பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
காஞ்சிபுரம் காலுார், மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அடுத்த, காலுார் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா, வியாழக்கிழமை துவங்கியது. முதல் நாள், அக்கிராமத்தில் உள்ள கிராம தேவதையான ஆலியம்மனுக்கு, ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. மறுநாள் அம்மனுக்கு காப்பு கட்டுதல், பூங்கரம் ஊர்வலம் நடைபெற்றது. ஆடித் திருவிழாவில் நிறைவு நாளில், நேற்று மாலை, மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக, ஆலியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து, ஊருக்குள் இருக்கும் சாமாத்தம்மன் கோவிலை சென்றடைந்து ,சிறப்பு வழிபாடு முடிந்து, மாரியம்மன் கோவிலில் ஊர்வலம் முடிந்தது. இத்திருவிழாவில், நேர்த்திகடன் செலுத்த ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி வாகனங்களில் தொங்கியவாறு சென்றனர். இதை தொடர்ந்து, இரவு, மாரியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.