நகரத்தின்கண் என்க.

(விளக்கம்) 179. அறவோர் என்றதனால், பள்ளி என்பது அருகர் தவப்பள்ளியும் புத்தர் தவப்பள்ளியும் என்பது பெற்றாம். அறவோர் துறவறம் பூண்டோர். அறன் ஓம்படை - அறக்கோட்டம். 180. புற நிலைப் புண்ணியத்தானம் என்றது புறநகரத்தே அமைந்த அறநிலையங்களை. 181. திறவோர் - மெய்யுணர்வொடு நாத்திறமும் ஒருங்கு கைவரப்பெற்ற மேலோர். செயல் - அறிவுரை வழங்குதல். 182. கொடி-ஈண்டுப் புலிக் கொடி. கூடாமன்னர் - பகைமன்னர். 183. அடித்தளை-கால்விலங்கு. நீக்குதலாலே அருள்சிறக்க என்க. 184. கண்ணுளாளர்-மதங்கர்; பெரும்பாணருமாம். இவர் குழலிசையாளர் துளைக்கருவியாளர் எனப் பொதுவிற் கோடலுமாம். கண்-துளை, துளை வழியாக இவர் இசையையாளுதலால் அப்பெயர் பெற்றார் என்க. கருவிக்குயிலுவர்-தோற்கருவியாளர். யாழ்ப்புலவர் என்றது நரப்புக் கருவியாளர் என்றவாறு. பாடல்-மிடற்றுப் பாடல். சாறு சிறந்தொருபால்........இசைசிறந் தொருபால், இவற்றில் வருகின்ற சிறந்து என்னும் எச்சத்தைச் சிறக்க எனத் திரித்துக் கொள்க. 187. முழவுக்கண் என்பதற் கேற்பத் துயிலாது என்றினிதின் இயம்பினர். முடுக்கர்-குறுந்தெரு; சந்திகளுமாம். விழவுக்களி-விழவுகாரணமாக வுண்டான மகிழ்ச்சி.

கோவலன் போல மலய மாருதம் திரிதருமறுகு

189-203 : காதற் .......... மறுகில்

(இதன்பொருள்) காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு - தான் காதலிக்கும் கொழுநனைப் பிரிந்து வேறுபட்டு அதனால் அலர் கூறப்படாத அழகிய மகரக் குழையையுடைய மாதவி என்னும் கணிகையோடும்; இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக்குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து - இல்லத்தே நட்டுவளர்க்கப்பட்ட முல்லை மல்லிகை மயிலை என்னும் இவற்றின் மலர்களோடே தாழியிலிட்டு வளர்க்கப்படும் குவளையும் வண்டுகள் சூழ்தருகின்ற செங்கழுநீர் என்னும் மலர்களும் விரவிப் புனைந்த மாலையை யணிந்து பொலிவு பெற்று; காமக்களி மகிழ்வு எய்தி - காமவின்பத்தாலே செருக்கெய்தி; காமர் நறுவிரை பொதிபூம் பொழிலாட்டு அமர்ந்து - அழகிய நறிய மணத்தைத் தம் மகத்தே பொதிந்துள்ள மலர்களையுடைய பொழிலில் ஆடுதலைப் பெரிதும் விரும்பி; நாள் மகிழ்இருக்கை நாள் அங்காடியில்-நாள்தோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பிடங்களையுடைய நாளங்காடியில்; பூ மலி கானத்துப் புதுமணம் புக்கு - மலர்கள் மிக்குள்ள விடங்களில் அம்மலர்களின் புதிய மணத்தினூடே புகுந்து; புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சந்தனம் என்னும் இவற்றின் செவ்வி யழியாமல் சிறப்புறா நிற்ப; நகை ஆடு ஆயத்து நல்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடு இன்பந்தரும் காமக் குறிப்புடைய நல்ல மொழிகள் பேசி இடையறாது மகிழ்ந்து; குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபில் கோவலன் போல - குரல் என்னும் இசையைப் பாடுகின்ற வாயையுடைய பாணரோடும் அந்நகரத்துக் கழிகாமுகரோடும் திரிகின்ற ஒழுக்கத்தையுடைய கோவலனைப் போன்று; இளிவாய் வண்டினொடும் இன் இளவேனிலொடும் மலய மாருதம் திரிதரு மறுகில் - இளி யென்னும் இசையை முரலுகின்ற வாயை யுடைய வண்டுகளோடும் இனிய இளவேனிற் பருவத்தோடும் பொதியின் மலையிற்றோன்றிய இளந் தென்றலானது உலாவு தலைச் செய்யும் மறுகினிடத்தே என்க.

