அய்யாவாடி பிரத்தியங்கிரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2018 11:11
மயிலாடுதுறை: தீபாவளியொட்டிய அமாவாசை தினமான நேற்று, அய்யாவாடி மகா பிரத்தியங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோவில் அமைந்துள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோவிலில், ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றலால், நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி வரும் அமாவாசை அன்று மட்டும், மிளகாய் வற்றலுக்கு பதிலாக இனிப்புகளை குண்டத்தில் இட்டு யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் அம்பாளை சரணடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளிக்கு அடுத்த நாளான நேற்று காலை அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருள செய்து, ஐந்து வகையான மலர்களால் பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி, யாக குண்டத்தில் பூந்தி, இனிப்பு முருக்கு மற்றும் தேனில் நனைத்த வடை ஆகியவற்றை சேர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.