பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
சென்னை, மஹா புஷ்கரம் விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில், 23 லட்சம் பேர் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றில், அக்., 11 முதல், 23ம் தேதி வரை, மஹா புஷ்கரம் விழா நடைபெற்றது.
விழா நடந்த, 13 நாட்களிலும், புனித நீராடுதல் மற்றும் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிர பரணி ஆற்றில், 60 படித்துறைகள் தேர்வு செய்யப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு படித்துறையும் தேர்வு செய்யப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட, 23 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர். பாதுகாப்பு பணியில், 6,828 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.படித்துறைகளில், மீட்பு வாகனங்கள், பைபர் படகுகள், பேரிடர் மீட்பு உபகரணங்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஒவ்வொரு படித்துறையிலும், புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.மஹா புஷ்கரம் விழாவில், காணாமல் போன, 17 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும், நான்கு மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல், மஹா புஷ்கரம் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வாயிலாக பாராட்டு தெரிவித்து உள்ளார்.