பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
கோபி: ஈரோடு மாவட்டத்தில், முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா, இன்று 13 ல் கோலாகலமாக நடக்கிறது. கோபி பச்சமலை, சென்னிமலை, திண்டல் கோவில்களில் முன்னேற்பாடு தீவிரமாக நடந்தது. கோபி பச்சமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த, 8ல் துவங்கியது. அன்று முதல் முருக பக்தர்கள் நீராடி, விரதமிருந்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நிகழ்வு, இன்று 13ல் நடக்கிறது. சூரனை வதம் செய்ய, சத்திவேல் வாங்கும் நிகழ்வு, காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. அதன் பின், சூரனை வதம் செய்ய, முருக பெருமான் மற்றும் வீரபாகு மலைக்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்படுவர். சூரனை வதம் செய்யும் முன், யானை வாகனத்திலும், மயில் வாகனத்திலும் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதற்காக கோவில் பராமரிப்பில் உள்ள, தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன் மற்றும் மயில்வாகனம் ஆகிய மரச்சிலைகளுக்கு, பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. கோபி பச்சமலை ரோடு, வன்னியர் குல மாரியம்மன் கோவில், மேட்டுவலவு, புதுப்பாளையம் ஆகிய மூன்று இடங்களில், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
* சென்னிமலை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா, இன்று 13ல் கோலா கலமாக நடக்கிறது. இதையொட்டி, மலை கோவிலில், 11:00 மணிக்கு யாகபூஜை, உற்சவர், மூலவர்கள் சிலைகளுக்கு அபிஷேகம் நடக்கும். மாலை, 5:00 மணிக்கு மேல், உற்சவர் சிலைகள், படி வழியாக, மலை அடிவாரத்துக்கு கொண்டு வரப்படும். அங்கு சிறப்பு பூஜைக்குப் பின், இரவு, 8:00 மணியளவில், நான்கு ராஜ வீதிகளில், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
* ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நடக்கிறது. பவானி, சங்கமேஸ்வரர் கோவிலிலும், சம்ஹாரம் நடக்கிறது.