பதிவு செய்த நாள்
07
பிப்
2012
01:02
காளையார்கோவில் : காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலில், தைப்பூச உற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில், கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை தைப்பூச விழா சிறப்பாக, 5 மணிக்கு அபிஷேகம் நடந்தது, பெரிய தேரில் சாமி - அம்பாளும், சிறியதேரில் அம்மனும் எழுந்தருளினர். நேற்று காலை 10.30 மணிக்கு கிராம மக்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்தது. சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் ராஜேந்திரன்,ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள், காளையார்கோவில் கிராம ஊராட்சி தலைவர் அருள்ராஜ், திருக்கானப்பேர் நண்பர்கள்குழு, வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு, வள்ளி தெய்வானையுடன் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 3.30 மணிக்கு, வடம் பிடிக்க நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி வெள்ளிகேடக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இன்று (பிப்.,7) பிற்பகல் 2 மணிக்கு தேனாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.