Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 27. திருமலை நாயக்கரின் மஹால் பெருமை
திருமலை நாயக்கரின் மஹால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2018
02:09

கண்கள் வியந்து விரிந்து நோக்க, வாய் மலர்ந்து வியப்பின் மெய்ப்பாட்டை காட்ட, உள்ளம் இக் கலைக்கோயிலை உருவாக்கியவனின் பெருமையைப் புகழ தன்னையே மறந்து நிற்கும் நிலையிலே அயல் நின்ற வழிகாட்டி திருமலை நாயக்கர் மஹால் எனும் கலைக் கூடத்தைத் தமிழகத்திற்குத் தந்த மன்னனை நமக்கு அறிமுகப்படுத்திய படி இங்கு விரிக்கப்படும் செய்திகள். 327 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1636 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களிலே இந்த இடத்திலே எத்தனை மக்கள் களிப்புடன் இம்மஹாலின் கிரஹப்பிரவேச வைபவத்தில் கலந்து கொண்டிருப்பார்கள் என எண்ணிப் பார்க்கையில், அன்று கண்ட மஹாலின் ஆறில் ஒரு பாகமே இன்று நாம் கண்டு கொண்டிருப்பது.

இதையாவது நமக்குக் காணும்படி காப்பாற்றித்தந்த நேப்பியர் ""பிரபுவிற்கு நன்றி செலுத்தியாக வேண்டும். பாழடைந்து மரம் செடிகள் முட்புதர் மண்டிக்கிடக்க சிதைந்தழிந்த அரண்மனையை 1886 ஆம் ஆண்டு அன்றைய ரூபாயின் மதிப்பில் மூன்று லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவு செய்து திருத்தியமைத்து கலைச் செல்வத்தைக் காப்பாற்றி சென்னை மாநில கவர்னர் நேப்பியர் பிரபு மதுரைக்கு நிலையான ஒரு சேவை செய்து விட்டார். இப்போது நாம் பார்க்கும் கட்டிடம் பாழடைந்த பாகங்கள் நீக்கப்பட்டு முன்னாள் அரண்மனையின் நாலில் ஒரு பாகம் தான் இருந்தது தெரிந்ததும் நமது சிந்தனைகள் அதன் முழு உருவத்தையும் அகக்கண்களில் காண விழைகிறது அல்லவா!

டெய்லர் என்ற பாதிரியார் தான் பதிப்பித்துள்ள கையெழுத்துப்பிரதிகளில் மஹாலைப் பற்றி குறிப்பு ஒன்று இருக்கிறது. அதில் கண்டபடி திருமலை நாயக்கருடைய அரண்மனையும் வடக்கு அல்லது கிழக்கே புகுந்து பார்த்தால் உயர்ந்த பத்து தூண்கள் கட்டப்பட்டு அதன் கிழக்கே ஆசார வாசலும் அதிலே பதினெட்டு இசைக் கருவிகள் வல்லுநர்களால் இசைக்கப்பட்டும் அவ்வாயிலுக்குக் கிழக்கே அரசனது பவனிக்கான தந்தப் பல்லக்குகளும் மேனா பல்லப்குகளும் வைக்கப்பட்டும் இருந்தன தெரிய வருகிறது. ஆசார மண்டபத்திற்கு மேற்கே சிற்ப வேலைகள் அமைந்த அரங்க விலாசமும் அதற்கும் மேலே சந்திர மேடையும், அமைந்து அதைச்சுற்றி பளிங்குத் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தனவாம். குறுநில மன்னர்களைச் சிறையிட சிறைச்சாலை ஒன்றும் இருந்ததாம். அதன் அருகே ஆயுதச் சாலையும் அரங்க விலாசத்திற்கு மேற்கே அரச தந்திரிகள் தங்கும் அலங்கார மண்டபமும் அதற்கு தென்மேற்கே பூசை அறையும் இன்னும் பல அழகிய அறைகளும் சிங்காரத் தோப்பும் இருந்தனவாம். அரண்மனை உள்ளிடத்தில் மலர்ப்பூங்காவும் தெப்பக்குளமும் இருந்தன. நடனசாலை ஒன்று அமைக்கப்பட்டு திருமலை மன்னன் தங்க ஆசனத்தமர்ந்து தீவட்டி வெளிச்சத்தில் நடனம் கண்டு மகிழ்வாராம். சொர்க்க விலாசம் எனும் மண்டபம் அழகே உருவாக அரச அலுவல்களை கவனிக்க உபயோகப்பட்டும் வந்ததாம். உன்னத உப்பரிகைகளையும் வானுற ஓங்கிய மாடங்களும் சிகரங்களையும் கொண்ட அரண்மனையைச் சுற்றி அழகான மதில்கள் இருந்தனவாம். வெளிமருந்துக் கொட்டடி, புலி, கரடி முதலிய கொடிய விலங்குகளோடு மள்ளர்கள் போர் புரியும் சாலையும் இருந்தன. தென் கிழக்கு பாகத்தில் இருந்த மலர் வனத்தில் திருமலை மன்னன் உலாவிப் பொழுது போக்குவாராம். இக்குறிப்புகளைத் தரும் கையெழுத்துப் பிரதி கூறும் இடங்களை இன்று அடையாளம் காண முடியவில்லை. சிற்ப வளம் பொருந்தி பெரிய அரண்மனை ஒன்று இருந்தது என்பதையே அப்பிரதி பேசுகிறது. இக்குறிப்பில் காணப்படும் சிங்காரத் தோப்பு இன்றைய மஹாலுக்குத் தென்மேற்கே சிங்காரத் தோப்பு என்று அழைக்கப்பட்டு வரும் நகர்ப்பாகமாகும். தெப்பக்குளம் என்பது இன்று மைனா தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் இடமாகும். நைனா தெப்பக்குளம் மருவி மைனா தெப்பக்குளம் என்று ஆயிற்று.

