பதிவு செய்த நாள்
10
அக்
2018
11:10
புதுச்சேரி:வடிகால் அனைத்திலும் அடைப்பு ஏற்பட்டதால், புதுச்சேரியின் முக்கிய கடை வீதியில், ஒரு வாரமாக தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில், மழை நீர் வடிய வடிகால்கள் வடிவமைக்கப்பட்டன. பல நாட்கள் இடைவிடாது மழை பெய்தாலும், நகர பகுதிகளில் அதற்கான சுவடே தெரியாத அளவில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால், காலப்போக்கில் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், முறையாக பராமரிக் கப்படாமல், தூர்ந்து விட்டதாலும், தண்ணீர் வடிய வழியில்லாமல், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் குளமாக தேங்கிவிடுகிறது.புதுச்சேரியில், கடந்த 3ம் தேதி, சில மணி நேரம் மழை பெய்ததில், இந்திரா காந்தி சிக்னல், வழுதாவூர் சாலை, புஸ்சி வீதி, இ.சி.ஆர்., சிவாஜி சிலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளும் தப்ப வில்லை. மழை பெய்து ஒரு வாரம் ஆகியும், நகரின் மையப்பகுதியும் முக்கிய வியாபார இடங்கள் அமைந்துள்ள சின்ன சுப்ராயபிள்ளை வீதியில், தண்ணீர் வடியாமல் குளமாக தேங்கியுள்ளது. அந்த பகுதியில் இருந்து வடிகால்கள் அத்தனையும் அடைப்பு ஏற்பட்டதே இந்த நிலைக்கு காரணம். தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த வீதியில் அமைந்துள்ள அங்காளம் மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கழிவுநீர் தேங்கிய சாலையில் நடந்துவரும் அவல நிலை உள்ளது.வியாபார நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நகரின் முக்கிய சாலையில் இந்த அவல நிலை உள்ள நிலையில், இதுவரை தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.