சபரிமலை: ஐயப்பனுக்கும், தமிழகத்துக்கும் இருப்பது குடும்ப பந்தம். தமிழக பெண்கள் பொறுமை காக்க வேண்டும், என பந்தளம் அரண்மனை நிர்வாககுழு உறுப்பினர் சசிவர்மா கூறினார்.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தீர்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு வேகமாக செயல்படுகிறது. இதை கண்டித்து கேரளாவில் பெண்கள் போராட்டம் வலுத்துள்ளது.இந்த வழக்கில் பந்தளம் அரண்மனை சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
இப்பணிகளை ஒருங்கிணைத்தவர் பந்தளம் அரண்மனை நிர்வாககுழு உறுப்பினர் சசிவர்மா. தற்போது பக்தர்களின் போராட்டத்தையும் ஒருங்கிணைத்து வருகிறார்.தினமலர் இதழுக்கு அவர் அளித்த பேட்டி:தீர்ப்பை எதிர்த்து அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையீடு செய்யாதது கவலை அளிக்கிறது. ஐப்பசி 1ல் சபரிமலை நடை திறக்கும் போது பெண்களை அனுமதிக்க அரசு தீவிரம் காட்டுகிறது. பிரம்மச்சரியம் கொண்டுள்ள ஐயப்பனின் மண்ணில் வயதுக்கு வந்த பெண்கள் செல்வது மகாபாவம். இந்த பாவத்தை எந்த பெண்களும் செய்யக் கூடாது.1991 வரை, மாத பூஜைக்கு பெண்கள் சென்றதாக கூறுவது தவறு.
சிலர் சென்றிருக்கலாம். அந்த காலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் குறைவு என்பதால், அதிகாரி களை ஏமாற்றி சென்றிருக்கலாம். வயதுக்கு வந்த பெண்கள் வந்தார்கள் என்பதெல்லாம் வீண் பேச்சு. தற்போதைய எதிர்ப்பை கண்டு தேடி கண்டுபிடித்த காரணம் இது.இந்த போராட் டத்தில் அரசியல், ஜாதி எதுவும் இல்லை. இடது முன்னணி அரசை கவிழ்க்க நடக்கும் போராட்டம் என எஸ்.என்.டி.பி., சமுதாய தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசன் கூறுவது அரசியல் நாடகம்.ஐப்பசி மாத பூஜையின் போது பெண்கள் வந்தால் நாங்கள் (அரண்மனை) தடுக்க மாட்டோம். மாறாக அறிவுரை கூறுவோம். தமிழக பக்தர்களுக்கு எனது அன்பு வேண்டுகோளை வைக்கிறேன். பெண்கள் 50 வயது வரை பொறுமை காக்க வேண்டும்.
ஐயப்பனை வளர்த்த பாண்டியராஜாவுக்கு, மதுரை மீனாட்சி குலதெய்வம். தமிழ்நாட்டுக்கும், பந்தளம் அரண்மனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சபரிமலைக்கு வருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழக பக்தர்கள். வயதுக்கு வந்த பெண்கள் சபரிமலை வந்தால் அவர்களுக்குதான் தோஷம்.பந்தளம் உள்ளிட்ட முக்கிய ஐயப்பன் கோயில்களுக்கு வாருங்கள். ஆனால் சபரிமலையில் மட்டும் ஆசாரங்களை கடைபிடியுங்கள். ஐயப்பனின் மகிமையை, சபரி மண்ணின் பெருமையை காப்பதில் தமிழக பக்தர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.