பதிவு செய்த நாள்
20
அக்
2018
05:10
தமிழகத்தின் ’மகா’ லிங்கத்திற்கு நடக்கும் ’மெகா’ அன்னாபிஷேகத்தை கண்குளிர காண ஆசையா... அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள். தென்னாடுடைய சிவனுக்கு தென்திசையில் ஒரு கயிலாயம் அமைக்க எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமே.... தஞ்சை பெரிய கோயில் பாணியில் இங்கும் பிரம்மிக்கும் விதத்தில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டினான் ராஜேந்திரச்சோழன்.
தஞ்சையிலுள்ள லிங்கம் 12.5 அடி உயரம், 55 அடி சுற்றளவு கொண்டது. அதை விட சற்று கூடுதலாக 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லால் ஆன சிவலிங்கத்தை இங்கு நிறுவினான். புனிதமான கங்கை பாயும் காசிதேசத்தின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். பொற்குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தினான். இதனால் இத்தலம் ’கங்கை கொண்ட சோழபுரம்’ என பெயர் பெற்றது.
கருவறையில் இருபுறமும் ஆறடி உயரத்தில் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறை குளிர்ச்சியாக இருக்கும் விதத்தில் சந்திரகாந்தக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய
தனி சன்னதியில் 9.5 அடி உயரத்தில் பெரியநாயகி அம்மன் காட்சியளிக்கிறாள். இங்குள்ள தீர்த்தம் சிங்க வடிவில் உள்ளதால் ’சிம்மக்கிணறு’ எனப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், பிரம்மா, திருமால், சரஸ்வதி, சண்டேஸ்வர அனுக்கிரக மூர்த்தி, பைரவர் சிற்பங்கள் உள்ளன.
இக்கோயிலில் அக்.24ல் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிேஷகம் நடக்கிறது. 25 சிவாச்சாரியார்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 100 மூடை அரிசியாலான அன்னத்தால் அபிஷேகம் செய்வர். மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனையும், அதன்பின் அதிரசம், எள்ளுருண்டை, தேன்குழல், முறுக்கு கொண்டு சிவலிங்கத்தை அலங்கரிப்பர். இரவு 1:00 மணி வரை வத்தல்குழம்புடன் அபிஷேக அன்னம் பிரசாதமாக வழங்கப்படும்.