ஹாவேரி மாவட்டம், பல அரச வம்சத்தினரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த மாவட்டம். கதம்பர் முதல் மைசூரு அரச குடும்பம் வரை, பல்வேறு அரசர்களின் ஆட்சி காலத்து அடையாளங்களை இம்மாவட்டத்தில் காணலாம். இப்பகுதியை ஆண்ட கல்யாண சாளுக்கியர்கள், பல்வேறு கோவில்களை கட்டியுள்ளனர். அவற்றில் ஒன்று முக்தேஸ்வரர் கோவில்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகாவில் உள்ள சவுடய்யதானபுரா கிராமத்தில் தான் முக்தேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில், கல்யாண சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது. கலைநயமிக்க சிற்பங்களுடன் பக்தர்களை மட்டுமின்றி, சுற்றுலா பயணியரையும், கவர்ந்திழுக்கும் கோவில் இது. சவுடய்யதானபுரா கிராமம், 12ம் நுாற்றாண்டில் சரணர்களில் ஒருவரான அம்பிகர சவுடய்யா பிறந்த இடம்.
அம்பிகர சவுடய்யா, இந்த கிராமத்தை குத்தலா மன்னரின் குருவாக இருந்த சிவதேவமுனிக்கு தானமாக வழங்கியதால், இக்கிராமத்துக்கு சவுடய்யதானபுரா என்ற, பெயர் ஏற்பட்டது. வியக்க வைக்கும் அழகான கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம் இக்கோவில். கிழக்கு முகமாக கட்டப்பட்டுள்ளது. கலை நுணுக்கங்களை இங்கு காணலாம். கோவிலின் உட்புறம் உள்ள கர்ப்ப கிரகம், கலை சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் உள்ளன. ஒரு மண்டபத்தில் மகிஷாசுர மர்தினி, மற்றொன்றில் விநாயகர் சிலைகள் உள்ளன. கோவிலின் உட்புறம் பார்வதி, சூரியனின் சிலைகள் உள்ளன.
கோவிலின் மேற்பகுதியில் சர்ப்ப கன்னிகை, விநாயகர், சூர்யன், வீரபத்ரர் சிலைகள் உள்ளன. கோவில் வளாகத்தில் கோமுனேஸ்வரா, மல்லிகார்ஜுனா, சிவன், வீரபத்ரா, காளி சன்னிதிகள் உள்ளன. துங்கபத்ரா ஆற்றங்கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் அழகை காண, இரண்டு கண்கள் போதாது. கோவில் வளாகத்தில் உள்ள பூங்காக்கள், கோவிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. இங்கு குடிகொண்டுள்ள முக்தேஸ்வரரை தரிசித்தால், பாவங்கள் போகும். முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் கலையழகு, இயற்கை காட்சிகளை காண, வெளிநாட்டவர் அதிகம் வருகின்றனர். ஹாவேரிக்கு வருவோர், முக்தேஸ்வரரை தரிசிக்க மறக்கக்கூடாது. @subboxhd@ராணி பென்னுாரிலிருந்து 35 கி.மீ., துாரம் தான்@@subboxhd@@ பெங்களூரில் இருந்து, 335 கி.மீ., மங்களூரில் இருந்து, 305 கி.மீ., மைசூரில் இருந்து, 392 கி.மீ., தொலைவில் ஹாவேரி உள்ளது. ஹாவேரியில் இருந்து, 35 கி.மீ., தொலைவில், ராணி பென்னுார் உள்ளது. அங்கிருந்து, 35 கி.மீ., தொலைவில் முக்தேஸ்வரர் கோவில் உள்ளது.
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, ராணி பென்னுாருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதிகளும் உள்ளன. ராணி பென்னுாரில் இருந்து, கோவிலுக்கு செல்ல வாடகை வாகனங்கள் உள்ளன.
தரிசன நேரம்: அதிகாலை 5:00 மணி முதல், இரவு 7;30 மணி வரை. கட்டணம் எதுவும் இல்லை.