பதிவு செய்த நாள்
28
செப்
2018
02:09
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி, கி.பி. ஆறாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் காஞ்சியப் பல்லவர் உதவியுடன் ""கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரர்களைப் வென்று கி.பி. 590-ல் மதுரையைக் கைப்பற்றினான். கி.பி. 640-ல் அபிகேசரி என்ற கூன்பாண்டின் பட்டத்திற்கு வந்தான். மணிமுடிச்சோழனை வென்று அவரது மகள் மங்கையர்க்கரசியாரை மணந்து கொண்டார். ஸ்ரீ மீனாக்ஷி யம்மனுக்கும் அக்கால அளவில் தான் தனிச்சன்னதி அமையப் பெற்றதாக உள்ளது. சமண மதம் தழுவிய கூன்பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்து வைத்தவர் திருஞானசம்பந்தர். அவர் தம் ஆழ்ந்த சைவத்தொண்டால், இறைத்திருவருளும் கூடி சைவம் தழைக்கச் செய்தார். பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கள்வன் என ஆராயாது தீர்ப்பளித்தப் பின் உண்மை அறிந்து தன் தவறான தீர்ப்பின் காரணமாக, நீதி தவறியதை உணர்ந்து வருந்தி பட்டத்தரசியும், அவனும் உயிர்துறந்தனர். கண்ணகி மதுரையைத் தன் கற்புத்தீயால் அழிந்ததெனவும், இம்மன்னன் காலத்திய வரலாறு கூறுகிறது.
கி.பி. 640-கூன்பாண்டியன், கி.பி. 670-கோச்சடைரணவீரன், கி.பி. 765-நெடுஞ்செழியன் பாரந்தகன், கி.பி. 792-குணமகாராஜன், கி.பி. 833 சீமாரவல்லபன், கி.பி. 900-ராஜசிம்மன், கி.பி. 946-வீரபாண்டியன், பின் பாண்டியர்கள். சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றாசர்கள் ஆயினர். கி.பி. 1070 முதல் கி.பி. 1081 வரை பின் பாண்டியர்களின் தனி ஆட்சி. கி.பி. 1081 முதல் முதலாம் குலோத்துங்க சோழன், பாண்டியநாட்டின் தலைநகர் மதுரையைக் கைப்பற்றினான். இச்சோழனுக்கு கப்பம் கட்டியபடி பாண்டியன் சடையவர்ம குலசேகரன், பராக்கிரம பாண்டியனும் நாட்டை இரு பிரிவுகளாக்கி ஆண்டனர். இவ்விரு மன்னர்களும் ஒருவரை ஒருவர் பகை கொண்டு பலமுறை மோதிக்கொண்டனர். இதற்கு இடையில் பராக்கிம பாண்டியன் இலங்கை அரசனிடம் உதவி கேட்டான். அவ்வுதவி வரும்முன் குலசேகரபாண்டியனால் பராக்கிரம பாண்டியன் கொல்லப் படுகிறான்.
இலங்கை அரசுப்படையில் உதவியால் குலசேகரபாண்டியன் தோற்கடிக்கப்பட்டு இறந்துபட்ட பாரக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியனுக்கு முடிசூட்டி ஈழம் திரும்பினார்கள். பின், கி.பி. 1167 சோழர் உதவியுடன் குலசேகரபாண்டியன் மீண்டும் ஆட்சி புரிகிறான். இம்மன்னன் காலத்தில் மதுரை திருக்கோவில் திருப்பணி வரலாறு பற்றி குறிப்புகள் எதும் காணப்படவில்லை. பின்னர் வந்த மாறவர்ம குலசேகரபாண்டியன் காலத்தில் கி.பி. 1168 முதல் 1175 வரை நடந்த திருக் கோயில் பணிகள்: சொக்கநாத பெருமானின் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பரிவார தெய்வங்களின் சன்னதிகள், புகழ்பெற்ற கோட்டை, அகழியும் கோட்டையைச் சுற்றி வெளியே நாற்புரமும் பெருமான், திருமால் கோயில், ஐய்யனார், சப்த மாதர் மற்றும் விநாயகர் ஆலயங்களைக் கட்டுவித்திருக்கிறான். இத்தனையும் சிறப்புறச் செய்து முடித்த மன்னன் திருக்கோயிலுக்குக் குடமுழுக்கும் செய்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றில் அக்குறிப்புகள் இல்லை.
