ராமநாதபுரம் மாவட்ட கோயில்கள்: ரூ.1.40 கோடியில் சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2012 11:02
ராமநாதபுரம்:தமிழக அரசின் 13 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு கோயில்கள் ரூ.1.40 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி மண்டபம், தீர்த்த மண்டபம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா நிதியில் திறந்தவெளி முதல் பிரகாரம் மேம்பாட்டு பணிகள் ஐந்து லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதியில் கருங்கல் மண்டபம் கட்டும்பணிக்கு 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் மார்ச் மாதத்தில் துவக்கப்பட உள்ளன. மேலும் உத்தரகோசமங்கையில் மழை காலங்களில், கோயிலின் உள்பகுதியில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதை "தினமலர் நாளிதழ் பலமுறை சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக தண்ணீரை வெளியேற்றும் வழிகளை ஆராயப்பட்டது. ஆறு அடி ஆழத்தில் மன்னர்கள் காலத்தில் கோயிலில் கட்டப்பட்ட வடிகாலை கண்டு பிடித்து அதன் வழியாக அக்னி தீர்த்தத்தில் சேகரிக்கப்படும் மழை நீர், பிரம்ம தீர்த்தத்தில் விடுவதற்கான பணிகளை 5 லட்சத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் 25 லட்சத்திலும், நயினார்கோயில் நாகநாதசுவாமி கோயில் 40 லட்சத்திலும் புனரமைப்பு பணிகள் மார்ச்சில் துவங்க உள்ளன.