பதிவு செய்த நாள்
05
நவ
2018
11:11
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், கொள்ளையர்கள் புகுந்து, மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.உத்திரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி, மங்களநாதசுவாமி கோவிலில், மரகத நடராஜர் சன்னதியில் 6.6 அடி உயர மரகத சிலையும், 4 அங்குல ஸ்படிக லிங்க சிலையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கொள்ளை முயற்சி: மரகத நடராஜர் சிலை, சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படுவதால், தினமும் ஸ்படிக லிங்கத்திற்கு மட்டும், மாலை, 5:30 மணிக்கு பூஜை செய்யப்படும். நேற்று முன் தினம் இரவு, 8:30 மணிக்கு, அர்ச்சகர் சுந்தர், பூஜையை முடித்து, கதவை பூட்டி, இரு சாவிகளில் ஒன்றை, கோவில் நிர்வாகத்திடம் அளித்து, மற்றொரு சாவியை எடுத்து சென்றார். வெளி பிரகார கிரில் கேட் பகுதியில், காவலர் செல்லமுத்து படுத்திருந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு, கோவிலுக்குள் வந்த கொள்ளையர் இருவர், மரகத நடராஜர் சன்னிதியில் உள்ள சுவர் ஏறி குதித்து, உள்ளே வந்துள்ளனர். அங்கிருந்த காவலர் செல்லமுத்துவிடம், மூலஸ்தான கதவின் சாவியை கேட்டு, தலையில் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காவலர் செல்லமுத்து, கீழே விழுந்துள்ளார்.
ஒலி எழுப்பியது: கொள்ளையர்கள், மெயின் பிரகாரத்தில் உள்ள கதவை உடைக்க முற்பட்டனர். அலாரம் ஒலித்தது. இதனால், அலாரத்திற்கு செல்லும் ஒரு ஒயரை துண்டித்துள்ளனர். தொடர்ந்து அடுத்த அலாரம் ஒலிக்கவே, கோவில் பிரகாரத்தின் சுவர் ஏறி குதித்து, வெளி பிரகார சுவரில் ஏறி, மரம் வழியாக வெளியே குதித்து, தப்பி ஓடினர். மற்ற சன்னதிகளில் காவலுக்கு இருந்த, பாஸ்கர், ராமமூர்த்தி, சிவனடியார் பாலாஜி ஆகியோர் வந்து பார்த்த போது, இரும்பு கிரில் கேட் பூட்டியிருந்தது. சன்னதி மூலஸ்தானம் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. காவலர் செல்லமுத்து, தலையில் ரத்த காயத்துடன் எழ முடியாத நிலையில் கிடந்தார். காவலரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.டி.ஐ.ஜி., ஆய்வுசம்பவ இடத்தை, டி.ஐ.ஜி., காமினி ஆய்வு செய்தார். கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் தலைமையில் வந்த போலீசார், கொள்ளையர்கள் பயன்படுத்தி பழைய கைலி மற்றும் தடயங்களை, கோவில் வளாகத்தில் சேகரித்தனர். கோவில் சன்னதியில் இருந்த, சிசிடிவி கேமராவில், கதவை உடைக்க முயன்ற ஒரு கொள்ளையனின் படம் மட்டும் பதிவாகியுள்ளது. அதை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உத்திரகோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.