கி.பி. 1216-1268-ல் மாறவர்ம சுந்தர பாண்டிய மன்னனால் கிழக்கு ராஜகோபுரம், இம்மையில் நம்மை தருவார் கோயில், கபாலிதிருமதில், முதலியவைகளைக்காட்டி இருக்கிறான். இவரும் ஒரு குடமுழுக்கு விழா செய்யாமல் இருந்திருப்பாரா? ஆனால் குறிப்புகள் இல்லை. கி.பி. 1253-1268-ல் விக்கிரமபாண்டிய அரசன் சித்தர் கோயில், சொக்கர் அட்டாலை மண்டபங்களை உருவாக்கி உள்ளார். கி.பி. 1268-1310-ல் மாறவர்மகுலசேகரபாண்டியன் ஸ்ரீ மீனாக்ஷி சோமசுந்தரர் திருக்கோவிலுக்குப் பலப்பல திருப்பணிகளைச் செய்துள்ளார். இவர் காலத்திலும் குடமுழுக்கு நடைபெற்ற குறிப்புகள் இல்லை
குலசேகரபாண்டிய மன்னனின் மனைவியர் இருவர் சுந்தர பாண்டியன் என இரு இளவரசுகள் ஆவர். இவர்கள் ஆட்சி பொறுப்பிற்குப் பின் மதுரை மூன்று ஆண்டுகள் வளர்ச்சியற்ற, அதேசமயம் பொறுப்பற்ற ஆட்சி நடந்தது என்றே கூறலாம். இவ்விரு மன்னர்களின் பகை மற்றும் ஒற்றுமைக்குறைவினால் மாற்றாரால் எளிதாய் மதுரையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்ததெனலாம்.
கி.பி. 1529 – -1564. விஸ்வநாத நாயக்கர் கோயில் நிர்வாகத்தை அபிஷேகப் பண்டாரம் என்பவரிடம் ஒப்படைத்தார். குலசேகரப் பட்டர், சதாசிவப் பட்டர்களின் ஒற்றுமைக் குறைவும், அபிஷேகப் பண்டாரத்தின் தலைமை நிர்வாகக் குறைவும் ஒர சேர ஆலய ஆகம ஆராதனை மற்றும் நித்திய பூஜை வரை சீர்கெட்டிருந்தது. இதனை உணர்ந்த திருமலை மன்னர் தலைநகரை மதுரைக்கு மாற்றிய பின் முதலில் அபிஷேகப் பண்டாரத்திற்கு நிலம் பணங்களை கொடுத்து நிர்வாகத் தலைமையில் இருந்து நீக்கினார். பட்டர்களின் பூசல்களை தீர்த்து புதிய ஒழுங்குமுறைத் திட்டங்களை வகுத்து கோவில் நிர்வாகத்தையும் பூஜை முறைகளையும் சீர்படுத்தினார். பின் தன் மேம்பட்ட ஆன்மீகச் சிந்தனைகளின் தூண்டுதலாலும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மீது கொண்ட அளவிடற்கரிய பக்தியாலும் தொடர்ச்சியான விரிவாக்கப் பணிகளைச் செய்ய திட்டமிட்டார். அதனைச் செய்படுத்தும் வகையில் தன் அமைச்சரும் குருவும் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவருமான நீலகண்ட தீட்ஷிதருடன் கலந்து அவருடைய பரிந்துரைகளையும் ஏற்று செயல்படத் துவங்கினார். திட்டமிடலும் அத்திட்டங்களை அறிஞர் பெருமக்கள் கருத்துக் கேட்டலும் நாட்டு மக்களின் நலம் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உயர்த்துதலும் ஒரு மன்னனுக்குள்ள கடமைகளாகும் என்பதற்கு திருமலை நாயக்கர் உதாரணமாய்த் திகழ்ந்தார் என்பதே இங்கு குறிப்பிடத்தகுந்த வரலாறாகும். சைவ வைணவ பேதமின்றி இரு சமயங்களையும் ஒன்றிணைக்கும் வகையிலயே எல்லா திருப்பணிகளும் இருந்திருக்கின்றன. வரலாற்றுப்படி ஏழாம் நூற்றாண்டில் சமணம் சைவத்தை சாய்க்கப் பார்த்து சமணம் அழிந்தது. அன்றும் இன்றும் சைவம் பெரிதா வைணவம் பெரிதா என வீர சைவர்களும் வீர வைணவர்களும் இல்லாமலா இருந்திருக்கிறார்கள். எது சிறந்தது என ஆராய்ச்சியில் இறங்காமல் எதைப்பற்றியுள்ளார்களோ அதுவே உயர்ந்தது என எண்ணுவது சலனமற்ற ஒரே நோக்கே பெருநோக்காகும்.
அதுவே ஆன்மீகப் பயணத்தின் இலக்காகும். ஒரு முகப்படுத்திய மனதால் மட்டுமே எதையும் அறிய இயலும் என்பதும் இறைவன் ஒருவன் என்ற உண்மையை உணர்த்துவதே வேத அடிப்படையாகும். அதன்படி திருப்பரங்குன்றத்துப் பெருமானும் திருமாலிருஞ்சோலை அழகர் பெருமானும் திருவரங்கக் கோவிலும் திருவானைக் கோவிலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாயாரும் திருநெல்வேலி காந்திமதி அம்மையும் எப்பேதமும் இன்றி திருமலை மன்னரின் திருப்பணிகட்கு திருமணம் செய்தனர்.
தற்போதய மதுரை டவுன் ஹால் சாலை அருகில் உள்ள தெப்பக்குளம் கரிய மாணிக்கப் பெருமாளுக்கு உரியது என்றும் அப்பெருமானின் கோவிலும் அங்குயிருந்திருக்க வேண்டுமென்றும் சிலர் கூற்றாகவிருப்பினும், அக்கரிய மாணிக்கப்பெருமான் ஸ்ரீ மீனாக்ஷி யம்மன் திருக்கோயிலி னுள்ளேயே இருந்தது எனவும், அச்சன்னதிக்கும் எதிரே மொட்டைக்கோபுரத்தை வடக்குக் கோபுரம்)நோக்கிய தற்போதைய மூடியுள்ள வாயிலே நுழைவாயிலாக இருந்ததெனக் கூறுவர். சுல்தான்களின் படையெடுப்பில் மதுரை கோவில் பேரழிவை சந்தித்தபோது அச்சிதைவினில் கரியமாணிக்கனார் சன்னதி மற்றும் மண்டபங்களும் அழிந்திருக்கிறது. அம்மண்டபத்தூண்களைக் கொண்டே சங்கிலி மண்டபம் கட்டப்படடிருக்கிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் இம்மண்டபத்தூண்களில் காணப்படும் அனுமார் பஞ்சபாண்வர்கள், உருவச்சிலைகள் காணப்படுகின்றன. ஆயினும் மூலவர் கரியமாணிக்கப்பெருமானின் உருவச்சிலைகள் மட்டும் காணப்படவில்லையென வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர். திருக்கோவிந்தசாமி ஐயர் அவர்களால் 1922ல் வெளியிடப்பட்ட திருமலைநாயக்கர் சரித்திரம் என்ற நூலில் காணப்படுகிறது. இவ்விதமாகச் சிதம்பரம் பெரிய கோவில், ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோவில் ஆகிய தலங்களில் இருசமய ஒருமைப்பாட்டை ஏற்படுத் பெருமாள் சன்னதிகள், வைணவக் கடவுளர் திருஉருவங்கள், என உருவாக்கியுள்ளனர். இதுபோலவே மதுரை பழங்காநத்தம் ஈஸ்வரன் கோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ காசி விசாலாட்ஷிதிருக்கோவில் சுவாமி கர்ப்பகிரஹத்தின் வடபுற வெளிப்புறச் சுவற்றில் கற்பரப்பில் ஸ்ரீ யோக நரசிம்மப் பெருமானின் திரு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மீனாக்ஷி யம்மனின் சன்னதி முன்பாகவுள்ள ஆறுகால் பீடத்தல் இரண்டு பெரும்தோற்றங்களில் வடிக்கப்பட்ட துவராபாலகர் சிலைகளையும், சொக்கேசர் சன்னதி முன்பாக நெடிய உருவ துவாரபாலகர் சிலைகளையும் அûத்ததோடு அவ்விரண்டு இடங்களின் முன்பாகவும் பலி பீடங்கள், கொடிமரஙகள் அமைத்திருக்கின்றார்.
திருமலைமன்னர் 12 ஆயிரம் பொன் வருமானம் அளிக்கும் வகையில் ஐராவத நல்லூர் (அயிலனூர்), வலையபட்டி, வலையன்குளம், தொட்டியபட்டி, நெடுமதுரை, கொம்பாடி, பெரிய ஆலங்குளம், ஒற்றை ஆலங்குளம், சொக்கநாதன் பட்டி, ஆண்டிபட்டி, தாதன்பட்டி, சின்மநாயக்கன் பட்டி, போடிநாயக்கன்பட்டி, கொண்டையன்பட்டி, தும்பிச்சிநாயக்கன்பட்டி, சண்பைக்குளம், விராலிபட்டி
கி.பி. 1634-ல் திருமலை மன்னர் கோயில் நிர்வாகம் நடைபெறுவதில் திருப்தியடையாமல், விஸ்வநாத நாயக்கரால் நியமிக்கப்பட்ட அபிஷேகப்பண்டாரத்தை நீக்கி தன் சொந்தப் பொறுப்பில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டு ஆலயச்சீர்திருத்தம் செய்தார். கி.பி. 1706-1732ல் விஜயரங்க சொக்கநாதர் மதுரையை ஆண்டார். இவர் கால்த்தில் குடமுழுக்கு நடந்தாக குறிப்புகள் இல்லை.
