பதிவு செய்த நாள்
05
நவ
2018
11:11
தஞ்சாவூர்:கலாசாரத்தை விரும்பக்கூடிய தென் மாநில பெண்கள், சபரிமலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள், என, துணை ஜனாதிபதியின் மகள், தீபா தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று (நவம், 4ல்), துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா, அவரது மகள் தீபா, பேரன், பேத்தி மற்றும் உறவினர்கள் வந்தனர். சுவாமி தரிசனம் செய்த அவர்கள், அங்குள்ள ஓவியங்கள், கட்டட அமைப்பு உள்ளிட்டவற்றை, இரண்டு மணி நேரம் கண்டு ரசித்தனர்.தீபா, நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சை பெரிய கோவிலின் கட்டட கலை அமைப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை; அவ்வளவு அற்புதமாக உள்ளது.இன்று நமக்கு எது தேவைப்பட்டாலும், கூகுள் உள்ளிட்ட இணையதளத்தில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், எந்தவித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அந்த காலத்தில், இவ்வளவு உயரமான கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றால், இந்திய நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நம் நாட்டு வரலாற்று சின்னங்களை, நாம் பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை விரும்பக் கூடிய தென் மாநில பெண்கள், சபரிமலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். சபரிமலைக்கு நான் செல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.