திருமலை மன்னரின் முழுப்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும் நாயுனு என்பது நைனாவாகி பின்னால் மைனாவாகி விட்டது. இந்த இடங்கள் இன்று இருக்கும் நிலையில் மஹாலின் சுற்றளவை அக்கண்ணால் பார்த்தால் கிழக்கே வெளிவீதிக்கு கிழக்கேயும் தெற்கே தெற்கு மாரட் வீதி வரையும் வடக்கே பத்துத் தூண்களுக்கு வடக்கேயும் மேற்கே மஞ்சனக்காரத் தெரு வரையிலும் மஹாலும் அதைச் சூழ்ந்த மலர் வனங்கள் முதலியனவும் இருந்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

மஹாலின் கூடங்கள் மாடங்கள் வளைவுகள் தனிச்சிறப்போடு கீழ்நாட்டுக் கலையையும் மேல்நாட்டுக் கலையையும் தழுவிப் பார்ப்போர் உள்ளம் பரவமடையும் படி சிறப்புற அமைக்கப் பட்டிருக்கின்றன. பருமனான நேரான மகுடம் வைத்த அழகிய தூண்களுடன் கூடிய முகப்புகள் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த வளைவுகள் நான்கு பேராலும் கை நீட்டி அணைத்து அளவிட முடியாத பருமனோடு அழகும் வாய்ந்த தூண்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருப்பது, இவற்றையெல்லாம் கண்டுகளித்து உள்ளே செல்லுகிறோம். கம்பியோ கட்டையோ இன்றி சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த விதானங்கள் தனி அழகுடன் நம்மை பரவசப்படுத்துகின்றன. இவைகளை அமைத்த சிற்பிகளின் திறனையும் சிற்பிகளை உற்சாகப் படுத்திய திருமலை மன்னருடைய சிறப்பையும் புலப்படுத்தும் எத்தனையே கதைகளை இப்போதும் அங்கு அரைகுறையாய் கூறும் வழிகாட்டியிடம் கேட்கலாம். மன்னன் சிற்பியின் பெருமையைப் பாராட்டி சிறப்புச் செய்தான் என்பர். இது திருமலை மன்னனது கலையார்வத்தைக் காட்டுவதாக இருந்தாலும் தொழிலாளர்களிடம் எப்படி வேலை வாங்குவது என்பதையும் கற்பிக்கிறது.

கட்டிடத்தின் வனப்பிலே நாம் வசமிழந்து நிற்கும்போது அதன் உறுதியையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இரும்பு, செப்புக் கம்பிகளோ மரக்கட்டைகளோ இல்லாமல் இவ்வளவு பெரிய கட்டிடம் உறுதியாக கட்டப்பட்டு இருப்பது வியப்பூட்டுவதாகும். சாதாரண வெந்த சுண்ணாம்பை தண்ணீர் விட்டு மணல் குழைத்து அப்படியே கட்டிடம் கட்டும் இன்றைய மக்கள் கட்டிடத்தின் உறுதியைப் பற்றி சிந்திப்பார்களா என்று தெரியவில்லை. நீற்றிய சுண்ணாம்பை அரைப்பது என்பது இன்றைய வழக்கத்தில் மறைந்து வருகிறது. திருமலை மன்னர் கட்டிடம் கட்டிய விதம் திருப்பணி மாலையில் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.

"அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டு நன்றாய் குழைத்துச் செங்கலும் அடுக்கடுக்காய் பரப்பி கடுக்காயொடு ஆமலகம் அரிய தான்றிக்காய் உளுந்து ஒருக்கால் இருகால் இடித்து நன்னீரில் ஊறிய கருஞ்சாறுமிட்டு ஊழிக்காலங்களிலும் அசையாத வச்சிரக்காரை பொருள் :- அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டு நன்றாய்க் குழைத்து கடுக்காய் உடன் நெல்லிக்காய் தான்றிக்காய் உளுந்து இவற்றை இருமுறை இடித்து நல்ல தண்ணீரில் ஊறிய கடுஞ்சாறும் இட்டு கட்டிடங்கள் கட்டினான் என்னும் இச்செய்யுள். சுண்ணாம்புச்சாறு உறுதியாக இருக்கும் வகையில் மன்னன் எடுத்துக்கொண்ட அக்கறையை நன்கு புலப்படுத்துகிறது.

இக்கட்டிடம் பற்றி வேறொரு செய்தியும் இங்கே வருகிறவர்களுக்கு தவறாமல் சொல்லி வருகிறார்கள். திருமலை மன்னனின் இக்கட்டிடம் இவ்வளவு கட்டுக்காமல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பினும் ஒரு கள்வன் நினைத்தால் அதனுள் நுழைந்து விடலாம் என்பதற்கான கதையே அது. அவ்விதம் சொல்லியதை மன்னன் அப்போது ஏற்கவில்லை. மறுநாள் பொழுது விடிந்ததும் அவரது அறையின் மேல் பாகத்தில் கன்னம் போடப்பட்டு இருந்ததை கண்டான். அத்துடன் அவர் அறையில் அவர் உபயோகிக்கும் சில முக்கியப் பொருட்களையும் காணவில்லை. திட்டமிட்ட களவு என்று புரிந்தது. அன்றைய அரச சபையிலே ஒருவர் தோன்றி தானே அதைச் செய்தது என்றும் அவன் களவாடிய அரசரது பொருட்களையும் அவர் முன் வைத்து பயபக்தியுடன் பணிந்து நின்று எவ்வாறு களவாடினான் என்றும் கள்ளன் பெரிதா! காப்பான் பெரிதா என்பதை நிரூபிப்பதற்காகச் செய்ததாயும் கூறினான். மன்னன் கள்வனின் திறமையை வியந்து அவனுக்கு பரிசில்களைக் கொடுத்து அவனைப் பாராட்டி அனுப்பிதாயும் கூறுவார்கள்.

மற்றொரு கதையும் கூறுவார்கள். திருமலை மன்னனின் மருமகள் தஞ்சை மன்னனின் மகள். எல்லோரும் மதுரை மஹாலைப் போற்றுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் தஞ்சை அரண்மனை குளியலறைக்குக் கூட இவ்வரண்மனை சமமாகாது என்பாளாம். பெண்கள் பிறந்த வீட்டு பெருமையை அவ்வாறு கூறுவார்கள் என்பதே அதன் கருத்து எனலாம். எனினும் இவ்விரு அரண்மனைகளும் ஒன்றுக்கொன்று கட்டுமானப்பணியில் குறைந்ததல்ல. அரசர் முடித்தலை ஒருபோதும் அயர்ந்து உறங்காது என்று ஒரு ஆங்கிலப் புலவன் கூறினான். அது உண்மையே திருமலை மன்னன் எவ்வளவோ போர்களை சந்தித்துள்ளான். மைசூர் மன்னன் படையெடுப்பு, திருவாங்கூர் தொல்லை, இராமநாதபுரம் அரசுரிமை கலகம் என அநேக தொல்லைகளுக்கும் இடையில் ஸ்ரீ மீனாக்ஷி யம்மைத் திருக்கோவிலுக்கு அளவிட ழுடியாத திருப்பணிகள் செய்து இம்மஹாலை நிறுவி நம் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து இருக்கிறாரே!

திரு ஆலவாய் அண்ணலை நாள் தோறும் பள்ளியறைக்கு போகும்போது கடைசியாகவும் மறுநாள் ஆலயம் திறக்கும்போது முதலாவதாகவும் இறைதரிசனம் புரிந்து மகிழ்ந்ததோடு அத்திருக்கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் தம் இருமனைவியரான உருத்திரை தோணியம்மை உடன் கூப்பிய கரங்கள் உடன் என்றென்றும் நாம் பார்க்கும் வண்ணம் நின்று இறைவழிபாடு செய்து கொண்டே இருப்பதை வெறும் சிற்பம் தானே என்று நினைக்கத் தோன்றுமா! திருமலை மன்னா! நீவிர் யுகங்கள் தோறும் தவறாமல் பிறந்து அரும்பெரும் இறைத் தொண்டாற்ற முனைவீர்கள் அல்லவா!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar