பதிவு செய்த நாள்
13
அக்
2018
12:10
சிவகங்கை:சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக் கலாம், என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசலில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சண்முகம், நாச்சியப்பன், ரவிச்சந்திரன், பாண்டி, மாரியப்பன், பூபதி, முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பழைய முறைப்படி 10 வயதிற்குள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
அதில் பங்கேற்றோர் கூறியதாவது:வி.சுகன்யா, ரோஸ்நகர் சிவகங்கை: முன்னோர் வகுத்த
நடைமுறைகளை மாற்றுவது கேடு உண்டாக்கும்.நீதிமன்றம் உத்தரவிட்டாலும் எங்களை போன்ற இளம்பெண்கள் கோயிலுக்கு செல்ல மாட்டோம். பத்து முதல் 50 வயதிற்குட்ட பெண்கள் இருமுடி கட்டி செல்வது இயலாத காரியம். அவ்வாறு சென்றால் கோயில் புனிதம் கெடும்.
எங்களை போன்ற பெண்களின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.எஸ்.பாண்டி, சிவன் கோயில் குருசாமி, சிவகங்கை: இளம்வயது பெண்களுக்கு இருமுடி கட்டமாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டாலும் இளம்பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாட்டர்.
விரதம் இருக்கும் பக்தர்கள் முன்பே அவர்கள் வர தயங்குவர். இதனால் தீர்ப்பை உச்சநீதி மன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும். கேரள அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
கே.நாகேஸ்வரன், மாவட்டச் செயலாளர், ஐயப்ப சேவா சமாஜ், சிவகங்கை: பழங்காலமாக நடக்கும் ஐயப்ப வழிபாடு ஆகமவிதிகளுக்கு உட்பட்டது. இந்து தர்மத்தின்படி வாழும் நாம், பாரம்பரியத்தையும், முன்னோர் பின்பற்றிய வழிபாட்டு நெறிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டும்.
நமது கலாசாரமோ ஒழுக்கத்தை பின்பற்றுவது.அதை தகர்த்தெறியும் விதமாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.