பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருக்கோவிலூர். இங்குள்ள மூலவர் திரிவிக்ரமன், ஓங்கி உலகளந்தவராக வீற்றிருக்கிறார். இவரை சர்வேயர் பெருமாள் என்று அழைப்பர். உலகின் முதல் சர்வேயர் இவர் தான். தன் இடக்காலை தரையில் ஊன்றி வலக்காலை உயர்த்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இடக்கையில் இருக்கும் சங்கு வலக்கையிலும், வலக்கையில் இருக்கும் சக்கரம் இடக்கையிலுமாக இருப்பது வேறெங்குமில்லாத அமைப்பு. மகாபலியிடம் மூன்றடி தானம் கேட்ட பெருமாள், மண்ணையும், விண்ணையும் இரண்டு அடிகளால் அளந்து, இன்னும் ஓரடி எங்கே? என்று கேட்பவராக காட்சியளிக்கிறார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் ஆழ்வார்கள் மூவரும் அருள் பெற்று பாசுரம் பாடியதும் இத்தலத்தில் தான்.