கி.பி. 1732-1736 வரை ராணிமங்கம்மாவின் சிறப்பான ஆட்சி, ஆனால் கோயில் குடமுழுக்கு நடத்திய விபரம் இல்லை. இவர் சாந்தாசாயபுவின் சூழ்ச்சியால் இறந்து பட்டதாக வரலாறு. கி.பி. 1740&-ல் சாந்தாசாயபுவை வென்று மாரட்டிய மன்னன் சுல்தான் யூசப்கான் மதுரையை கைப்பற்றினான். கி.பி. 1801ல் மதுரையை ஆற்காடு நவாப் வெள்ளையர் கம்பெனிக்கு விற்றுவிட்டார். கி.பி. 1804 முதல் வெள்ளையர் நிர்வாகம், ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில், பழமுதிர்சோலை, கூடலழகர் பெருமாள் கோயில், தென்கரை திருவேடகம் கோயில், குருவித்துறை வல்லவராஜப் பெருமாள் கோயில், ஆகிய கோயில் நிர்வாகங்கள் வெள்ளையர் வசம் இருந்தது.
வெள்ளைக் கம்பெனியின் சார்பில் அன்றைய கலெக்டர் ""ஊர்டிஸ் கோயில்களின் நிர்வாகம் அவருடையதாய் இருந்தது. பின், ராமநாதபுரம் முத்துச் செல்லத்தேவர் கோயிலை நிர்வகித்தார் . அவருக்குப் பிறகு கி.பி. 1843-1849 காலகட்டத்தில் ""தன்சிங் துக்காராம், துவாஜி ஆகியவர்களிடம் திருக்கோயில் நிர்வாகம் சென்றது. இவர்கள் சரியாக நிர்வகிக்காததால் கி.பி. 1850 திருஞான சம்பந்தர் மடம், ஆதினத்தலைவர் ஸ்ரீ ஆறுமுக தேசிகரிடம் ஆங்கில அரசால் நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.
பிறகு, கி.பி. 1863-ல் இருந்து கி.பி. 1922 வரை ஆங்கில அரசு ஐவர் குழுக்களை நிறுவி, நிர்வகிக்கச் செய்தனர். அப்போதும் நிர்வாகம் சீராக இயங்காத தாங்கிய 1922-ல் நீதிமன்ற உத்திரப்படி கரு.வே. அழகப்ப செட்டியாரை ஆலய ரிஸீவராக நியமிக்கப்படுகிறார். 6.2.1878 ஏழுகோயில் நகரத்தார்கள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதே வருடம் 1.7.1923 வடக்கு மொட்டை கோபுரம் அமராவதி புதூர் வைநாகரம் செட்டியாரால் பூர்த்தி செய்யப்பட்டது. அதே வருடம் முத்து.கரு.வே. அழகப்ப செட்டியார் அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. 28.6.1963ல் தமிழவேல் திரு.பி.டி ராஜன், அவர்கள் தலைமையேற்று வெகு சிறப்பாக ஒரு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்
கி.பி. 1974-ல் லே. நாராயணன் செட்டியார் தலைமையில் ஒரு குடமுழுக்கு நடை பெற்றுள்ளது. 7.71995-ல் பி.டி. பழனிவேல்ராஜன் தலைமையில் 18 முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து ஒரு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அதன்பின்னால் 8.12.2006ல் துவங்கப்பெற்று 8.4.2009ல் நடந்து முடிந்தது. பழமை காரணமாக சிதிலமடைந்த பல கற்றூண்களை அட்ட சக்தி மண்டப மேற்கூரை புதிய உத்திரக்கல் மாற்றப்பட்டும் இதுபோல் அனேக இடங்களில் மண்டபத்தூண்கள் பல இடிபாடுகள் சரிசெய்யப்பட்டும் கோபுரங்களில் பழுதுற்ற அனேக சிற்பங்களை பழுதுபார்த்தும் சுதைகளை சரி செய்தும் சிலவற்றை புதிதாகவும் அமைத்து வண்ணங்கள் தீட்டப்பட்டு கும்பாபிஷேகப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
குறிப்பு: 29.3.1937ல் சில திருத்தலங்களைக் கொண்ட ஹிந்து அறநிலையை பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் பிறகு மேலும், பல புதிய திருத்தங்களுடன் 1951-ல் ஹிந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் இந்துசமய அறநிலய ஆட்சித்துறை என்றப் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பற்பல கோயில்கள் இந்த நிர்வாகத்தின் கீழ் சேர்க்கப்பட்டு இன்றுவரை நம் மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயிலிருந்து இயங்கி வருகிறது.