பதிவு செய்த நாள்
28
செப்
2018
03:09
இவரது முழுப்பெருமையை இன்றைய மனிதர்கள் ஏதும் அறிந்திருப்பார் என்று குறைப்பதற்கு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீ வைகுண்டம் என்ற ஊரில் சைவப்பெருந்தகை குடும்பத்தில் பிறந்தவர். பிறக்கும்போதே ஊமைக்குழந்தையாய் பிறந்தார். திருச்செந்தூர் முருகனருளால் அவர் சன்னதியில் பெற்றோர்களின் மனமுருகிய பிரார்த்தனையின் பலனாக குழந்தையின் ஐந்தாவது வயதில் குழந்தை பேசியது மட்டுமல்லாமல் கவித்திறனும் பெற்ற அருட்குழந்தையாயிற்று. கந்தர் கலி வெண்பா எனும் பாடல் குழந்தையின் திருவாயினின்று அருள்வாக்காய் ஞானப்பாடலாய் பொங்கி வழிந்தது. அனுபூதி பெற்ற அருணகிரியாரின் கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி போன்ற முருகப்பெருமானின் தோத்திரப் பாடல்களின் பெருமையை கந்தர் கலிவெண்பாவும் அடைந்தது. அன்றிலிருந்து குழந்தைக்கவி என்றும் குமரகுருபரர் என்றும் பெயர் பெற்றார். ""ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் என்பதற்கிணங்க தாய்தந்தையர்கள் பெரும் மகிழ்வெய்தினர். சிறிது காலத்திற்குப் பிறகு குமரகுருபரர் சிவபெருமான் மீது தேட்டம் கொண்டு ஆத்ம ஞானமான பர வாழ்க்கைப் பற்று கொண்டு தல யாத்திரைக்குப் புறப்பட்டார். தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆங்காங்கே பல நூல்களை இயற்றினார்.
அவரது தமிழ்ப்புலமை கொண்டு ஆக்கிய பிரபந்தங்களுள் மதுரையில் இருக்கும் போது"மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ் என்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகவும் தெய்வீகத் தன்மை கொண்டதாயும் திகழ்ந்தது. இந்த நூலை அன்னை மீனாக்ஷி யே திருமலை மன்னர் கனவில் தோன்றி தம் மீது பாடப்பெற்ற நூலை அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்யக் கட்டளையிட்டார். ஆச்சர்யத்துடன் எழுந்த மன்னன் தம் மந்திரி முதலியோர்களிடம் இந்த கனவைப் பற்றி கூறினான். அவர்கள் குமரகுருபரர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரிடம் மன்னனே நேரில் சென்று தன் கனவில் கண்டதைக் கூற குமர குருபரர் தன் பாக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து அரங்கேற்றத்துக்கு இசைந்தார். மீனாக்ஷி யம்மன் சன்னதி முன்பு ஆறுகால் மண்டபத் தில் சில தினங்கள் தொடர்ந்து அரங்கேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
குமரகுருபரரின் தம்பி குமார கவி ஒவ்வொரு செய்யுளையும் வாசிக்க குருபரர் பொருள் கூறி விளக்கமளித்துக் கொண்டிருந்த போது ""முத்தப் பருவத்தில் முதல் பாட்டில் குருபர சுவாமிகள் தம்மை மறந்து பெரிதும் ஈடுபட்டு அதற்கு விரிவுரையை ஆர்வத்துடன் கூறிக்கொண்டிருந்தார்
""காலத் தொடுகற் பனைகடந்த
கருவூ லத்துப் பழம்பாடற்
கலைமாச் செல்வர் தேடிவைத்த
கடவுள் மணியே ! உயிர் ஆல
வாலத்து உணர்வு நீர் பாய்ச்சி,
வளர்ப்பார்க்கு, ஒளி பூத்து அருள் பழுத்த
மலர்கற் பகமே எழுதாச் சொல்
மழலை ததும்பு பசுங்குதலைச்
சோலைக்கிளியே, உயிர்த்துணையாம்
தோன்றாத் துணைக்கோர் துணை ஆகித்
துவாத சாந்தப் பெருவெளியில்
துரியங் கடந்த பரநாத
மூலத்தலத்து முளைத்த முழு
முதலே! முத்தம் தருகவே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தம் தருகவே
இந்தச் சமயம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது, நாயக்கர் மன்னர் மடி மீது ஒரு சிறுபெண் குழந்தை வடிவத்தில் மீனாக்ஷி யம்மனே வந்து உட்கார்ந்து கேட்டு உகந்து, ஒரு முத்துமாலையை சுவாமிகள் கழுத்தில் போட்டு மறைந்தார். தன் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை அர்ச்சகரின் பெண் என்று நினைத்திருந்த திருமலை மன்னர் பின்னர் உண்மை தெரிந்து பரமானந்தம் அடைந்தார். குமரகுருபரர் சுவாமிகளுக்கு ஏராளமான பொன் மற்றும் பல்லக்கு முதலிய வரிசைகளைக் கொடுத்து மரியாதை செய்து அப்பெரியாரை மதுரையிலயே இருக்கும்படி மன்னன் வேண்டினார். சுவாமிகளும் அதற்கு இசைந்து மதுரையில் தங்கி நாயக்கருக்கு வேண்டிய உதவியும் உபதேசமும் செய்து வந்தார். அப்போது மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம் ஆகிய நூல்களையும் எழுதினார்.
கிபி17ஆம் நூற்றாண்டு தோன்றிய தமிழ்க்கவிஞர்களில் குமரகுருபரர் சுவாமிகளில் முதன்மையானவர். அழகான கற்பனை ஆழ்ந்த கருத்து எளிமையும் இனிமையும் கலந்த வாக்கு ஓசைப் பண்பு செய்யுட்களின் சரளமான நடை ஆகியவைகளைக் கவனித்தால் மீனாக்ஷி யம்மன் பிள்ளைத் தமிழையும், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழையும் எழுதியிருக்கும் சவாமிகளே இப்பிரபந்தங்களை ஆக்கியிருக்கும் தமிழ்ப்புலவர்களில் சிறந்தவர் என்று கூறலாம். காலக்கிராமத்தில் சுவாமிகள் திருமலை மன்னரிடம் விடைபெற்று அவர் அவளித்த பெருஞ்செல்வத்துடன் தமது பரிவாரத்துடனும் பல தலங்களை தரிசித்து தருமபுரம் மடத்துத் தலைவர் மாசிலாமணி தேசிகரை ஞானாசிரியனாகக் கொண்டு சைவ மரபின்படி துறவு பூண்டதும், சிதம்பரத்தில் கொஞ்ச காலம் தங்கித் தமிழ்ப் பிரபந்தங்கள் இயற்றியதும் பின்னர் வடநாடு சென்று காசியில் பல வருடங்கள் வசித்ததும் சரித்திரப் பிரசித்தம். காசியில் சுவாமிகள் வாழ்ந்ததைப் பற்றி போதிய விவரங்கள் சரித்திரப் பூர்வமாக கிடைக்காவிட்டாலும் ஓரளவு தெரிந்து கொள்வதற்கு ஆதாரங்கள் இல்லாமல் இல்லை.
குமரகுருபரர் சுவாமிகள் எல்லாம் போல கங்கையில் நீராடி விச்வேசனரை தரிசனம் செய்து புண்ணியம் சம்பாதித்து திரும்புவதற்கு வாரணாசிக்குச் செல்லவில்லை. அவ்வித நோக்கத்துடன் தல யாத்திரையும் தீர்த்தாடனமும் செய்து வந்த பிறகே துறவு பூண வேண்டும் என்று மாசிலாமணி தேசிகர் கட்டளையிட்டபோது குமரகுருபரர் அதை நிறைவேற்ற முடியாமல் சிதம்பர வாசம் சிறிது காலம் செய்து விட்டு சன்னியாசத்தை குருமுகபாகப் பெற்றுக் கொண்டார். முதலில் காசிக்குச் செல்லத் தயங்கியவர் பின்னர் காசிக்குப் போனதுமின்றி அங்கேயே தங்கி விட்டார். தமது வாழ்க்கைப் பணியை தெளிவுடனும் திடநெஞ்சுடனும் விரிந்த மனப்பான்மையுடனும் அமைத்துக் கொண்டு அதற்கு முன்னால் வேறு எந்தச் சிவனடியாரும் செய்யக் கருதாத முறையில் பெருமையுடனும் ஆர்வத்துடனும் சமயத் தொண்டாற்றினார்.
வடநாட்டில் பல காலங்களில் சைவம் செழித்தோங்கித்தான் இருந்தது. அக்காலத்தில் வைணவ பக்தி இயக்கங்களும், ராமர் கிருஷ்ணர் வழிபாடுகளும் வெகுவாக பரவியிருந்த போதும் சைவத்தைப் பின்பற்றியவர்களும் ஆங்காங்கே இருந்தனர். கையிலங்கிரியை தமது நிரந்தர இருப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் புண்ணிய பூமியாகிய நமது பாரத நாட்டில் எழுந்தருளியிருக்கும் எண்ணிறந்த ஸ்தலங்களில் புனிதமான கங்கைக் கரையில் அப்பெருமான் விசுவேஸ்வரராகக் காட்சியளிக்கும் காசியே மிக பவித்திரமான úக்ஷத்திரம் என்பது சைவர்கள் எல்லோர்க்கும் ஏன் இந்து சமயிகழ் யாவருக்கும் பொதுவாக உடன்பாடுதான். குமரகுருபர சுவாமிகள் காசியிலயே தங்க வேண்டுமென்று தீர்மானித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. வேறு ஒரு கருத்தும் அவர் உள்ளத்தில் வேரூன்றியிருந்தது. தமிழ்நாட்டில் சில தனிச்சிறப்புகளுடன் பண்புகளுடனும் வளர்ந்திருந்தன. சைவ சமயத்திற்கும் தத்துவ ஞானத்துறையில் நுண்ணிய கருத்துக்களுடன் விளங்கி வரும் சைவ சித்தாந்த தரிசனத்திற்கும் வட நாட்டில் ஒரு நிலைக்கான அவசியமென்றும் அங்கியிந்து வடநாட்டு மக்களிடம் தமிழ்நாட்டு சமய ஞான இலக்கிய கலைச்சிறப்புகளையும் நுட்பமான கருத்துக்களையும் பரப்ப வேண்டுமென்று சுவாமிகள் தீர்மானித்துச் செயல்பட்டார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வடநாட்டு மொழியை குமரகுருபரரும் அவருடன் சென்றவர்களும் கற்க வேண்டியது அவசியமாயிற்று எளிதில் கற்றுக்கொண்டார்கள் என்று நாம் ஊகிக்கலாம். முகலாய மன்னனின் அழைப்பை ஏற்று அவனைப் பார்க்கச் செல்லும்போது சரஸ்வதியைக் குறித்து "சகலாகலா வல்லி மாலை என்ற பாடலை இயற்றியதாகவும் உடனடியாக அன்னிய மொழியறிவை அருளாகப் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.
வட நாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சுவாமிகளும் அவரது பரிவாரங்களும் அந்நாட்டு மொழியை எளிதில் தெரிந்திருப்பார்கள். அத்துடன் சைவ சமயப் பிரச்சாரம் செய்து சவாமிகள் முக்கிய நோக்கம் ஆதலாலும் அந்தப் பிரதேச மக்களின் மொழி மூலம் செய்தால்தான் அங்குள்ள மக்கள் புரிந்து கொள்ளக் கூடுமாதலாலும் பாட்சாவைப் பார்க்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அவர் வடநாட்டு மொழியைக் கற்றிருப்பார். தெய்வ கிருபையால் எச்சக்தியையும் பெற்று எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையின் தனிப் பொருள். சுவாமிகள் எந்த தருணத்தில் இந்தப் பாடலை எழுதியிருந்தாலும் சரி அது அற்புதமாய் அமைந்திருக்கிறது. தமிழில் இதைப் போல் இலக்கிய நயங்களை உடைய நாமகள் தோத்திரம் வேறில்லை. அறிவுமீதும் ஞானத்தின் மீதும் கலைகளின் மீதும் குமரகுருபரருக்கு இருந்த தேட்டமே அவர் நாமகளை விளித்து:
""விண்கண்ட தெய்வம் பல கோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
என்று பாடுதலுக்கு காரணம் எவருக்கும் புலப்படும். குமரகுருபரர் தமது சமயப்பணிக்கு முஸ்லீம் சிற்றரரசர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் எழுந்த எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் தீரமுடன் சமாளித்து பாட்சாவின் நன்மதிப்பையும் மரியாதையையும் இறுதியில் பெற்றது அவருடைய ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.
பாட்சாவின் கருணையால் கிடைத்த இடம், பொருளை வைத்தும் நாயக்க மன்னன் தமக்கு முன்னாலே நல்கியிருந்த அளவற்ற பொருளை வைத்தும் காசியின் மத்தியில் கங்கைக்கரையில் குமரகுருபரர் குமாரசுவாமி மடத்தை ஒரு பெரிய கோட்டைபோல் பக்கத்தில் உள்ள கேதாரநாத கோவிலையும் புதுப்பித்து திருப்பணிகள் பல செய்தார். மடத்திற்கு ஏராளமான சொத்தும் சேகரித்து வைக்க முடிந்தது. அதனால் அன்று முதல் இன்று வரை காசியில் சைவ சமயப் பணியும் அறப்பணியும் இன்னும் நடந்து வருகிறது. இந்த மடத்திற்குப் பின்னால் தலைவராக வந்த தில்லை நாயக சுவாமிகள் தமிழ்நாட்டிற்கு வந்து திருப்பனந்தாளில் காசிமடத்தை ஸ்தாபித்து தாய்நாட்டுத் தொடர்பை குமாரசுவாமி ஏற்படுத்திக் கொண்டார். சைவ சமய தீர்க்கதரிசிகளிலும் தமிழ் இன்னிசைக் கலைஞர்களிலும் சித்தாந்த ஞான பண்டிதர்களிலும் மீனாக்ஷியம்மனின் அருட்செல்வர்களிலும் முண்ணணியில் வீற்றிருப்பவர்களில் குமரகுருபர சுவாமிகளும் ஒருவர். ஆனால் வடநாட்டு சென்று என்றென்றும் புனிதமாய் இருக்கும் காசியில் ஒரு பெரிய மடத்தை ஸ்தாபித்து அதன் மூலம் சமயத் தொண்டாற்றியதில் இவர்தமக்கு நிகரில்லாத சைவச் செம்மல் இத்துறையில் இவர் ஆதிசங்கரர், ராமனுஜர் போன்றவர்களையும் ஒத்தவர் எனக் கூறுவதில் நமக்கெல்லாம் நம்மதுரை வாழ் மக்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியல்லவா!