பதிவு செய்த நாள்
12
நவ
2018
01:11
ரிஷிவந்தியம்:திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் பராமரிப்பின்றி வீணாகி வருவதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் கிருத யுகத்தில் கருங்கற்கலால் கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலை விட பழமை வாய்ந்த இக்கோவிலில் நவபாஷனத் தால் உருவாக்கப்பட்ட மிக பெரிய அளவிலான அரங்கநாத பெருமாள் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய மூன்றிற்கும் புண்ணிய ஸ்தலமாக இக் கோவில் உள்ளது. புஷ்கரணி தீர்த்தமாக அளிக்கப்படுகிறது. கோவில் வளாகத்தினுள் மிக பெரிய அளவிலான தானியக்களஞ்சியம் உள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோவிலை சுற்றி கருங்கல், சுண்ணாம்புக்கல் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள சுற்று சுவரில் பல இடங்களில் செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்திருப்பதுடன், சுவர் ஒரு புறமாக சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் தானியக் களஞ்சியமும் சேதமடைந்துள்ளது.கடந்த 9 ஆண்டு களுக்கு முன் கோவிலுக்கு முன் புறம் குளம் தோண்டப்பட்டு, சுற்று சுவர் அமைக்கும் பணி தொடங்கியது.
சுற்றுசுவர் கட்டுவதில் அறநிலையத்துறையினர் மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது குளத்தில் ஒரு புறத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் குளத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சத்திற் குள்ளாகினர். அதை தடுக்க தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். தொடர்ந்து சுற்றுசுவர் கட்டும் பணி தொடங்கி, இரண்டு ஆண்டிற்கு மேலாகியும் பணிகள் முழுமை பெறவில்லை. மழைக்காலங்களில் இப்பகுதியில் அதிகளவு மண் சரிவு ஏற்பட்டால் கோவில் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலை நீடிக்கிறது.குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை பார்த்து முகம் சுழித்து செல்கின்றனர்.இக்கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்க வாசல் திறப்பு, புரட்டாசி மாதம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளின் போது 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தை துவக்கி வருமானத்தை ஈட்டுவதில் ஆர்வம் காட்டும் அறநிலையத் துறையினர், கோவில் பராமரிப்பில் அக்கறையின்றி செயல்படுவதால் தானியக்களஞ்சியம், சுற்றுசுவர், குளம் சேதமடைந்து வருகிறது.
காற்றில் பறக்கும் வாக்குறுதிரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும், திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலையும் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா மைய அலுவலர் சின்னசாமி தலைமையிலான அதிகாரிகள் இக்கோவிலை பார்வையிட்டு பக்தர்களின் வசதிக்கேற்ப மண்டபம், பைக் ஷெட், பூங்கா உள்ளிட்டவைகளை புதிதாக கட்டி விரைவில் சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக் கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஓராண்டாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.