(விளக்கம்) 189. காதற் கொழுநனை என்பது முதலாக 203-மறுகில் என்பதீறாகச் சிலேடை வகையால் அடிகளார் கோவலனைத் தென்றலுக்குத் திறம்பட வுவமை கூறுமாற்றால் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியை மருவிய அற்றை நாள் முதல் பலவாண்டுகளின் பின்னர் நிகழ்கின்ற இற்றைநாள் காறும் அவனுடைய வாழ்க்கை கழிகின்ற தன்மையை நம்மனோர்க்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் திறம் பெரிதும் போற்றற் பாலதாம்.

இனி, இவற்றைத் தென்றற் கேற்றிக் கூறுமாறு: காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா மாதர்க்கொடுங்குழை மாதவி தன்னொடு-எல்லாரும் காதலிக்கும் கொழுவிய நனையாந்தன்மையை விட்டு முதிர்ந்து அலராகாத வளைந்த அழகிய தளிரை யுடைய குருக்கத்தி மலரோடும்; இல்வளர் முல்லை மல்லிகை பயிலை தாழிக் குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து-முல்லை முதல் கழுநீர் ஈறாகக் கூறப்பட்ட பூக்களினாலியன்ற கோதைகளினும் பிணையல்களினும் பயின்று மணமேறப் பெற்ற பொலிவுடனே; நாண்மகிழிருக்கை... ...புக்கு-நாள் தோறும்........புதுமணத்தினூடு புகுந்து; புகையும்.....திளைத்து-அகிற்புகை... இடைவிடாது பயின்று; எனக் கூறிக்கொள்க.

200. பாணர்க்கு வண்டும், பரத்தர்க்கு வேனிலும் கோவலற்கு மாருதமும் உவமம் எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கம் வண்டுக்குப் பாணரும் வேனிலுக்குப் பரத்தரும் மாருதத்திற்குக் கோவலனும் உவமம் எனக் கூறுதல் நேரிதாம். ஆயினும், அடிகளார் ஈண்டுக் கோவலன் போல எனக் கோவலனை உவமங் கூறுவார் போலக் கூறினும் அவர் கருத்துக் குறிப்பாகக் கோவலன் ஒழுக்கத்திற்கு மாருதத்தை உவமங்காட்டிக் கூறுதலே ஆதலின், அது கருதி அடியார்க்கு நல்லார் அவ்வாறு கூறினர் எனின் பெரிதும் பொருந்தும் என்க.

189. நனை-அரும்பு. அலர் - பழிச் சொல் -மலர். குருக்கத்தி அலரெய்தாமையாவது - செவ்வி யழியாமை என்க. 190. கொடுங்குழை - வளைந்த குழை என்னும் காதணிகலம்: வளைந்த தளிர். இல்வளர்தல் முல்லை முதலிய எல்லா மலர்க்கும் பொது. மயிலை-இரு வாட்சி. 194 காமர் - அழகு. 195. நறுவிரை பொதி பூம்பொழில் என மாறிக் கூட்டுக. அமர்தல் - விரும்புதல். 197. மிகுதிபற்றிப் பூமலி கானம் என்றார். 200. குரல் - ஓரிசை. பரத்தர் - கழிகாமுகர். குரலுக்குக் கிளையாதல் கருதி வண்டினை இளிவாய் வண்டென்றார்.

201. கோவலன் போல மாருதம் திரிதரும் என்றாரேனும் கோவலன் வம்பப் பரத்த ரொடும் வறுமொழியாள ரொடும் காமக் களியாட்டத்தே தனது வாழ் நாளை வறிதே கெடுத்துத் திரிந்தான் என நம்மனோர்க்கு அடிகளார் கூறாமற் கூறும் வித்தகப் புலமை வியத்தற்குரியதாம்.

