பதிவு செய்த நாள்
05
நவ
2018
11:11
திருப்பதி: திருமலையில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களால், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 26 ஆயிரம் லட்டுகள், முறைகேடாக வெளியே எடுத்து செல்லப்பட்டு, கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள, திருமலை ஏழுமலையான் கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்கிறது.லட்டு விற்பனையின் மூலம், கோவில் நிர்வாகத்துக்கு, ஆண்டுதோறும், கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த லட்டு விற்பனையில், முறைகேடு நடக்காமல் தடுப்பதற்காக, பக்தர்களுக்கு, டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன், ஸ்கேன் செய்யப்பட்ட பின், லட்டு வழங்கப்படுகிறது.
இங்கு, சமீபத்தில், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்தபின், கோவில் நிர்வாகம் கணக்கு பார்த்தபோது, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான லட்டுகள் காணாமல் போனது தெரிய வந்தது.இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழல் தடுப்பு பிரிவினர், விசாரணை நடத்தினர். பிரம்மோற்சவம் நடந்த நேரத்தில், லட்டு வாங்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், வேறு வழியின்றி, டோக்கனை ஸ்கேன் செய்யாமல், லட்டுகளை வழங்க, கோவில் நிர்வாகம், பல நாட்கள் அனுமதி அளித்தது. இந்ந சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அங்கு பணியில் இருந்த, நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர், ஸ்கேன் செய்யப்படாத டோக்கன்களை எடுத்துச் சென்று, அதை மீண்டும் பயன்படுத்தி, லட்டுகளை திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த முறைகேட்டில், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 26 ஆயிரம் லட்டுகள், கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக, திருப்பதி தேவஸ்தானம், போலீசில் புகார் செய்தது. போலீஸ் விசாரணை யில் லட்டு விற்பனையில் ஈடுபட்ட, 17 பேர், இந்த முறைகேட்டில் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.