பதிவு செய்த நாள்
11
பிப்
2012
11:02
பழநி;பழநி தைப்பூச விழா நிறைவாக, நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. விழாவின் ஆறாம் நாளில் திருக்கல்யாணம், ஏழாம் நாள் தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று, தெப்ப உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் கோயில் அருகே தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திற்கு, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். சுப்ரமணியர் யாகம், அபிஷேகம் நடந்தது. சுவாமிகள் தேரில் எழுந்தருளி, தெப்பத்தை வலம் வந்தனர். வாண வேடிக்கை நடந்தது. சுவாமிகள் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பிறகு, ரதவீதிகளில் பலிபீட பூஜை நடந்தது. இரவு 11.30 மணிக்குமேல் கொடி இறக்கப்பட்டது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த பிரதான கும்பம், மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு, ராக்கால பூஜை நடந்தது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையற்கரசி ஏற்பாடுகளை செய்தனர்.