வீதிச் சிறப்பு

204-217: கருமுகில்.......உண்டுகொல்

(இதன்பொருள்) அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி - அழகிய இடமமைந்த வானவெளியிலே திரியின் தனக்குப் பகையாகிய பாம்பு எளிதாகத் தன்னைக் கண்டுவந்து விழுங்கும் என்று அஞ்சி ஆங்குத் திரியாமல்; கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு இரு கருங்கயலோடு இடை குமிழ்எழுதி - ஒரு பெரிய முகிலைத் தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை யொழித்து அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் எழுதி இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; ஈண்டுத் திங்களும் திரிதலும் உண்டு கொல் - இந் நகரமறுகிலே திங்கள் தானும் வந்து திரிகின்றதோ எனவும்; மீன் ஏற்றுக்கொடியோன் நீர்வாய்திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மெய்பெற வளர்த்த வானவல்லி வருதலும் உண்டுகொல் - மகர மீனாகிய கொடியையுடைய காமவேள் ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தின்கண் வித்திட்டு அது தானும் அத்திங்களினது அமிழ் தகலையினது சிறப்பு வாய்ந்த துளிகளாகிய அழகிய நீரைப் பருகி வடிவம் பெறுமாறு வளர்த்த வானவல்லி தானும் இம் மறுகிடத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும், இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட-பெரிய நிலத்தையுடைய ஊக்க மிக்க இச்சோழ மன்னனுக்குப் பெரிய வள முண்டாக்கிக் காட்டற் பொருட்டு; திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என - தன்னிடத்தே எழுந்தருளியிருக்கும் திருமகள் தன்னைத் துறந்து அதர்வினாய் வந்து புகுந்தது வளங்கெழுமிய இப்புகார் நகரமே ஆதல் வேண்டும் என்று கருதிப் பிரிவாற்றாமையாலே வருந்தி; எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங்குவளையும் குமிழும் பூத்து ஆங்கு-நெருப்புப் போன்ற நிறத்தை யுடையதோர் இலவ மலரையும் முல்லை முகையையும் தன்னகத்தே பூத்ததோடன்றியும் இரண்டு கரிய பெரிய குவளை மலரையும்  ஒரு குமிழ மலரையும் பூத்து இங்ஙனம் கொண்ட; உள்வரிக் கோலத்து - உள்வரிக் கோலத்தோடே; உறுதுணை தேடி - தன்பால் வீற்றிருக்குந் துணையாகிய அத்திருமகளைத் தேடி; கள்ளக் கமலம் - வஞ்சமுடைய அச்செந்தாமரைத் தெய்வமலர்; திரிதலும் உண்டுகொல் - இம் மறுகிடத்தே திரிதலும் உண்டாயிற்றோ எனவும் என்க.

(விளக்கம்) 204. கருமுகில் - கூந்தற்குவமை. குறுமுயல் - குறிய களங்கம். 205. கருங்கயல் - கண்கட்குவமை. குமிழ்: ஆகுபெயர். குமிழமலர் - இது மூக்குக்குவமை. 206. அரவு - இராகுவும் கேதுவுமாகிய பாம்புகள். அரவுப் பகையஞ்சி என்றதனால், 207. திங்கள்-முழுத்திங்கள் என்பது பெற்றாம். அற்றைநாள் நிறைமதி நாளாதலும் நினைக. திங்கள்-முகத்திற்குவமை. 208. வாய்திங்கள்: வினைத் தொகை. 210. மீனேற்றுக் கொடியோன் - காமவேள். மீன் - மகர மீன். கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல். உரி-46) என்பதனால் மீன் மகரம் என்பது பெற்றாம். மகரம் - சுறாமீன். 210. மெய்பெற என்பதற்கு அடியார்க்குநல்லார், முன்பு நுதல்விழியான் இழந்த மெய் பெறுவதற்காக என்பர் வானவல்லியால் தன் மெய்யைப் படைத்துக் கோடற்கு என்பது அவர் கருத்துப்போலும். இல்லையேல் வானவல்லி காமவேள் மெய்பெறுதற்குக் காரணமாகாமை யுணர்க: 211. வானவல்லி - மின்னுக்கொடி. 212. திருமகள் தானே வளங்காட்டப் புகுதலின் ஊக்கமிக்க மன்னற்கு எனவும் திருமகன் அதர்வினாய் வந்து புகுந்தது இச்செழும்பதி எனவும் கூறிக்கொள்க. என்னை? ஆக்கம் அதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்கமுடையா னுழை என்பதூஉமுணர்க்க. இனி, கமலம் திருமகள் ஈண்டுளாள் என்று கருதுதற்குச் செழும்பதி என்றது குறிப்பேதுவாயிற்று. 214. இலவம் வாய்க்கும், முல்லை-எயிற்றிற்கும் உவமை. 216. உள்வரிக் கோலம். தன்னைக் கரத்தற்பொருட்டுக் கொள்ளும் வேடம். மன்னன்பால் உள்ளதிருமகளைக் கொடுபோக வருதலின் கமலம் ஒற்றர் காணாமைக்கு உள்வரிக் கோலத்தோடு வருதல் வேண்டிற்று. உறுதுணை - தன்பா லுறுகின்ற துணை.

