பதிவு செய்த நாள்
27
செப்
2018
12:09
கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி கிராமத்தில், பூசாரி சொன்ன ஆரூடத்தை நம்பி, பெண்ணுக்கு நாகப் பாம்பு பிறக்கும் என, எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா, 42;
இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், 45, என்பவருக்கும், 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை.
பக்கத்து கிராமமான வேங்காம்பட்டியில், பூசாரி ஒருவரிடம், சில மாதங்களுக்கு முன், தம்பதி வாக்கு கேட்டனர். பூசாரி, கோகிலா வயிற்றில், நாகப் பாம்பு வடிவில் குழந்தை உள்ளது. வரும் பவுர்ணமி அதிகாலை, 12.20 மணிக்கு, இவர் வயிற்றில் நாகப் பாம்பு பிறக்கப் போகிறது என, ஆரூடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக கோகிலா நம்பியுள்ளார். பூசாரி சொன்ன ஆரூடம், அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. பவுர்ணமியான, 25ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கோகிலா வீட்டு முன், ஏராளமானோர் திரண்டனர். லாலாப்பேட்டை போலீசார் விரட்டியும், கூட்டம் கலையவில்லை. பூசாரி குறிப்பிட்ட, 12:20 மணியாகியும், கோகிலாவிடம் எந்த மாற்றமும் இல்லை.
இதனால், திரண்டிருந்த மக்கள், ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். போலீசார், ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோகிலாவை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு, அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பம் இல்லை என்பதை உறுதி செய்தனர்.