பிரளயம் காத்த விநாயகருக்கு செப்.13ல் இரவு முழுவதும் தேனபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2018 05:08
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13ம்தேதி இரவு முழுவதும் தேனபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும்,வரலாற்று புகழுடையதும், மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாக திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவரை தேனபிஷேக பெருமான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தை கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல் பொருட்களை தெய்வமேனியை கொண்டவராக பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை தொடங்கும் தேன் அபிஷேகம் விடிய விடிய தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பிரளயம் காத்த விநாயகருக்கு விழாக்குழுவினரால் 34 வது ஆண்டாக வருகிற 13ம்தேதி விநாயகர் சதுர்த்தித் திருநாளான வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 26 ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இன்று கோவிலில் கணபதி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துகழகம் கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகளை திருப்புறம்பியத்திற்கு இயக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.