பதிவு செய்த நாள்
22
அக்
2018
12:10
(சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக அறிவுரைகள்)
நமது ஆன்மீக அஸ்திவாரம் பழுதுபடவில்லை. வெளிநாட்டவர் இந்தியா மீது பன்முறை படையெடுத்து வந்து சுழல்காற்றைப்போல் அதைச் சூறையாடிய போதிலும், பல நூற்றாண்டுகளாய், நாம் செய்த பாராமுகமும் இதர தேசத்தவர் இழைத்த அவமானமும், நமது மாண்பையும், மகிமையையும் மங்கலடையச் செய்த போதிலும், அதைத் தாங்கியிருந்த அனேக உன்னதத் தம்பங்களும் அழகிய மண்டபங்களும், வேலைப்பாட்டில் இணையற்ற மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் பல ஆண்டுகளாய் நாட்டை அழித்த பெருவெள்ளம் பெருக்கிலே அடித்துக்கொண்டு போய்விட்ட போதிலும், அதன் மையமானது சிறிதும் பழுதற்றதாய் விளங்குகிறது. ஈஸ்வரமகிமையையும், ஜீவ காருண்யத்தையும் பிரதிபலிக்கும் சித்தாந்தமாகிய அற்புத ஞாபகத்தம்பம் ............. கட்டப்பெற்ற ஆன்மீக அடிவாரமானது அசைவின்றியும் என்றும்போல் வலிமை பொருந்தியும் நிற்கிறது.
2) ஞானம்:
பிற நாடுகளில் பரவுதற்கு முன் அதற்கு உறைவிடமாய் இருந்தது. இத்தேசமே, இங்கன்றோ இமயமலை எப்பொழுதும் பனியால் மூடப்பட்டதாகி விண்ணுலகத்து இரகசியங்களை அறியப்புகுவது போல் படிப்படியாய் உயர்ந்து ஆகாயத்தை அளாவுகின்றது. இங்கன்றோ ஞானிகற்களில் சிறந்தவர் வாழ்ந்தனர். மனிதன் எத்தகையவன், பிரபஞ்சம் எத்தகையது என்ற விசாரங்கள் முதன் முதல் நிகழ்ந்தது இங்கல்லவா? ஆன்மா அழிவற்றது. நியந்தாவாகிய கடவுள் ஒருவர் உளர். ஜெகத்திலும் ஜீவனிலும் நிறைந்த கடவுள் அவரே என்ற முடிவுகள் ஆராய்ச்சியும் எட்டக்கூடிய தூரம் வரையில் எட்டினதும் இங்குதானே. இங்கிருந்தன்றோ தத்துவஞானம் கடலினின்றும் எழும் அலைகளைப் போல் அன்னிய நாடுகளுக்குப் பரவிற்று. இனிமேலும் இங்கிருந்துதான் அந்த ஞானம் தற்காலத்திலே மெலிந்து கிடக்கும் தேசங்களுக்குச் சென்று அத்தேசத்தவர்க்கு வலிமையூட்ட வேண்டும்.
ஓ இந்தியாவே!
சீதை, சாவித்திரி முதலிய கற்பிற் சிறந்த உத்தமிகளை மறவாதே! உனது பரதேவதை யோகிகளிலும் உயர்ந்த யோகியாகிய உமாபதி சங்கரன் என்பதை மறவாதே! உனது திருமணமும் உனது செல்வமும் உன் வாழ்வும் உனது இந்திரிய போகத்திற்கு அல்ல என்பதையும் மறவாதே! உனது ஜனசமூகம் மஹாமாயையின் சாயை மாத்திரமே! தாழ்ந்த சாதியானும், அறிவிலியும், ஏழையும் உனது இரத்ததிற் சேர்ந்தவனே நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரனே என்று சொல். கந்தைத்துணி உடுத்தி, உரத்த குரல் எடுத்து ""இந்தியர்களே என் சகோரரர்கள், இந்தியர்களே என் உயிர், இந்தியாவின் தேவிகளே எனக்குப் பரசெத்வம், இந்தியாவின் ஜனசமூகமே நான் பிறந்து வளர்ந்த தொட்டில் என் யௌவனத்தின் நந்தவனம் என் மூப்பின் தபோவனம் என்று பெருமையுடன் கூறு. பகவானே! ஜெகன் மாதாவே! எனக்கு ஆண்மை அருள்வாய், என் பேடித்தனத்தை நீக்கி, பலவீனத்தைப் போக்கி என்னை ஆண்மகன் ஆக்கு! என்று அல்லும் பகலும் பிரார்த்தனை செய்.