பதிவு செய்த நாள்
14
செப்
2018
11:09
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி, மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவி லில், சதுர்த்தி விழா நேற்று, (செப்., 13ல்) கோலாகலமாக நடைபெற்றது. இதில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தரிசனம் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு தாலுகாவில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், பெரிய மாந்தோப்பு இருந்தது. அங்குள்ள மரம் ஒன்றின் அடியில், சுயம்புவாக விநாயகர் உருவம் தோன்றியது. ஊர் மக்கள் வழிபாடு செய்ய துவங்கினர்.அதைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி, என்.ஜி.ஓ., காலனி, ரயில்வே காலனி பகுதி யில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் மற்றும் லலிதாம்பிகா சமேத, மாமரத்து ஈஸ்வரர் கோவிலை கட்டினர். இதன் திருப்பணிகளை, திருமுருக கிருபானந்த வாரியார் துவக்கினார்.
இங்கு, ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன், மாமர சுயம்பு சித்தி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், கோவிலுக்கு வந்து, கோ பூஜை செய்து, விநாயகரை வணங்கினார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், தலைமை அர்ச்சகர் முத்துக்குமார சிவாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.