பதிவு செய்த நாள்
30
ஆக
2018
11:08
பேரூர் : மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ரோப்கார் வசதி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மலை மீது குடி கொண்டுள்ள முருகனை, படியேறி சென்று தரிசிக்க ஆவலிருந்தும், உடல் வலு இல்லாத வயோதிகர்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தவிக்கின்றனர். கோவை, மருதமலை திருக்கோவிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு பதினைந்து கோடி ரூபாய்க்கும் மேல், வருவாய் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் போதுமானதாக இல்லை; அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிடப்பில் கிடக்கும் ரோப்கார் திட்டம், இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை நிரூபிக்கிறது.
அதென்ன ரோப்கார் திட்டம்?: மலையின் மீது உள்ள கோவிலுக்கு, படியேறி செல்ல முடியாத பக்தர்கள், கீழிருந்து சிரமமில்லாமல் செல்ல உதவுவதே ரோப்கார் திட்டம். பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த வசதி ஏற்படுத்தப்படும் என, கடந்த ஆண்டு பிப்ரவரியில், அறநிலையத்துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி அறிவித்தார். இதற்கான ஆய்வு முடித்து, திட்ட மதிப்பீடு தயாரித்து, ஐந்து நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்றெல்லாம் ஆசையை கிளப்பினார். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், திட்டம் இன்னும் நகரவில்லை. ரோப்கார் வசதியே இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நகரும் படிக்கட்டு வர உள்ளதாகவும், விரைவில் ஆய்வு நடத்தப்படும் எனவும், நடப்பாண்டு பிப்., மாதத்தில் கொளுத்திப்போட்டனர்; அந்த திட்டமும் புஸ்வாணமாகி விட்டது.
பக்தர்கள் தவிப்பு : கோவிலில், நடந்து முடிந்த ஆடி கிருத்திகை விழாவின் போது, பார்க்கிங் இடம் நிரம்பி வழிந்ததால், காரில் சென்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அடிவாரத்தில் இருந்து, 2 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட படிக்கட்டுகள் வழியாகவும், 3 கி.மீ., தொலைவுள்ள அடர் வனத்தின் வழியாகவும், முதியோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் சகிதம், சிரமத்துடன் நடந்தே சென்றனர். பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இக்கோவிலுக்கு, பழநியாண்டவர் கோவிலில் உள்ளது போல், ரோப்கார் வசதி ஏற்படுத்தினால், சிறந்த சுற்றுலாதலமாக மாறும். டிக்கெட் கட்டணம் வாயிலாக கோவிலுக்கு, ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும்.
எனக்கு எதுவும் தெரியாது: மருதமலை கோவில் துணை ஆணையர் மேனகா (பொறுப்பு) கூறுகையில், பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ரோப்கார் திட்டம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. ஆவணங்களை பார்த்து, அதில் உள்ள நடைமுறைகள் குறித்து விசாரித்து அறிந்த பின் தெரிவிக்கிறேன், என்றார்.