பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
விழுப்புரம் :கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் குளத்தை சீரமைத்து அழகுபடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் கோவில் உள்ளது. இதன் எதிரே கோவிலுக்குச் சொந்தமான பெரிய குளம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. இந்த குளத்தைச் சுற்றிலும் கருங்கல் படிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
மையத்தில் அமைந்துள்ள மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று நீண்ட காலமாக அழகுடன் காட்சியளித்து வந்தது. தற்போது ஐந்து அடி அளவில் தண்ணீர் நிரம்பி. பாசி படிந்து ளம் வீணாகி கிடக்கிறது. குளத்தைச் சுற்றிலும் முள்செடிகள், கொடிகள் படர்ந்துள்ளது. குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், குளத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சேர்ந்தும், குளக்கரையில் பலர் சூதாட்டம் ஆடியும், இரவு நேரங்களில் மது அருந்தியும் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்த குளத்திற்கு மழைக்காலம் தோறும் தொடர்ந்தனூர் ஏரியில் இருந்து வரும் நீர் வரத்து வாய்க்கால் மூலம் குயிலான்குட்டை, மாரியம்மன் கோவில் குட்டைகளுக்கு வந்து மழை நீர் சேகரமாகி வருகிறது. இதற்கான நீர் வரத்து வாய்க்கால் வழியில் அடைபட்டு கிடக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்தும், முழுமையாக செய்யப்படாமல் ஆங்காங்கே வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது. இதனால் முழு அளவில் மழை நீர் வராததால், குளத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளது. கோலியனூர் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரசித்தி பெற்ற கோவில் குளத்தினை பழமை மாறாமல் அழகுபடுத்திட கோவில் நிர்வாகமும், ஊராட்சி தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனருகே அமைந்துள்ள கோலியனூர் ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கோவில் குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்க வழிவகை செய்ய வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் குளம் சீரமைப்பதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றுப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.