இதுவுமது

218-224 : மன்னவன் ......... பெற்றியும் உண்டென

(இதன்பொருள்) பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - உலகிற்றோன்றிய பல்வேறுயிர்களையும் தனதொரு பிளந்த வாயினாலேயே உண்டொழிக்கும் கொடுந்தொழிலையுடைய கூற்றுவன்; மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - சோழமன்னனுடைய செங்கோன்மையை மறுத்துத் தனக்கியல்பான ஆணுருவோடு இந் நகரத்துட் புகுதற்கு அஞ்சி; ஆண்மையில் திரிந்து - தனது ஆண் தன்மையில் பிறழ்ந்து; அருந் தொழில் திரியாது - பிறர் செய்தற்கரிய தனது உயிர் பருகுந் தொழிலிலே மாறுபடாமல்; நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் பொருந்தியதோர் உள்வரிக் கோலத்தோடே புன்முறுவல் தவழும் முகமும் கொண்டு; திவவு யாழ் நரம்பின் பண்மொழி மிழற்றிபெண்மையில் - வார்க் கட்டமைந்த யாழினது நரம்பிற்கண் பிறக்கும் இன்னிசைபோலும் இனிய மழலைமொழிகளைப் பேசிக்கொண்டு பெண்மை யுருவத்தோடும்; திரியும் பெற்றியும் உண்டுகொல் - இந்நகர மறுகில் திரிகின்ற தன்மையும் உண்டாயிற்றோதான் எனவும் கூறி என்க.

(விளக்கம்) 218. செங்கோல் அரசர் ஆட்சி நிகழும் நாட்டில் தீவினை நிகழாமையின் மாந்தர் தமக்கென வரைந்த நூறாண்டு வாழ்ந்து முடிதலின்றி, குறையாண்டில் கூற்றுவன் கைப்படா-அர் ஆகலின் அந்நாட்டில் கூற்றம்புக அஞ்சும் என்பதொரு கோட்பாடு. இதனை, கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் எனவும், (கம்பரா. நாட்டுப்- 39) கூற்றுயிர் கோடலும் ஆற்றாதாக உட்குறு செங்கோல் ஊறின்று - நடப்ப எனவும், (பெருங்கதை 4-2: 55-6) மாறழிந்து ஓடி மறலி ஒளிப்ப முது மக்கட் சாடிவகுத்த தராபதியும் எனவும் (விக்கிர. உலா: 7-8) பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இங்ஙனமாதலின் கூற்றம் மன்னவன் செங்கோலை மறுத்தற்கு அஞ்சி என்பது கருத்து. எனவே, கூற்றமும் இந்நகரத்தில் உள்வரிக் கோலம் பூண்டுவந்து தனக்கியன்ற உயிர் பருகும் கொடுந்தொழில் செய்வதாயிற்றோ என்றவாறாம்.

219. ஆண்மை-அதற்குரிய ஆணுருவம். நாண முதலிய பெண்மைப் பண்புகள் நான்குமுடைய என்க. கோலம்-உள்வரிக் கோலம். 221. புன்முறுவல் தவழும் முகத்தைக் கவிழ்த்து எனலுமாம். 222. திவவு யாழ் நரம்பின் பண் (போன்ற)மொழி என மாறிக் கூட்டுக. பெண்மை-பெண்ணுருவம். 223. உண்டுகொல் என ஈண்டும் அசைச்சொல் பெய்து கொள்க.

