பதிவு செய்த நாள்
18
செப்
2018
10:09
திருப்பதி : திருமலையில் நேற்று நடந்த கருடசேவையை காண, ஆயிக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் குவிந்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், செப்.,13 முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று காலை, மோகினி அவதாரத்தில், ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து, கையில் கிளியை ஏந்தியபடி, மலையப்பஸ்வாமி, பல்லக்கில் வலம் வந்தார்.
மோகினி அவதாரம் என்பதால், வாகன சேவை, கோவிலுக்குள் இருந்து துவங்கியது. மோகினி அவதாரத்திற்கு துணையாக, வெண்ணை உருண்டையை கையில் ஏந்திய ஸ்ரீகிருஷ்ணரும், மாடவீதியில் வலம் வந்தார். மாலையில், உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், 1,008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவில், பிரம்மோற்சவத் தின் மிக முக்கிய சேவையாக கருதப்படும் கருட வாகனத்தில், மலையப்ப ஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தார். ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும், 32 கிலோ எடையுள்ள சகஸ்ரகாசுமாலை, லட்சுமி ஆரம், மகரகண்டி உள்ளிட்டவை, மலையப்பஸ்வாமிக்கு அணிவிக்கப் பட்டது. கருடசேவையின் போது, உற்சவமூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. கருட சேவையை காண, காலை, 10:00 மணியிலிருந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாடெங்கிலும் இருந்து வந்திருந்த கலைக் குழுவினர், கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.