பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
விழுப்பம், சிறப்பு, மேன்மை, விழுப்பொருள். மேன்மையின் அல்லது நுண்ணியப் பொருள்: எனவே தனிமனிதச் சடங்குகளும் சமூக குழுமம் வெற்றிகளை அறிவித்திலும் அரசு சார்ந்த அல்லது சாரா பிற வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளை விழா என அழைப்பார்கள். இறை சார்ந்த நிகழ்வுகளைத் திருவிழா அல்லது உற்சவம் எனவும் கூறுதல் வழக்கத்திலிருக்கிறது.
மனிதர்களைப் பொறுத்தவரை அதிகமான பல்நிலை ஆசைகளும், உறவுகளில் அதிகப் பற்றுதலும் கொண்டு, ஒருவித அறியாமை மயக்கம் கொள்வதே மனித இயல்பு என்ற போதிலும், மும்மலங்களிலிருந்தும், முன்வினைகளிலிருந்தும் முழுவதும் விடுதலை பெற இறையருளை நாடுவதே சாலச் சிறந்ததெனச் சான்றோர்களும், அருளாளர்களும் சாற்றியபடி, ஆன்மீக வழி நடப்பதால், அமைதியான, நிறைவான, மகிழ்வான வாழ்க்கையைப் பெறலாம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை என அனுபவ அறிவால் அறிந்துணர்ந்தோர் அறிவார். அவ்வித இறை நாட்டத்தில் திளைக்கக் கோவிலுக்குச் சென்றவர்க்கும், செல்லவியலாதிருப்போர்க்கும் அருள் பாலித்திட இறைவனே அவரவர் வாழுமிடங்களுக்கு வாசலுக்கு வலியச் செல்லும் பாங்காய் திருக்கோவில். திருவிழாக்களும் இறையின் திரு உலாக்களும் நடைபெறுகின்றன என்பதை சாம்பவீ தீக்ஷை என ஆகமம் கூறுகிறது.
சேக்கிழார் பெருமான் கூற்றின்படி - விழாக்களின் அவசியமும், அவற்றினால் மாந்தர் பெறும் புண்ணியங்கள் பற்றியும் விவரிக்கிறார்.
""மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன் மதி சூடும்
அண்ண லார்அடி யார்தம்மை, யமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மை யாமெனி னுலகர்முன் வருகென வுரைப்பர்
"விழாமலி மூதூர் என்ற சிறப்பினைப் பெற்ற நம் மதுரைத் திருக்கோயில் விழாக்கள் முழுதுமே சிவாகமங்களில் செப்பிய முறைப்படியே, நிகழ்வு பெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் எட்டுக்கால தினசரி பூஜைகளும் அந்த நாளின் விசேடத்தைப் பொறுத்து தினசரி விழாவும், ஒவ்வொரு வாரத்திலும் 15 நாட்களுக்கு ஒரு முறையும் பட்சம், ஒவ்வொரு மாதத்திலும் அதனதற்குரிய விழாக்களுமாக ஒரு வருடத்தில் 12 மாதங்களில் தவறாது நடைபெற்று வரும் திருவிழாக்களோடு, வருடத்திற்கு ஒருமுறை பெருவிழாவும் பிரம்மமோற்சவம் வெகு சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.
அங்கயற்கண்ணி அம்மை ஸ்ரீ மீனாக்ஷி யின் திருமண விழா முன்னதாய் நிற்பதும், மாந்தர்தம் வினைதீர்க்க பல்லுயிர்க்காயும் வந்து விளையாடிய சொக்கேசச் சுந்தரரின் துதிபாடும் விழாக்களும் அடியார் திருக்கூட்டம் அறுபத்து மூவர்தம் பெருமை பாடப் பணிந்தேற்றும் விழாக்களும் என, யாவற்று விழாக்களும் திரு-விளை-ஆடற்புராணம் அளித்த அடிப்படைக் கூற்றுகளே எனலாம்.
ஆகமம் மாறாத ஆலயம் என்றால் அது மதுரை திருவாலவாயன் கோவிலே. அங்கு காலம் காலமாய் நிகழும் நிகழ்ந்து வரும் திருவிழாக்களைப் பற்றி முழுதும் சரியாகத் தெரிந்து கூறிவிட முடியாது. எனினும் பார்த்து கேட்டுணர்ந்தவரை கூறப்புகுவோம்.