இனி, (202) மாருதந் திரிதரு மறுகில், (207) திங்களும், (211) வானவல்லியும், (217) கள்ளக்கமலமும், (219) கூற்றமும், திரிதலும் உண்டுகொல்? வருதலும் உண்டுகொல்? திரிதலும் உண்டுகொல்? பெற்றியும் உண்டுகொல் எனக் கூறி என்க.

இவை, மலயமாருதம் திரிதரு மறுகின்கண் கோவலனொடு திரிகின்ற நகரப்பரத்தர் நகையாடாயத்து மகளிரை நோக்கி நன்மொழி கூறித் திளைத்தவாறாம். இவற்றுள் அற்புத அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி முதலியன வந்து இன்புறுத்துதலறிக.

விருந்தும் மருந்தும்

224-234: உருவிலாளன் ....... நடுநாள்

(இதன்பொருள்) உரு இல் ஆளன் ஒருபெருஞ் சேனை - உருவமில்லாத காமவேளினுடைய ஒப்பில்லாத பெரிய சேனையாகிய பொதுமகளிர்; இகல் அமர் ஆட்டி - ஆடல் காரணமாகத் தம்மோடு மாறுபட்டுத் தொடுத்த போரினை, முன்கூறியவாறு புகழ்ந்து சொல்லுதலாகிய அம்புகளாலே வென்று; எதிர்நின்று விலக்கி - அவர் போகாவண்ணம் எதிர்நின்று தடுத்து முயங்குதலாலே; அவர் எழுது வரிக் கோலம் - அப்பொது மகளிருடைய முலை முதலியவற்றில் எழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்று; முழு மெயும் உறீஇ - தமது மார்ப முழுவதும் பதியா நிற்பவும்; விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடன் உறைவு மரீஇ - அவர்தாம் விருந்தினரோடு வந்து புகுந்தமையானே ஊடுதற்கிடனின்மை கண்டு யாது மறியார் போன்று முகமலர்ந்து வரவேற்று விருந்தோம்பிய பின்னர்ப் பெரிய தோளையுடைய தங்கணவரோடு உறைதலையும் பொருந்தி இவ்வாறு, ஒழுக்கொடு புணர்ந்த - இல்லற வொழுக்கத்தோடு கூடிய; வடமீன் கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததி போலும் கற்பையுடைய அக்குல மகளிரின் சால்புடைமை கண்ட அக்கணவன்மார் தாமே அவரை நன்கு மதித்தவராய்த் தமது நெஞ்சத்தை நோக்கி; மாதர் வாள் முகத்து மணித் தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை - இம்மாதருடைய ஒளி பொருந்திய முகத்து நீலமணி போலும் இதழையுடைய நீலமலர்கள் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான கரிய கண்களின் கடையில் நமபால் ஊடல் காரணமாக உண்டான சிவப்புத்தான்; விருந்தின் தீர்ந்திலது ஆயின் - நம்மோடு வந்துற்ற அவ்விருந்தினாலே தீர்ந்த தில்லை யாயின்; மாநில வரைப்பு - இறப்பையும் தவிர்க்கும் மருந்துகள் பலவற்றைத் தருகின்ற பெருமையுடைய இந்நிலவுலகந்தானும், மாவதும் மருந்து தருங்கொல்-இதற்கு மாதேனும் ஒரு மருந்தைத் தரவல்லதாமோ? ஆகாதுகாண்! என்று கூறி; கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் - செயலற்று நடுங்காநின்ற அவ்விந்திர விழவின் இடைநாளிலே என்க.

