பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
ஊட்டி :மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. சோலூர் மலை அடிவாரத்தில் உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுடன் மசினியம்மன், சிக்கம்மன், கரியபெட்டன் ஐயன் வீற்றிருந்து, அருள் பாலித்து வருகின்றனர். மசினகுடி, மாயார், சிறியூர், ஆனைக்கட்டி, சொக்கநல்லி, சோலூர் போன்ற கிராம மக்களின் குலதெய்வமாக உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் நடக்கும் தேரோட்டத்தில், பொக்கா அம்மன், மசினி அம்மன் சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர், ஒரு சேர பக்தர்களுக்கு அருள்பாலிப்பது ஐதீகமாக உள்ளது. நடப்பாண்டு திருவிழா, வரும் 24ம் தேதி மாலை 6.00 மணியளவில், அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 25ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம், கங்கை பூஜை நடக்கிறது. 27ம் தேதி இரவு 10.00 மணியளவில், மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் துவங்குகிறது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் ஆறுமுகம், சோலூர் பேரூராட்சி தலைவர் சித்தன் உட்பட பலர் பங்கேற்று வடம் பிடிக்கின்றனர். 28ம் தேதி மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சோலூர் கிராம மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.