பதிவு செய்த நாள்
14
பிப்
2012
10:02
மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தகவல் மையத்திற்கு ஆங்கிலம், இந்தி உட்பட மூன்று மொழிகள் தெரிந்தவர்களை இன்னும் நியமிக்காததால், இம்மையம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டு, மூடி கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், கோயில் ஊஞ்சல் மண்டபம் அருகே தகவல் மையம் திறக்கப்பட்டது. தனியாரால் பராமரிக்கப்பட்ட இம்மையம், சில மாதங்களில் மூடப்பட்டது. கோயில் விபரங்களை அறிவதில், வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து "தினமலர்இதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 2010 டிச.,31ல் அம்மன் சன்னதி நுழைவுவாயில் அருகே தகவல் மையம் மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் நடை திறந்திருக்கும்போது, இம்மையமும் திறந்திருக்கும். பழநி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம் உட்பட 18 கோயில்களின் விபரங்கள் இங்கு அறியலாம். மீனாட்சி கோயில் பூஜைகளுக்கு முன்கூட்டியே "புக்கிங் செய்யவும், போன் மூலம் பிற கோயில் விபரங்களை அறியவும் வசதி உள்ளது. கோயில் சார்பில் பராமரிக்கப்படும் இம்மையத்தில், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி தெரிந்த ஊழியரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை நேர்முகத்தேர்வு நடக்காததால், மையம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக, கோயில் ஊழியர் ஒருவர் மாற்றுப்பணியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் அடிக்கடி கோயில் பணிக்காக வெளியில் செல்வதால், மையம் மூடி கிடக்கிறது. சுற்றுலா பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோயில் நிர்வாகத்திடம் கேட்ட போது, ""நேர்முகத்தேர்வு நடத்துவது குறித்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் கேட்டுள்ளோம். அவர் அனுமதி கொடுத்தவுடன் தகுதியான ஆள் நியமிக்கப்படுவர், என்றனர்.