(விளக்கம்) 224. உருவிலாளன் - காமவேள். அவனுடைய பெருஞ் சேனை யென்றது, முன்னர் (198-9) புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து, மறுகிற்றிரியும் நகையாடாயத்துப் பொது மகளிரை இவர் தாம் அனைவருடைய நெஞ்சத்தையும் சுழல்வித்துப் பணிய வைக்க வல்லராதல் பற்றி இச்சேனை மன்னர்தம் மறவர் சேனையினும் சிறந்த சேனை என்பார் ஒருபெருஞ் சேனை என்று விதந்தார். 225. இகலமர் - மாறுபட்டொழுகும் ஊடற் போர். ஆட்டி-வென்று. (ஆடு-வென்றி.) அமர் என்றமையால் இச்சேனையை வெல்லுதற்கு மாயப்பணி மொழிகளாகிய அம்புகளைத் தொடுத்து வென்று என்க. அவையாவன : (204) கருமுகில் சுமந்து என்பது தொடங்கி (223) பெற்றியும் உண்டென நிகழும் இங்கித மொழிகள். 225. ஊடலால் முகங்கொடாது போக முயல்வாரை எதிர்நின்று இங்கிதம் பேசிவிலக்கி என்றவாறு. எதிர்நின்று விலக்கியவழி அவர் ஊடல் தீர்ந்தமை அவர் தம் முறுவற் குறிப்பாலுணர்ந்து மார்போடு மார்புறத் தழுவுதலான் அவர்தம் 226. எழுதுவரிக் கோலம் முழுமெயும் உறப்பெற்று என்றவாறு. 227. மனைவியர் ஊடியிருப்பர் என்றஞ்சி அவ்வூடல் தீர்க்கும் மருந்தாகும் விருந்தினரையும் உடன்கொடு புகுவாரைப் பெருந்தோள் கணவர் என்றது இகழ்ச்சி. 228. பகற் பொழுதெல்லாம் பரத்தையரோடு ஆடிவருதலறிவாரேனும் விருந்தொடு வந்தமையின் ஊடற்கிடமின்றி அவ்விருந்தோம்பும் நல்லறத்தை முகம் மலர்ந்து செய்கின்றமை கருதி அம்மகளிரை மனமாரப் பாராட்டுவார் அடிகளார் அவரை உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் என்று வானளவு உயர்த்துப் புகழ்ந்தார் என்க.

230. விருந்து கண்டமையால் முகமலர்ந்து வரவேற்றமை தோன்ற மாதர் வாண்முகம் என்றார். மணி - நீலமணி. போது - மலர். 231. இவற்றினழகிற்கு யாமொவ்வோம் என்று குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய கண்கடை என்க. செங்கடை தீர்ந்திலது என்றாரேனும் கடைக் கண்ணின் சிவப்புத் தீராதாயின் என்பது கருத்தாகக் கொள்க.

இனி, பகற் பொழுதெல்லாம் பரத்தையராகிய நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து அவர்தம் எழுதுவரிக் கோலம் தம் மெய்ம் முழுதும் ஏற்றுவந்த இக்காளையர் தாஞ்செய்த தவற்றையும், அவ்வட மீன்கற்பின் மனையுறை மகளிர் அவற்றை ஒரு சிறிதும் பொருட் படுத்தாது விருந்தோம்பித் தம்மோடு உடனுறைவு மருவிய பெருந்தன்மையையும் கருதியவழித் தம் நெஞ்சு தம்மையே சுடுதலாற்றாராய் அம்மவோ இவ்விருந்தினர் இலராயின் நம்நிலை என்னாம் என்று கழிந்தது கருதி இரங்குவாராயினர். கோவலனும் தான் செய்த தவற்றினைக் கண்ணகியார் முன்னிலையிலேயே வறுமொழியாள ரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக்கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப்புண்டு பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ என்றிரங்கிக் கூறிக் கையற்று நடுங்கும் காலம் அண்மையிலேயே வருவதனையும் அடிகளார் ஈண்டு நினைவு கூர்ந்திருப்பர். ஆயினும், அவன் ஊழ்வினை கண்ணகியை நினைய இடந்தந்திலது. மாதவி மனைக்கே சென்றனன். ஊழிற் பெருவலியாவுள.

கண்ணகி நிலைமையும் மாதவி நிலைமையும்

235 - 240: உள்ளக ........... விழவுநாளகத் தென்

(இதன்பொருள்) விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து - மேலே நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட அவ்விந்திரவிழவின் அற்றை நாள் நள்ளிரவிலே; உள்ளகம் நறுந்தாது உறைப்ப மீது அழிந்து கள் உக நடுங்கும் கழுநீர் போல - உள்ளேயுள்ள நறிய தாதுகள் தேனை யூறிப் பிலிற்றுதலாலே அகமெலாம் நிறைந்து மேலே பொங்கி வழிந்து அத்தேன் சொரியா நிற்பக் காற்றாலே நடுங்குகின்ற கழுநீர் மலர் போன்ற; கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் - கண்ணகியுடைய கரிய கண்ணும் மாதவி யுடைய சிவந்த கண்ணும்; உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன - தம்முள்ளத்தே நிறைந்த குறிப்பினை உள்ளத்தினூடேயே மறைத்துக் கொண்டு அவற்றின் விறலாகிய கண்ணீரை மட்டும் சொரியலாயின; எண்ணுமுறை - முன்னிறுத்த முறையானே அவ்விருவர் கண்களும்; இடத்தினும் வலத்தினும் துடித்தன - நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன என்க.

