பதிவு செய்த நாள்
14
பிப்
2012
11:02
ஏலூரு : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் வழங்கிய தங்க ஆபரணங்கள், மாயமான சம்பவம் துரதிருஷ்டமானது என்று விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்த சுவாமி வேதனை தெரிவித்துள்ளார். கிருஷ்ண தேவராயரால், ஏழுமலையானுக்கு வழங்கப்பட்ட ஆபரணங்கள் மாயமானது குறித்து, மாநில அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில், அம்பிகை தாயார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஸ்வரூபானந்த சுவாமி நிருபர்களிடம் பேசுகையில் மேலும் கூறியதாவது: திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் ஆர்.டி.சி., பஸ்களில் பக்திப் பாடல்களை மட்டுமே ஒலிக்கச் செய்ய வேண்டும். அறநிலையத் துறையினர், கோவில்களில் ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்து, கோவில்களின் பவித்ரத்தன்மை, தூய்மையை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். பிரசாதங்கள் தயார் செய்வதையும், பவித்ரமாகச் செய்வது இல்லை. கும்பாபிஷேகங்களை மடாதிபதிகள் நடத்தாமல், மந்திரிகள் நடத்துவது தவறான செயல். கோவில்களுக்கு பக்தர்கள் பிரார்த்தனையாக வழங்கும் ஆபரணங்களை, அதிகாரிகள் கண்டிப்பாக பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.