பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம், நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியசுவாமி கோவிலில் ராஜ கோபுரம், படிகளிலுள்ள அனைத்து மண்டபங்களும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதை முன்னிட்டு, கடந்த மாதம் 29ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 30ம் தேதி காலை கோ பூஜையும், 31ம் தேதி காலை லட்சுமி, தனபூஜையும், பிப்., 1ம் தேதி சிறப்பு கோ பூஜைக்கு பின், மகா தீபாராதனையும் நடந்தது. கடந்த 3ம் தேதி காலை வாஸ்து சாந்தி பூஜையும், மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடும் நடந்தன. மாலை 6 மணிக்கு, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும், இரவு 7 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம், 20ம் பட்ட சுவாமிகள் சிவஞான பாலயசுவாமிகள் முன்னிலையில், முதல் யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு 10.30 மணிக்கு, கோவை ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, மயிலம் ஆதீனம் ஆகியோர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். தொடர்ந்து நேற்று முன்தினம், காலை 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 8,30 மணிக்கு, நான்காம் யாக சாலை பூஜையும், மாலை 6 மணிக்கு, ஐந்தாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. இன்று (6ம் தேதி) காலை 9 மணிக்கு மேல், 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், திருமடத்தை சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.