பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 5.00 - 5.30மணி.
எல்லாரும் புத்தாடை அணிந்து, இனிப்பு, பலகாரங்கள் சுவைத்து, எங்கு பார்த்தாலும் தீபங்கள் சுடர் விடும் மங்களகரமான நேரத்தில், குபேர பூஜை செய்தால், இரட்டிப்பான பலன்களை தரும். மேலும், சிவபெருமான், தன்னிடமிருந்த நிதி குவியல்களை குபேரனிடம் கொடுத்து, நிதிகளின் தலைவனாக பதவி ஏற்க செய்தது, தீபாவளி திருநாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி அன்று மாலை வேளையில், குபேர பூஜை செய்வர். மனை பலகையில், தாமரை கோலமிட்டு, வாழை இலையில் பச்சரிசியை போட்டு, அதன் மேல் சிவப்பு நிற பட்டு துணி கட்டிய கலசத்தை வைக்கவும். கலசத்தின் இரு பக்கமும், சுபம் - லாபம் என எழுதி, வலம்புரி சங்குகள் இருந்தால், அதில் நீர் ஊற்றி வைக்கவும். பின், மலர், சந்தனம், குங்குமம் மாவிலை கொத்தால் கலசத்தை அலங்கரியுங்கள்.
கலசத்தை சுற்றி, நவரத்தினங்கள் மற்றும் நவதானியங்களை தொன்னையில் இட்டு வரிசையாக வைக்கவும். பூஜை பொருட்களுடன் பிரசாதமாக, லட்டு, தேங்காய், பழம் மற்றும் தாம்பூலம் வைத்து, முதலில் விநாயகரை அருகம்புல்லால், ஓம் கணபதியே நம... என்று, 11 முறை கூறி வழிபடுங்கள். பின், அன்றைய திதி, நாள், நட்சத்திரம் கூறி, குபேர பூஜாம் கரிஷ்யே என, கூறுங்கள். பிறகு, ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாைஸ நம... என்று சுற்றிலும் உள்ள நவதானியங்களில் மலர் இடவும். மலர் மற்றும் மஞ்சள் அரிசியை கையில் எடுத்து, கலச ரூபே ஓம் ஸ்வாகதம் ஸ்வாகதம் லக்ஷ்மி குபேராய நம... என்று மூன்று முறை சொல்லி, கலசத்தின் மேல் போட்டு, மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
அடுத்து, சிவபெருமானின் தோழனாக விளங்கும் தாங்கள் எனக்கு, பொன், பொருள் அருள வேண்டுகிறேன்... என்று கூறி, புஷ்பாஞ்சலி செய்து, விழுந்து வணங்கி, மங்கள ஆரத்தி எடுங்கள்.
மூன்று பெண்களை அமர வைத்து, தாம்பூலம் மற்றும் பிரசாதங்களை கொடுக்கவும். அவர்கள் சென்றதும், குபேரனது பிரசாதங்களை எடுத்து வைத்து, கலச நீரை, வீட்டின் எல்லா பகுதிகளிலும் தெளிக்கலாம். தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ - விஷ்ணு கோவில்களில், லக்ஷ்மி தேவியை தரிசிக்கலாம்.
தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரை, குபேர காலம் தான். அந்த சமயத்திலும் குபேர வழிபாடு செய்யலாம்.