“நவக்கோள் நாயகியின் நவ நாள் விழா என்ற இவ்விழா தேவிக்கே உரித்தான திருவிழாவாகும்”
ரக்ஷா பந்தனம் - காப்பு கட்டி துவங்கும் இவ்விழா ஒன்பது நாட்கள் நடைபெறும். இவ்வழகு விழாவில், அன்னை ஸ்ரீ மீனாக்ஷி அன்னை பராசக்தியாய் வெளிப்பட்டு ஒன்பது நாட்களிலும் ஒன்பது திருக்கோலக் காட்சி அருள் பெற்றாள். இவ்விழா கொலுச்சாவடியில் நடைபெறும் இந்நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களால் இசை நிகழ்ச்சி மூலம் ஆன்மீகச்சிறப்பு சொற்பொழிவு போன்றவையும் நிகழும். மஹா நவமியன்று மூலவர்க்கும் உற்சவர்க்கும் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிறைவுபெறும். நவராத்திரி விழா பற்றி
புரட்டாசி மாதம் மஹாளய அமாவசைக்கு மறுநாள் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட் பண்டிகையின் முதல் மூன்று வெற்றிகள் கிடைக்க வேண்டி துர்க்கா தேவியையும், அதற்கு அடுத்த மூன்று நாட்களில் செல்வத்தை வேண்டி மஹா லட்சுமியையும் இறுதி மூன்று நாட்களில் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபடுவார்கள். ஒன்பதாம் நாளின் இரவில் பலர் ஆயுத பூஜை எனவும் கொண்டாடுவர்.
நவ நாயகியர்களின் அருட்கோல வடிவுகள்
முதல் நாள் - மஹேஸ்வரியாய்
இரண்டாம் நாள் - கௌமாரியாய்
மூன்றாம் நாள் - வராஹியாய்
நான்காம் நாள் - மஹாலட்சுமியாய்
ஐந்தாம் நாள் - வைஷ்ணவியாய்
ஆறாம் நாள் - இந்திராணியாய்
ஏழாம் நாள் - பிராஹ்மியாய்
எட்டாம் நாள் - சிம்ஹ வாணியாய்
ஒன்பதாம் நாள் - சாமூண்டிஸ்வரியாய் காட்சியருளி பிரபஞ்ச நாயகி யாவற்று ஜீவர்களுக்கும் இக பர வாழ்விற்கென திருவருள் நல்குகிறாள்.
புராணத்தில் நவராத்திரி பற்றி
வைணவத்தில், மது-கைடபர் என்ற இரு அசுரர்களை மஹா விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தினால் அழித்த நாளை நவராத்திரியின் முதல் நாளாய்க் கொண்டாடுகின்றனர் என்றும், சைவ சமயத்தில் சும்ப நிசும்ப வதம் நிகழ்த்திய தேவியின் நாள் என்றும் மஹிஷாசுரனை அழிக்கும்படி தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவி எட்டு லட்சுமி கோலத்தில் அம்சமாக எட்டு நாள்கள் போர் புரிந்தும் அவனை அழிக்க முடியாததால், இறுதியாக அன்னை ஒன்பதாவது நாளில் தானே அவனை வென்று அழித்ததால் மஹிஷாசுர மர்த்தினி எனப் பெயர் கொண்டாள் என்றும், அந்நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவதே நவராத்திரி என்றும் புராணம் கூறுகிறது. ஷண்மதம்..... என்ற ஆறு மதத்தினர் சாக்தர்களோடு சேர்ந்து தேவி வழிபாட்டில் மிக உன்னதமானது என்று ஏற்றுக்கொண்டு வழிபடுவதால் நவராத்திரி விழா அன்னையின் பெருமை கூறும் பண்டிகையாகும்.