பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
குறிஞ்சிப்பாடி : வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நாளை 7ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை, தருமசாலையில் மகாமந்திரமும், 2ம் தேதி முதல் நேற்று வரை, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதலும் நடந்தன. இன்று காலை 7.30 மணிக்கு தருமசாலை, மருதூரில் உள்ள வள்ளலார் அவதார சன்னிதி, தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி சன்னிதிகளில், அந்தந்தப் பகுதி கிராம மக்களால், சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஞானசபையில் பார்வதிபுரம், கிராம மக்கள் சார்பில் சன்மார்க்க கொடியை ஏற்றத்துடன் தைப்பூச ஜோதி தரிசன விழா துவங்குகிறது. இரவு தருமசாலை பிரசங்க மேடையில், திருஅருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. நாளை 7ம் தேதி காலை 6, 10, பகல் 1 மணி, இரவு 7, 10 மணிக்கும், மறுநாள் 8ம் தேதி காலை, 6 மணி ஆகிய ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைப்பூச ஜோதி தரிசன விழாவில், காலை 11 மணிக்கு தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க கருத்தரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் சம்பத், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் பேசுகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் கோட்டம் போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.