பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
உளுந்துார்பேட்டை:வாழ்க்கையில் சோதனை வரும்போது துவண்டுவிடாமல், நம் பிக்கையோடுசெயல் படவேண்டும் என எடைக்கல் ஸ்ரீசாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசினார்.உளுந்துார்பேட்டை அடுத்த எடைக்கல், ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழாவை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார். உளுந்துார்பேட்டை அடுத்த ஸ்ரீசாரதா ஆசிரமத்தில், நவராத்திரியையொட்டி, சாதாரண மனிதர்கள் இறைவனுக்கு செய்யும் கைங்காரியத்தால் குபேரனின் நிலைக்கு உயர முடியும் என்பதை விளக்கும் விதமாக ஸ்ரீகுபேரனின் வாழ்க்கை வரலாற்றையும், காசி சேஷத்திரத்தின் மகிமையை விளக்கும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.நவராத்திரி விழாவின் துவக்கமாக நேற்று காலை 10:00 மணிக்கு பிராத்தனை நடந்தது.
ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா வரவேற்றார். தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், குமரகுரு எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.விழாவிற்கு தலைமை தாங்கிய ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா ஆசியுரை வழங்கியதாவது:வெற்றி சாதாரணமாக கிடைத்து விடாது. கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது உள்ளவர்கள் ஆன்மீகத்தை எட்டாத உயரத்தில் வாழ்க்கையில் இருந்து தள்ளி வைத்துள்ளனர். முதிய காலத்தில் ஆன்மீகத்தை பார்த்து கொள்ளலாம் என்கின்றனர். ஆன்மீகத்தை பின்பற்றினால் பலன் கிடைக்கும். அதனை உணர்ந்தவர்கள் பின்பற்றுகின்றனர். நல்ல செயல்களை செய்து இறைவன் அருள் பெறவேண்டும். சோதனைகள் வரத்தான் செய்யும். அந்த சோதனைகளை கடந்தால் தான் வெற்றி கிட்டும். சோதனை, துன்பங்கள் வரும்போது துவண்டுவிடக்கூடாது. நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். இதனை தான் இறை நம்பிக்கை என்றனர். உண்மையை புரிந்து கொள்ளும் பார்வையை செப்பணிடுவது தான் வாழ்க்கை. இப்படி தான் வாழ்க்கை வாழவேண்டும். அந்த வாழ்க்கையை மற்றவர்களின் நலனுக்காக இருக்க வேண்டும். வாழ்க்கை என்ற கல்வியில் பணிவு, அன்பு இருக்க வேண்டும்.இவ்வாறு, ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசினார்விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: ஒவ்வொரு யுகமும் நாம் வாழ்க்கை பயணத்தை மாற்றி கொண்டே இருக்கும். இதனால் தான் மாத்தியோசி என்றனர். நம் முன்னேற்றத்திற்கான திட்டங்களை பற்றி சிந்தித்து அதன்படி செயல்பட்டால் வெற்றி கிடைத்துவிடும். ஆசை இருக்க வேண்டும். அந்த ஆசை நாம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஆசையாக இருக்க வேண்டும் என்றார்.குமரகுரு எம்.எல்.ஏ., பேசுகையில், உளுந்துார்பேட்டை பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மற்றவர்களை முன்னேற்றத்திற்காக ஸ்ரீசாரதா ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீசாரதா ஆசிரமம் உளுந்துார்பேட்டை தொகுதிக்கு கிடைத்தது மிக பெரிய பொக்கிஷம் என்றார்.