(விளக்கம்) (234.) நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட (240) விண்ணவர் கோமான் விழவு நாளிடைப்பட்ட அந்நாளின் நள்ளிரவிலே என இயைக்க. 225-6. கழுநீர் - குவளை. இது கருங்குவளை எனவும் செங்குவளை எனவும் இருவகைப்படும். கண்ணகி கருங்கண்ணிற்கும் மாதவி செங்கண்ணிற்கும் உவமையாதற் பொருட்டு அடைபுணர்த்தாது வாளா கழுநீர் என்றோதினர். இனி, குவளை மலரின் உள்ளகத்துள்ள தாது உறைப்ப என்றார் இருவர் உள்ளத்தும் உள்ள குறிப்புக்கள் வெளிப்படுப்ப அவற்றின் மெய்ப்பாடாகக் கண்ணீர் உகுத்தலின் என்க. மீதழிதல்-மேலே பொங்கி வழிந்து வீழ்தல். கண்ணகிகண் கணவனது பிரிவாற்றாது புற்கென்றிருத்தலின் கருங்கண் என்றார். மாதவி கண்கள் கூட்ட மெய்திச் சிவந்திருத்தலின் செங்கண் என்றார். இருவர் உள்ளத்தும் இக்கண்ணீர்க்குக் காரணமாக நிறைந்துள்ள உணர்ச்சிகளை இருவர்க்கும் பொருந்துமாற்றால் ஆகுபெயரால் நிறை - என்றார். நிறை - நிறைந்த பண்பு. அவையாவன நிரலே துன்பமும் இன்பமும் ஆம் இரண்டின் மெய்ப்பாடுகளும் கண்ணீருகுத்தலேயாம். ஆயினும், ஒன்று துன்பக் கண்ணீர், மற்றொன்று இன்பக் கண்ணீர். இருவகைப்பட்ட உணர்ச்சிகளையும் மறைத்துக்கோடல் மகளிர்க்கியல்பாதல்பற்றி இருவர்க்கும் பொதுவாக உள்நிறை அகத்துக் கரந்து நீருகுத்தன என்றார். இருவர் கண்களும் துடித்தன; ஒருத்திக்கு இடக்கண் துடித்தது. மற்றொருத்திக்கு வலக்கண் துடித்தது. நிரலே இவை நன்னிமித்தமும் தீநிமித்தமுமாகும். கண்ணகி பிரிந்த கணவனை என்றென்றும் பிரிவின்றி எய்த நிற்பவள் ஆதலின் அவட்கு நன்னிமித்தம் ஆயிற்று. மாதவி கோவலனை இனித் துவரப்பிரிபவள் ஆதலின் அவட்குத் தீநிமித்தம் ஆயிற்று.

இனி இக்காதையை (3) மடந்தை (4) போர்த்த படாஅத்தைப் போக நீக்கிப் (6) ஒளி உச்சித் தோன்றி, (6) பரப்ப, (65) சொரிந்து (70) ஆடி (75) பெயர (86) நலங்கொளவைத்து (88) ஊட்ட, (110) மண்டபமன்றியும் (140) மன்றத்தும் பலியுறீஇ (142) ஏற்றிச் (144) சாற்றி (146) எடுத்து (160) ஈண்டிக் (162) கொள்கென (168) ஆட்டக் (188) களிசிறந்த வியலுளாங்கண், (203) திரிதரு மறுகில் (223)  உண்டு கொலென்று (224) சேனை (225) ஆட்டி விலக்கி (226) விலக்கி (226) உறீஇப் (227) புக்க கணவர் (234) நடுங்கு நாளாகிய (240) விழவு நாளகத்துக் (237) கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் (238) கரந்து நீருகுத்தன அவை நிரலே (239) இடத்தினும் வலத்தினும் துடித்தன என வினைமுடிவு செய்க.

இந்திரவிழவூரெடுத்த காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar