சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுரங்கப்பாதை பணியில் பழமையான கிணறு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 11:10
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரயில்வே சுரங்கப்பாதை தோண்டிய போது பழமையான கிணறு கண்டு பிடிக்கப்பட்டது.பண்டைய கால வணிகம் ஆற்று முகத் துவாரம், ஆறு, கடல் வழியே நடந்துள்ளது.
வியாபாரம் செய்ய ஆற்றங்கரையோரம் அதிகம் வசித்துள்ளனர். கோடை காலங்களில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக மண்ணால் சுடப்பட்ட உறையை வைத்து கிணறுகளை பராமரித்துள்ளனர்.
கீழடியில் மொத்தம் 3 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.தற்போது பசியாபுரம் கண்மாயில் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை பணிதற்போது லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் பாதையில் ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை பணி தொடங்கியுள்ளனர்.
இதற்காக 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளிய போது உறைகிணற்றை மண் அள்ளும் இயந்திர ஓட்டுனர் ராஜன் தலைமையிலான ஊழியர்கள் கண்டறிந்தனர். கீழடி அகழ்வராய்ச்சி ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் உதயச்சந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம், அழகன்குளம் அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர் ஆசைத்தம்பி தலைமையிலான குழுவினர் லாடனேந்தலில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வாளர்கள் கூறியதாவது: கீழடி உறை கிணறு மேல்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் உள்ளது. ஆனால் லாடனேந்தல் கிணற்றின் மேல் மற்றும் கீழ்புறம் ஒரே அளவில் உள்ளது. ஆனால் ஒன்றின் மேல் ஒன்று வைக்கும் போது அசையாமல் இருக்க மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் சரிவான அமைப்பு அமைக்கப் பட்டுள்ளது. இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.தற்போது 10அடி உயரம் தான் தோண்டப்பட்டுள்ளது, முழுமையாக தோண்டினால் தான் கிணற்றின் அமைப்பு தெரியவரும் என்றனர்.