பதிவு செய்த நாள்
08
அக்
2018
01:10
ஈரோடு:புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை யில், பெருமாள் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.புரட்டாசி மாத, மூன்றாவது சனிக்கிழமையான நேற்று (அக்., 7ல்), ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் செல்ல தொடங்கினர்.
அதிகாலையில் நடை திறப்பு, திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர், தங்க காப்பு அலங் காரத்தில் அருள் பாலித்தார். அதிகாலை முதல் நண்பகல் வரை, பக்தர்கள் வருகை இருந்தது.
அதேசமயம், நேற்று (அக்., 7ல்) பிரதோஷம் என்பதால், பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள், அருகில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.
* சென்னிமலையை அடுத்த, மேலப்பாளையம் ஆதிநாரயணப் பெருமாள், வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர் பந்தல் கிருஷ்ணபெருமாள் கோவில், கே.சி.வலசுஅணியரங்க பெருமாள் கோவில், கவுண்டம்பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில், திருமுகம் மலர்ந்தபுரம் செல்வ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், திருப்பதி பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பேட்டை பெருமாள், சீனிவாச பெருமாள், ஜி.எஸ்.காலனி வரதராஜ பெருமாள், மைலம்பாடி சுதர்சன மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள், புரசைக்காட்டூர் கரியப்பெருமாள், வெடிக்காரன்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள், பெருமுகைப்புதூர் சஞ்சீவராய பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூரில், பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. கரிவரதராஜ பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தாசர்களுக்கு அரிசி படி வழங்கி, பக்தர்கள் வழிபாடு செய்தனர். விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை படைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். கீழ்முடுதுறை, திம்மராய பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.
* பவானிசாகர் அண்ணா நகர், கதிர் பெருமாள் கோவிலில், மூலவர் கதிர் பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். கோவில் வளாகத்தில்,36 அடி ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்துபக்தர்கள் வழிபட்டனர்.
* பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஊராட்சிக்கோட்டை மலை மீதுள்ள பெருமாள் கோவில், பெருமாள் மலை மீது அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.
அதேபோல், அம்மாபேட்டை பெருமாள் கோவில்,நெரிஞ்சிப்பேட்டை நிஷ்டையில் உறங்கும் பெருமாள் கோவில்களில் நடந்த பூஜைகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில், புரட்டாசி மாத சனி மற்றும் பிரதோஷ வழிபாடு, களை கட்டியது. நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. ரிஷப வாகனத்தில், சிவபெருமான், சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளினார்.