பழநி: பழநி முருகன்கோயில் உற்ஸவர் சிலைமோசடி வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் விசாரணை துவங்கும், என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்க வேல் தெரிவித்தார்.
பழநி முருகன் கோயிலில் 2004ல், ஐம்பொன் உற்ஸவர் சிலையில் தங்கம் மோசடி தொடர்பாக ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரிக்கிறார். இவ்வழக்கில் ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா உட்பட நான்கு பேர் கைதாகி ஜாமினில் வெளியே உள்ளனர். அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சிக்கியுள்ளார்.அரசியல் தலையீடு காரணமாக வழக்கு கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், நேற்று (செப்.,16ல்) பழநி முருகன்கோயிலில் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் முடிக்காணிக்கை செலுத்தினார்.அவர் கூறுகையில், வழக்கில் தொடர்பு உடையவர்களை கைது செய்துள்ளோம். டி.எஸ்.பி.,க்கு பதில் கூடுதல் எஸ்.பி., மூலம் இறுதிக்கட்ட விசாரணை ஓரிரு வாரங்களில் துவங்கும், என்றார்.