பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழாவில், பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சென்னிமலையில், காங்கேயம் பிரதான சாலையில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாதம் தோறும் பொங்கல் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கம்பத்துக்கு வழிபாடு, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் வெகு விமரிசையாக நேற்று (நவம்.,8ல்) நடந்தது. காலை முதலே, கோவில் வளாகத்தில், பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து, வழிபடத் தொடங்கினர். ஆடு, கோழி பலியிட்டும் மற்றும் தலைமுடி காணிக்கை செலுத்தியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டத்துடன், விழா இன்று (நவம். 9ல்)நிறைவு பெறுகிறது.