பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
ஈரோடு: கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, ஈரோடு திண்டல் யு.ஆர்.சி.,பள்ளி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. தூப ஆரத்தியுடன் தொடங்கி, ஹரிநாம சங்கீர்த்தனம், கிருஷ்ண கதா உபன்யாசம், துளசி ஆர்த்தி, சந்தியா ஆர்த்தி, மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி என, இரவு வரை, நிகழ்ச்சிகள் நடந்தன. கிருஷ்ண பக்தி இயக்கத்தினர், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், ஹரிநாம சங்கீர்த்தனங்கள் பாடி வழிபட்டனர். முன்னதாக விழா மண்டபத்தில், ராதா கிருஷ்ணன், பூரி ஜெகநாதர், சுபத்ரா, பலராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பல்வேறு வகையான இனிப்பு பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஓவிய போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற, பள்ளி மாணவ, மாணவியர், 40 பேருக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏ.ஈ.டி., பள்ளி முதல்வர் முருகசாமி, இஸ்கான் அமைப்பின் ஈரோடு துலைவர் சத்புஜாபிரபு பரிசு வழங்கினர். ஈரோடு, திண்டல், வில்லரசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.